முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புள்ளிகளுக்குள் சிக்கிக்கொண்ட கோலங்கள்





 

கடற்கரையோர டவுன் ஒன்றில் பத்தாம்ப்பு படிக்கையிலே ட்யூஷன் ஆசை தொற்றிக்கொள்ள, 'ஒனக்கெதுக்குடா!!!... சரி, இப்படியாவது நேரம் ஒதுக்கி படிக்கிற பழக்கம் வரட்டும்...' என அப்பா பெரிய மனதுடன் அனுமதிக்க, தொடங்கியது எனது மாலை நேர ஒதுக்கல்கள்.


'கற்பூரம்... நீயெல்லாம் எதுக்குடா வர்ற?!' என இரண்டாம் நாளிலேயே கிருஷ்ணா மாஸ்டர் கண்டுபிடிக்க, சென்டரில் வெயிட் கூடிப்போச்சி.


ஏராளமாய் கேள்வித்தாள்கள், குறிப்பாய் கணக்கு! அவ்வளவு குஷியாயிருக்கும் மார்க் வருகையில்.


இந்தப்பதிவு கற்பூரம் பற்றியதல்ல, கிருஷ்ணா மாஸ்டர் பற்றியது!


நல்ல சிவப்பு, வெட வெட உடல், உயரம், வசீகர சிரிப்பு, சுருட்டை முடி, அழியாத கோலங்கள் ப்ரதாப் போத்தன் போல ஸ்டைலாய் சிகரெட்டு, முழங்கை வரை சுருட்டிய முழுக்கை சட்டை சகிதமாய் எப்பொழுதும் மந்தகாசம்.


"ஆசீர்வதிக்கப்பட்ட மனுசன்டா! எப்பப்பாரு அப்படி ஒரு சிரிப்பு!' என ஏரியா இளவட்டங்கள் பொறாமையில் வேகும்.


கருணாகரன் என்று ஒரு வகுப்புத்தோழன், படிப்பில் என்னோடு போட்டி, ஆனால் பாடத்தொடங்கினால் நானும் சொக்கி கேட்பேன், அப்படி குரல் வளம். கிருஷ்ணா மாஸ்டர் க்ளாசில் தொய்வு ஏற்பட்டதாக நினைத்தால் உடனே ஒரு impromptu பாட்டுப்போட்டி வைப்பார், அவன் பாடலை கேட்க.


அழியாத கோலங்கள் போலவே சில இளந்தாரிகள் நாங்கள்,  standing at the cusp of becoming teenagers (அப்பல்லாம் 16 வயதுதான் பெஞ்ச்மார்க்கு!). சில வாரங்களிலேயே ட்யூசன் சென்டரை சுற்றி வேறு ஏதோ under current ஓடுவதையும், மாஸ்டரின் மந்தகாச எனர்ஜியை அதுவே ரீசார்ஜ் செய்வதையும் உணர்ந்தோம்.


சில மாதங்களில் உணர்வு சிந்தனையை தூண்ட, கிருஷ்ணா மாஸ்டர் ஊரில் இல்லாத ஒரு சுபயோக சுப தினத்தில் (சென்டர் உண்டு) துப்பு துலக்க முடிவு செய்தோம்.


பெரிய இரண்டாள் உயர தகரக்கதவுகள், இரும்பு சங்கிலி சுற்றி பூட்டியிருக்கும். திறந்தால் நடுவில் வட்டக்கூரை வேய்ந்த தளம், இங்கொன்றும் அங்கொன்றுமாய் கரும்பலகைகள், சாக் அப்பிய அழுக்கோடு். பெருங்கதவு திறந்து உள்நுழைந்ததும் வலது புறம் கிருஷ்ணா மாஸ்டரின் அறை, கதவில் என்றுமே பூட்டு கிடையாது. உள்ளே ஒரு சற்றே பெரிய சைஸ் சூட்கேஸ் மாதிரி அலுமினிய பெட்டி, கசங்கி கும்பலாய் ஒரு மூலையில் அழுக்கு உடைகள், சுவற்றில் ஆணிகளில் நல்ல உடைகள், தரையெங்கும் சிகரெட் பாக்கெட்டுகள், நோட்டு புத்தகங்கள், அறையெங்கும் சிகரெட் புகை வாசம் என கதம்பமாய் இருக்கும்.


