முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாரீசா!!!


மாயமானும் சீதா ராமனும்!!


கானகத்தில் ராமன் சீதையுடன் வசிக்கிறான்.


மொபைல் போன் கம்பெனிக்காரர்கள் மெல்ல மெல்ல கானகவாசிகளை பெருநுகர்வு ஆசை காட்டி காட்டினுள்ளும் வணிகம் வளர்த்த காலம் அது.


ஏற்கனவே மனிதர்கள் குறைவாக இருந்த நம் கானகங்களில் மெல்ல மெல்ல வணிக மனிதர்கள் நடமாட்டம் அதிகரித்தது. அவர்கள் வந்து திரும்பும்போதெல்லாம் கானகவாசிகளும் அவர்களோடு நகர்நோக்கி புலம் பெயரத்தொடங்கினர்.


ராமனும் சீதையும் லக்‌ஷ்மணனின் பாதுகாப்பு ரேகைக்குள் வாழ்ந்த இடம் அடர்வனம். 


அவ்வப்போது அவர்களுக்கு தேவையான விளைபொருட்களை கொணர்ந்து தரும் வனவாசிகளை வணிகம் தொட்டதும் அவர்களை பின்தொடர்ந்து வணிகம் அங்கும் நுழைந்தது.


அவ்வளவு தூரம் பயணித்த வணிகத்தினால் லக்ஷ்மண ரேகையை தாண்டி அந்த வீட்டின் நிழலைக்கூட தொடமுடியவில்லை...


காத்திருந்த வணிகத்தை அவ்வப்போது ராமனோ லக்‌ஷ்மணனோ கடந்து போகையில் அவர்களது சூக்‌ஷ்ம உடல் உண்டாக்கிய இனம் தெரியாத உணர்வால் அச்சம் கொண்டு வணிகம் அவர்கள் கண்களில் படாமல் ஒளிந்து, காத்திருந்தது.


சீதையோ வீடு விட்டு வெளியே வருவதே இல்லை...


வணிகம் ஒரு யுத்தி செய்தது... கானகத்துள் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றை நிறுவியது.


அந்த கோபுரத்தின் அருகே மேய்ந்துகொண்டிருந்த மான் ஒன்றின் கழுத்தில் ஒரு மொபைல் போனை கழுத்துப்பட்டையோடு சேர்த்து பொருத்திவிட்டது. அந்த மொபைலில் 24*7 பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தடையின்றி வழங்கும் ஒரு சேனலை ஆன் செய்தபின்னரே அனுப்பியது. லேட்டஸ்ட் தொழில்நுட்பம் கொண்ட அந்த மொபைலின் நிகழ்வுகளை மானின் விழித்திரையில் நேரடியாய் ஒளிபரப்பி, கூடவே அந்த மானின் உடலையே திரையாக மாற்றி உடல் முழுவதும் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் திறன் கொண்டது.


மானின் வாழ்வு நொடியில் மாறிப்போனது. தொடக்கத்தில் மொபைலில் இருந்து எழும்பிய ஒலி, ஒளியால் மிரண்டு போய் அது அங்குமிங்கும் ஓடினாலும் ஒரு பொழுதில் சோர்ந்துபோய் எதிர்ப்பதை நிறுத்தியது. மெல்ல மெல்ல பொழுதுபோக்கு ப்ரோக்ராம்களால் ஈர்க்கப்பட்டது. தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு நிகழ்ச்சிகளை பார்க்கத்தொடங்கியது.


உணவு உண்ண மறந்தது, உறங்க மறந்தது, உடல் இளைத்தது.


எதிரில் வரும் விலங்குகள் எல்லாம் மானை நிறுத்தி 'என்ன ஆச்சி? இது என்ன மாயம்?! உடல் முழுதும் எப்போதும் வெளிச்சம் ஓடுகிறதே! உடல்நலம் சரியில்லையா?' என கவலையோடு  விசாரிக்கும்போதெல்லாம் அது தனது கழுத்துப்பட்டையை பெருமையோடு காட்டி, 'இது காட்டும் காட்சிகளை நான் பார்க்கத்தொடங்கியதும் என் வாழ்வே மேன்மையாகிவிட்டது. அகில உலகமும் என் கையில் என்கிற உணர்வினால் நான் இப்போது முன்னிலும் பலமடங்கு மகிழ்வுடன் இருக்கிறேன். அப்போ நீங்க?!' என்றது.


