நட்சத்திரங்கள் பொறுக்கி...
நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் கனவு தேசமிது.
வேறெங்குமில்லாத அளவில் இங்கு மட்டும் இத்தனை நட்சத்திரங்கள்.
தொலைந்து போன கனவுகளை இட்டு நிரப்ப எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவை.
உடைந்துபோன ஆன்மாக்களை சேர்த்து ஒட்டவும் எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவைப்படுகிறது.
சிறு வயது சிராய்ப்பு காயங்களுக்கு எச்சில் கவசம் அணிவித்த எங்களின் வளர் பருவ பெருங் காயங்களுக்கு நட்சத்திரங்கள்தான் கவசமாகிறது...
தீராப்பெருங்காயமென வன்புணர்வு வளர்ந்தபோதும் உதிரம் துடைக்கவும் கோபம் விழுங்கவும் எங்களுக்கு நட்சத்திரங்கள் நிறைய தேவை.
வன்புணர்வு உடலில் மட்டுமா என்ன? மனக்காயங்களுக்கும் நாங்கள் நட்சத்திரங்களைத்தான் மருந்தாக விழுங்குகிறோம்.
தன்னிலை மறந்து பலர் கொக்கரிக்க சிலர் தலைகவிழ்ந்து நிற்க நாங்கள் கையறு நிலையில் நிற்கையில் எங்கிருந்தோ நீண்ட கரத்திலிருந்து எங்கள் மானம் காக்க பெருகியோடிய ஆடையாறு கூட முழுக்க முழுக்க நட்சத்திரங்களால் நெய்யப்பட்டவைதான்.
விடாது துரத்தும் வாழ்வின் துயரங்களில் இருந்து ஒடுங்கி நாங்கள் சற்றே இளைப்பாறவும் முடங்கிக்கொள்ளவும் எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவை.
அரிதினும் அரிதாய் வான் கூரையிலிருந்து சரிந்து விழும் ஒற்றை நட்சத்திரங்களென்னவோ நாங்கள் எவ்வளவு தேடியும் தென்படுவதில்லை விழுந்தபின்.
நட்சத்திரங்கள் ஜொலிக்கும்
கனவு தேசமிது.
எங்களது தேவைகளனைத்தையும், சில நேரங்களில் எங்கள் காய்ந்த வயிறையும் உலர்ந்த உதடுகளையும்கூட தொட்டு நிரப்பும் சுடரொளி தருவதற்காய் பேரிறை ஒன்று எங்கள் வானை எப்போதும் போல இட்டு நிரப்பிக்கொண்டிருக்கிறது நட்சத்திரங்களால், வேறெங்குமில்லாத அளவுக்கு.
எங்கள் கனவு தேசத்தில் கனவுகளை தொலைத்துவிட்டு, இட்டு நிரப்ப இப்போதெல்லாம் எவ்வளவு தேடினாலும் நட்சத்திரங்கள் தென்படுவதில்லை ஆலைப்புகை மூடிய எங்கள் ஆகாயத்தில்.
நட்சத்திரங்களையும் களவு கொடுத்துவிட்டு பரிதவிக்கும் எங்களுக்கு இந்தக்கவிதை ஒன்று மட்டுமே ஆறுதல் நட்சத்திரம்.
- அக்ஷமாலா என்கிற அருந்ததி.
அருந்ததியின் இந்தப்பாடல், நட்சத்திரங்கள் மூடிய நம் காதுகளில் கேட்குமா?
அருந்ததி யாரென்று கேட்கிறீர்களா?!
அம்மி மிதித்து நாம் தேடும் அருந்ததியையே அவளுக்கு ஒளி கிட்ட வசிஷ்ட நட்சத்திரத்தை தேடவைத்தது உலகாளும் நமது குலம் மனித குலம்...
அவளும் பெண்தானே!
"
ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணேன்ற ஓரினமோ
இது யார் பாவம்?
ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ
இது யார் சாபம்?
நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனதே....
"
கருத்துகள்
கருத்துரையிடுக