அந்த சுபயோக சுப தினத்தில் நான் இரும்புக்கதவுக்கு வெளியே காவல் இருக்க, எங்கள் வட்டத்தில் அஞ்சா நெஞ்சர்கள் சிலர் அறைக்குள் நுழைந்து அலுமினிய பெட்டியில் ஒளிந்திருக்கும் ரகசியம் எதுவானாலும் கண்டுபிடிப்பது. வெளியில் யாரும் சென்டரை நோக்கி வந்தால் நான் உடனே உள்ளே நுழைந்து அலர்ட் செய்வது, அலர்ட் ஆன கும்பல் பவ்யமாய் ஏற்கனவே தயாராக விரித்து வைக்கப்பட்டிருக்கும் கணக்கு நோட்டின் முன் அமர்ந்து 'படிப்பது'...


அஞ்சாநெஞ்சர்கள் இருவரும் உள்ளே செல்ல, இதயத்தின் இரைச்சல் ராட்சத மைக்குகள் வழியே காதின் உள்ளே கேட்க பயத்தில் வெளியே நான்.


அரைமணி நேரம்... உள்ளேயிருந்து வெளிறிப்போன முகத்துடன் இருவரும் ஓடி வந்து, எனது திகைப்பு அடங்கும் முன் என் கைகளைப்பிடித்து தரதரவென உள்ளே இழுத்துச்செல்ல...


பெட்டியிலிருந்து  கவிழ்க்கப்பட்டு தரையெங்கும் சிதறிக்கிடந்தன நீல வண்ண இன்லான்ட் கடிதாசிகள்...


முத்து முத்தாய் கையெழுத்து, கோழிக்கிறுக்கல் கையெழுத்து, தப்புத்தப்பாய் கையெழுத்தில் கிருஷ்ணா மாஸ்டரின் முகவரி தாங்கி...


நாங்கள் வசித்த அந்த டவுனில் கடைத்தெரு ஏரியாக்கள் தனித்தனியே குழுமியிருக்கும்; அரிசிக்கடைகள், பழக்கடைகள், காய்கறிக்கடைகள். மாமிசக்கடைகள், பலசரக்கு மளிகை கடைகள் என.


மளிகைக்கடைகள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆண்கள் நடத்தியவை. வேலைக்கு அதிகாலையில் கடை திறந்தால் பெரும்பாலும் முன்னிரவில்தான் வீடு திரும்புவார்கள்.


அவர்கள் அனைவரின் வீடுகளும் கடைகளில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில், எங்கள் சென்டருக்கு அருகில் உள்ள சில தெருக்களில்...


கணவர்கள் நாள்முழுதும் வணிகத்தில் தம்மைத்தொலைக்க, கிருஷ்ணா மாஸ்டர், அவர்களில் பலரின் மனைவிகளுக்கு ஆதர்ச நாயகனாகிப்போனார்!


கடிதாசி வழியே எட்டி இருந்து ரசிப்பவர், காதலோடு கசிந்துருகுபவர். உரிமையோடு 'ஏன் வர்ல?!' என கோபிப்பவர்கள் என கனவு நாயகனாய் மாஸ்டர்! அவரது மந்தகாச ப்ரகாசம் எங்களுக்கு கொஞ்சமாய் புரிந்தமாதிரி இருந்தது.


அவசர அவசரமாய் கடிதங்களை வாரி எடுத்து மீண்டும் பெட்டியில் திணிக்கையில் ஏனோ முகம் தெரியாத ஏராளமான பெண்களை உள்ளே அடைத்து மூடுவது போன்றதொரு உணர்வு...


பாண்டி பயலை அந்த வாரம் முழுதும் காணோம், அந்த சம்பவ நாளில் இருந்து...


வழக்கமாய் தென்படும் இடங்களில் எல்லாம் மாங்கு மாங்கென்று சைக்கிள் மிதித்து தேடினாலும் பயல் அகப்படவில்லை!