குறுகிய காலத்திற்குள்ளாக கானக விலங்குகள் அனைத்தும் அந்த மொபைல் சர்வீஸ் ப்ரொவைடருடைய வாடிக்கையாளர்களாக மாறிப்போனது. விலங்குகள் தன் அடையாளமிழக்கத்தொடங்கவும் கானகமும் தன் சுயம் இழக்கத்தொடங்கியது.


ஆனாலும் வணிகம் அந்த குடிலை நெருங்கமுடியவில்லை.


எனவே அது ஒரு உத்தி செய்தது. அந்த மானை அழைத்தது.


"மேன்மையான அந்தப்பெண் பூப்பறிக்கும் நேரத்தில் அவரது கண்ணில் உன் மொபைல் படும் வண்ணம் துள்ளிக்குதி. கண்ணில் பட்டதும் மொபைலில் லேட்டஸ்ட்  நிகழ்ச்சி ஒன்றை ஓட விடு. அவளோ அவளது ஆட்களோ உன்னை பிடிக்க துரத்தினால் என்னிடம் ஓடி வந்து விடு. இதைமட்டும் நீ செய்தால் உனக்கு வாழ்நாள் முழுதும் டேட்டா இலவசம்!"


மகிழ்ச்சியில் துள்ளிய மான், சீதையின் கண்ணில் படும்படி இன்னும் உற்சாகமாக துள்ள, சீதையின் கவனத்தை அது கவர...


மானைப்பிடித்து தரும்படி ராமனை வேண்ட, பிடிக்கச்சென்ற ராமனின் குரலை மொபைலில் பதிவு செய்த அந்த மான், ராமனின் குரலிலேயே, 'லக்‌ஷ்மணா அபாயம்!' என மொபைல் ஸ்பீக்கரில் சர்ரவுண்ட் சவுண்ட் எஃபக்டோடு சீதையின் காதில் எட்டும் வண்ணம் அதிரவிட, அதிர்ந்த சீதையின் புலம்பலால் லக்‌ஷ்மணன் தரையில் கோடு கிழித்து 'தாண்டாதீர் பிராட்டியே!' என வேண்டுதலுடன் குரல் வந்த திசை போக...

அவனும் காணாமல் போனதால் மிகு அச்சம் கொண்டு சீதை குடிலின் உள்ளிலிருந்து லக்‌ஷ்மண ரேகை வரை துரித நடை போட... எல்லைக்கு வெளியே காத்திருந்த வணிகம் சொன்னது, "கண்டோம் சீதையை!"


சற்று நேரத்திலேயே அது சீதையிடம் லேட்டஸ்ட் மாடல் மொபைலில் லேட்டஸ்ட் பொழுதுபோக்கு நிகழ்ச்சி காட்ட, சீதை அதில் முற்றிலுமாய் மூழ்கிப்போக... ரேகை தாண்ட வணிகம் முயலும்போதெல்லாம் டேட்டா கனெக்‌ஷன் அறுந்துபோய் சீதையின் கவனம் மீள... "வேறு வழியே இல்லை!" என வணிகம் துரிதமாய் முடிவெடுத்து குடிலை தூக்கிக்கொண்டு பறக்க....


அதன் பின் நடந்தது ஒரு நெடுங்கதை!


ஜடாயுவிடம் நடந்ததை கேட்டறிந்து 

'எந்த மொபைலினால் என் பிராட்டி என்னை விட்டு பிரிந்தாளோ அந்ந மொபைல் டெக்னாலஜியை என் வாழ்நாள் முழுதும் தொடேன்!' என ராமன் சூளுரைத்து கூகுள் மேப்பையே புறம் தள்ளியதால்தான் மிக கடினமாக முயன்று சுக்ரீவன் வழி வாலி வதம் செய்து அனுமன் வழி சீதையின் சிறை-இடம் கண்டுபிடித்து அதன் பின் வானர சேனை கொண்டு கடல்பாலம் அமைத்து, சீதையை மீட்க போர் தொடுத்து, அந்த போரில் மரணத்தின் விளிம்பு வரை சென்று, 'ஐயகோ!'கூகுள் மேப் இல்லையே!!' என புலம்பியபடி மூலிகையை சர்ச் செய்யத்தெரியாமல் அனுமன் பெயர்த்து வந்த சஞ்சீவினி மலையால் உயிர் பிழைத்து, வணிகத்தை வதம் செய்யுமுன் கேட்டானாம் ஒரு கேள்வி, ஒற்றக்கேள்வி; 'ஏன் சீதையை கவர்ந்து சென்றாய்?'


ஈனக்குரலில் வணிகம் முனகிச்சொன்ன விடை என்ன தெரியுமா?


