நினைவுக்குமிழ்கள்... நிஜ நீர்க்குமிழ்கள் போலவே...
அடிமட்டத்திலிருந்து எப்போதாவது குபுக்கென மேலெழுந்து எங்காவது வெளிப்படும். அதுவாய் மெல்லக்கரைந்து உடையும், இன்னொன்று முளைக்கும்...
இந்த இரவில் சற்று நேரம் முன் பாலு ஒரு இசை மேடையில் ஓ ப்ரியா ப்ரியா மீ ப்ரியா ப்ரியா என தெலுங்கில் உருக, பாடகி ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா எனத்தொடர, இருமொழிப்பாடல்...
இசையின் மென்சிறகுகளை இறுகப்பற்றி, பாடல் முடிந்தபின்னும் இறங்க மனமின்றி மனம் தளும்ப, அந்த தளும்பளில் இருந்து உருளத்தொடங்கின என் குமிழ்கள் ஒவ்வொன்றாய்...
குன்னூரில் நாயகனின் குளிர் வீட்டுக்கதவு திறக்கையில் கீழ் இடைவெளியில் கசிந்து உள் பரவும் பனி...
ஓ பாப்பா லாலி என காதலியை தொடையில் தாங்கி தாலாட்டுப்பாடும் மனோ...
மலை மார்க்கெட்டில் கையில் கேரட் கொத்தோடு பாட்டியின் பார்வையிலிருந்து நழுவியோடும் நாயகி...
இறுதியாண்டு மருத்துவ மாணவியின் முகத்தில் பொட்டு வைத்த வட்ட நிலவாய் அரையிருளில் ஓடும் காதல் கலந்த ரசனை...
நரைமுடியில் கோர்த்த மணிகளை பெருங்காதலோடு தடவும் வாத்துக்காரியின் விரல்கள்...
நிலவொளியில் கடற்கரையில் கிளிஞ்சல்களில் உலையரிசி...
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறுபறவை...
சமுதாயக்கேள்விகள் கெடுபிடிகள் பொறுக்காமல் தப்பியோடும் இளஞ்சோடி அமர்ந்திருந்த ரயில் இருக்கையின் எதிர் இருக்கையில் எதிர்பாராத நல்லாசிரியரின் கவலைப்பார்வை...
ரசித்தேன் அழகை ரசிக்கும் மனதை...
நன்றியுணர்வின் உச்சத்தில் சட்டென கரம் பற்றி நடனக்கலைஞன் பதிக்கும் ஒற்றை முத்தம்...
இது மௌனமான நேரம் என பாடல் அல்லாத, பாடலுக்கு முன் நாயகியின் குரல் வாசிப்பின் வழி நம்முள் இறங்கும் அந்த அடர்ந்த காதல் இரவின் குளிர் வெம்மை...
பித்தனான சித்தன் வாங்கித்தந்த சேலையை கண்டு நெகிழும் கஞ்சாக்காரியின் கலங்கிய விழிகள்...
பெருமரத்தின் வேரணைப்பில் பூமியின் குழந்தையாய் கருவறை உரக்கம் கொள்ளும் ஒற்றைக்காதலனின் ஒளிப்படம்...
இருக்கையில் இருக்கும் மனைவியின் தரைப்பாதங்களை தன்னுணர்வின்றியே பஞ்சு போல் கரங்களுக்குள் காதல் தகப்பன் தரையமர்ந்து பொத்திவைக்கும் நொடியை கண்டு பரவசமுறும் மகனின் கண்கள்...
பார்த்த விழி பார்த்தபடி கைகளில் கிடைத்த ஸ்தனங்களோடு நின்ற நிலையிலேயே நிலை மறந்து பரவசமாய் குதிக்கும் அபிராமி பக்தன்...
கண்மணீ அன்போடு துயில்கொள்ள, சேர்ந்து பாடியவனும் துயில் கொள்ள, பின்னிரவின் குகையிருள் மெழுகொளியில் ரீங்காரமிட்டு இசையோடு மறையும் தேன் பூச்சி...
நினைவுக்குமிழ்களில் மிதந்தபடி உறங்கச்செல்லும் நான்...
இதைப்படித்தபின் உங்களுக்கான குமிழ்களில் பயணம் தொடங்கும் நீங்கள்...
இனிது இனிது வாழ்தல் இனிது.
அதனினும் இனிது நேசம் பகிர்தல்.
என்ன தவம் செய்தோமோ?!
கருத்துகள்
கருத்துரையிடுக