அவனோட வீடு இருக்குமிடம் தெரிந்தாலும் போய் பார்க்க பயம், 'நிலவரம் ஏதும் கலவரமாகி இருந்தால் எங்கள் வீடுகளிலும் களேபரம் நிகழுமே! என்கிற பயம், survival instinct.


மறுவாரம் பாண்டியின் பக்கத்து வீட்டு அரை டவுசரை தெரு முக்கில் மறைந்திருந்து ambush செய்து 'என்ன ஆச்சி?!' என்று கேட்க, 'அவனுக்கு நல்ல காய்ச்சல்பா, ஆசுபத்திரிக்கு கூட்டிபோயி ஊசி மாத்திரை எல்லாம் தந்து அவங்க அம்மா, வீட்டுல இருக்கச்சொல்லி கண்டிப்பா சொல்லிட்டாங்க. எதுனாச்சும் ஒவ்வாதத தி்ன்னுருப்பான்னு சொல்லிகிட்டிருக்காங்க' என்றான்.


இன்னும் சில வாரம் பாண்டியை காணாமல் நாங்கள் குற்றமுள்ள நெஞ்சுகளாய் தயங்கி தயங்கி ட்யூஷன் சென்டர் சென்றுவந்தோம்; கிருஷ்ணா மாஸ்டர் முகம் அதே ப்ரகாசம், மந்தகாசம்...


'பெரிய ஆளா இருப்பாரு போல! ஆனா சிக்கினாருன்னா பொளந்திருவானுங்க. டேய், நாம ட்யூஷன விட்டு நின்னுடலாமாடா?' என பய ஆலோசனை பல செய்து, 'இப்ப நின்னா எப்டியாவது கணக்கு போட்டு கண்டுபிடிச்சிடுவாரு / கண்டுபிடிச்சிடுவாய்ங்க' என தெளிந்து, பயம் குறையாமல் பாடம் படித்தோம்.


ஒரு நாள் பாண்டி பயல் கண்ணில் சிக்கினான், ஆள் பாதியாய் மெலிந்திருந்தான், கண்களின் கீழ் கருவளையத்தின் தொடக்கப்புள்ளிகள் வரிசை கட்டி நிற்க, பய விழிகளோடு மெல்லிய புன்னகை செய்தான்.


நலம் விசாரித்தபின் 'டேய் என்னதான்டா ஆச்சி?' என கெஞ்சி கேட்டபின் அவன் சொன்னது, அழிய மறுக்கும் கோலங்கள்!


'நெறைய கடிதாசிங்க இருந்ததில்ல, அதில் சில கையெழுத்துங்க எனக்கு தெரிஞ்சவங்களோடது மாதிரி இருக்கேன்னு நினைச்சு ஒன்ன மட்டும் எடுத்து முழுசா படிச்சிட்டன்டா! அந்த அக்காவையும் அவங்க வீட்டு மாமாவையும் எனக்கு நல்லாவே தெரியுண்டா... அவங்களுக்கு போன வருசம் ரெண்டாவது கொளந்த பொறந்ததுடா, இப்ப பாக்கையிலெல்லாம் அந்த சுருள் முடி, அந்த நெறம்....சாடை கூட....' என்று அழுதான்....


அடுத்த சில வாரங்களில் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்தன.


ஒரு நாள் திடீரென ஒரு புதிய சங்கிலியும் பூட்டும் தாங்கி மூடியிருந்தது ட்யூஷன் சென்டர். கிருஷ்ணா மாஸ்டர் அதன் பின் அவ்வூரில் யார் கண்ணிலும் தென்படவில்லை. 


பாண்டியின் குடும்பம் அதற்கு முந்தைய நாள்தான் அவசர கதியாய் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு சென்றது.




பல வருடங்கள் கழித்து ஒரு நாள் ஒரு பெரு நகரில் வாகன நெரிசல், இரைச்சல், புகை மத்தியில் மத்திய உணவுக்கு ட்ராஃபிக் சிக்னல் வரிக்குதிரை கோடுகளை மிதித்து அவசரமாய் நடக்கையில் எதிரில்... பாண்டி!


"டேய்!!!!!"