"ஒரு வீட்டை பெருநுகர்வுக்கு மாற்ற வீட்டின் தலைவியிடம் மொபைல் கொடு, லேட்டஸ்ட் டெக்னாலஜியோடு. 


ஒரு நாட்டையே பெருநுகர்வுக்கு மாற்ற அந்த நாட்டின் தலைமைக்கு இன்னும் பொழுதுபோக்கு அம்சங்கள் தருவதற்கான உன் திட்டங்களை படம் போட்டு காண்பி.

நாட்டைக்காக்கும் சக்திகள் அவரை தடுக்க முயன்றால் அவரையே கவர்ந்து சென்று வேறிடத்தில் சிறை வை! லேட்டஸ்ட் பொழுதுபோக்குக்குள் அவர் மூழ்கியபின் அவரே நாட்டு குடிமக்களிடம் அதன் மேன்மைகளை எடுத்துச்சொல்ல இலவசமாய் மொபைலும் கேபிள்களும் அமைத்துத்தருவார். பின் அவரே நேரடியாக செயல்முறை விளக்கமும் தருவார். அதன்பின் மொத்த நாடும் பொழுதுபோக்கு பெருநுகர்வில் மூழ்கிப்போகும். அதன்பின் நீ மொபைலுக்கு என்ன விலை ஏற்றினாலும், டேட்டாவுக்கு என்ன ரேட் ஏற்றினாலும் வாங்கிக்கொண்டே இருப்பார்கள், உண்ண உணவு இன்றிப்போனாலும்! அதன்பின் நீ மருந்து முதல் காப்பீடு வரை இறங்கி அடிக்கலாம், உணவு வணிகமும் செய்யலாம். கிடைக்கும் லாபத்தை வைத்து உலகெங்கும் வணிகம் பெருக்கலாம்! அதனால்தான்" 


ராமனுக்கு இந்த விடை திருப்தி தரவில்லை. எனவே மீண்டும் வினவினான், 'அப்படியானால் நீ என்னையல்லவா இலக்காக கொண்டிருக்கவேண்டும்? ஏன் சீதையை?'


உயிர் பிரியும் தருவாயிலிருந்த வணிகத்தையும் இந்த வினா புன்முறுவல் பூக்க வைத்தது.


பூத்தபின்பு வணிகம் சொன்னது, அது அர்த்தம் உள்ளது!; "நீதான் உன் இல்லத்திற்கு தலைமை என இன்றுவரை நம்புகிறாயே ராமா? உன் நம்பிக்கைக்கு அளவே இல்லையா?!! 


நீ இங்கு என்னோடு போர் புரிந்த நேரத்தில் உன் நாட்டு மக்களுக்கு கோடிக்கணக்கில் மொபைல் விற்று டேட்டாவையும் விற்றிவிட்டோமே. நாங்கள் பயன்படுத்திய உத்தி மிகச்சிறந்த உத்தி! 'உங்கள் அரசி மிக விரும்பி பயன்படுத்தும்,  தன் தலைவனை பிரிந்த துயரத்தையும் தாண்டி ஆவலோடு பயன்படுத்தும், மொபைல் எங்கள் மொபைலே, டேட்டா நெட்வொர்க் எங்கள் நெட்வொர்க்கே, பொழுதுபோக்கு நிகழ்வுகளும் நாங்கள் உருவாக்கியதே, செய்திகளும் அந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் ஒரு அங்கம்தான்! அப்போ நீங்க???!!!!!


உஸ்...அப்பா....அப்பப்பா!


ஏழு மாதங்களுக்கு முன்புதான் தான் வாங்கிய லேட்டஸ்ட் மொபைல்  போனை இன்றைய லேட்டஸ்ட் மாடலுக்கு இன்றே மாற்றவேண்டும் என மிரட்டும் மனைவியையும், 'அப்போ அம்மாவோட பழைய்ய்ய்ய போன் எனக்குதான்!' என குதிக்கும் பதின் வயது பெண்/பிள்ளை இருக்கும் வீடுகள் தோறும் நடக்கும் ராமாயணத்தை, ராமாயணம் வழியாகவே ஆஃப் செய்யலாமே என முடிவு செய்த தந்தைமார் பலர் தம் பர்சிலுள்ள சொற்ப பணத்தை அடுத்த சம்பள தேதி வரை காப்பாற்ற ராமாயணத்தையே துணைக்கழைத்து நடத்திய ஒரு பெரும்போராட்டமே இப்பதிவு. கடவுளன்றி வேறு யார்தான் காப்பார் இவர்களையும் பர்சையும் :-)


(Top image: ©hyperbole

Bottom image: Wikimedia Commons)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...