குளிரூட்டப்பட்ட உணவகத்தில் லிமிடெட் மீல்சுக்கு இடையில் நிறுத்தி நிறுத்தி பாண்டி சொன்ன விஷயங்கள், என் மனதில் சிக்கலாய் நின்றிருந்த கோலமொன்றின் எஞ்சிய புள்ளிகளை இட்டு நிரப்பி அழியாக்கோலமாக்கின...


'அந்த அக்கா பத்தி சொன்னேனில்லையா...அவங்க ரொம்ப நல்லவங்கடா.... வீட்டுக்காரர் கடையே கதின்னு கெடக்க, அவங்களுக்கு மனசு விட்டு பேச, நட்பு பாராட்ட... அப்ப என்ன டெலிபோன், இன்டர்நெட்டு, இமெயிலு, ஃபேஸ்புக்கெல்லாம் இருந்துதா என்ன? கிருஷ்ணா மாஸ்டர் இது எல்லாமா அவங்களுக்கும் மாறிப்போனாராம். அதையெல்லம் கொட்டி அவங்க எழுதியிருந்த லெட்டர் என் கண்ணில பட்டுதுடா. முதலும் கடைசியுமா எழுதுற லெட்டர்னு எழுதியிருந்தாங்கடா. வெளியே தெரிஞ்சா என்னவெல்லாம் ஆகும்கிற பயத்தில அத மட்டும் யாருக்கும் தெரியாம டவுசர் பாக்கெட்ல தைரியமா ஒளிச்சிகிட்டு வீட்டுக்கு போனாலும் பயம் தொரத்த, யாருக்கும் தெரியாம வீட்டில் ஒளிச்சி வைக்க தலையாணி ஒறைக்குள்ள போட்டு வச்சனா, அடுத்த வாரம் என் வாய் எச்சில் ஒழுகி அழுக்கா இருக்கேன்னு அம்மா தலாணி ஒறைய உருவ.... எங்க அப்பாரு அன்னைக்கு நைட்டு கிருஷ்ணா மாஸ்டரை சென்டருக்குள்ள ரவுண்டு கட்டி அடிக்க, கிருஷ்ணா மாஸ்டரு விடிகாலைல பொட்டி படுக்கைய கட்டி ரிக்‌ஷால ஏறி சொந்த ஊர பாக்க நகர, "என்னக்கிருந்தாலும் ஒரு நாள் விசயம் வெளியே தெரிஞ்சா நம்ம பையன் பேரும் அடிபடும். நம்ம வீட்டு பேரையும் காரணமில்லாம இளுப்பானுவோ" ன்னு அப்பாரும் மச்சினர் ஊருக்கு எங்கள அவசர அவசரமா அழச்சிட்டு போய்ட்டாருடா. அதுக்கப்புறம் எங்கெங்கெயோ படிச்சி...இப்ப இங்க...சத்தியமா உன்ன மறுபடி பாப்பன்னு கனவுலயும் நினைக்கலைடா' என்றான் பத்து ஆண்டுகளின் வலியில் பனித்த கண்களுடன்.


இன்றுபோல Live in relationship, Polyamore என்றெல்லாம் சொற்களும் வாழ்வியலும் புழக்கத்தில் இல்லாதிருந்த அந்தக்காலத்தின்...புறக்கணிப்பின் வலி, அன்பு தேடும் avenueக்கள், (தடம் மாறுவதை) கண்டுபிடிப்பின் வலி, நேர் செய்யத்துடிக்கும் சமூக பொறுப்பு, நேர்மைக்கு இழுக்கு வருமோ என்ற பயத்தில் தவறில்லையென்றாலும் புலம் பெயரும் உறுதி இன்றும் கூட அப்படியேதான்...



பாண்டி அன்று அழுததுபோல எங்கோ யாரோ யாருக்காகவோ இன்றுகூட அழுதுகொண்டிருக்கலாம். அவர்களது கண்ணீர்த்துளிகள் யாருடைய கோலங்களிலோ முழுமைப்படுத்தும் புள்ளிகளாய் விழுந்து, அவற்றை அழியாத கோலங்களாக்கலாம். சுற்றிச்சுழலும் நம் நல்லுலகு தடம் மாறாமல் இருக்க இதுபோன்ற கோலங்களே light houses ஆகவும் இருக்கலாம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...