முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்ன செய்யப்போகிறோம்?!

 


அரூபமாய் காற்றில் அலையும் கனவுகளின் வேர்கள் பெரும்பாலும் நம் எண்ணத்தில் உதித்தவைதான்.


டெஸ்லா என்றொரு விஞ்ஞானி, காற்றிலேயே மின்சாரத்தை கம்பிகளின்றி அனுப்ப கனவு கண்டார். அன்று உலகம் நகைத்தது. இன்று கேபிள் இல்லாமலே சாம்சங் மொபைல் சார்ஜ் ஆகிறது!


கனவு என்பதற்கு இலக்கண இலக்கியம் கிடையாது. கொம்பு வைத்த குதிரையாகவும் இருக்கலாம், சக்கரங்களற்ற கப்பலாகவும் இருக்கலாம். லாஜிக் இருப்பது அவசியமில்லை.


நம் குழந்தைகளுக்கு இன்றைய கல்விக்கூடங்களில் கனவு காண யாரும் கற்றுத்தருவதில்லை.


பாடங்கள் பிடிக்காமல் மாணவர்கள் கண்ணயர்ந்தால் கனவிலும் யாராவது பாடம் நடத்துவதாகவோ அல்லது தேர்வில் ஃபெயிலாவது போலவோ தோன்றி திடுக்கிட்டு கண் விழிக்கும் மாணவர்கள்தான் அதிகம் இன்று.


டேனியல் க்வின் என்கிற ஆசிரியர், நம் புதிய உலகின் கல்விக்கூடங்களை சிறைச்சாலைகள் என்கிறார்.


கனவு காண விடாமல், கனவிலும் நிகழாத அற்புதங்கள் நம் கண் முன்னே நம்மைச்சுற்றியுள்ள வெளியில் ஒவ்வொரு நொடியிலும் நிகழ்வதைக்கூட உணர விடாமல் அடைத்து வைத்து, காற்றில் புரளும் இலையில் ஒருங்கிணைந்து அரங்கேறும் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணித நிகழ்வுகளை செயற்கையாய் தனித்தனியே பாடம் புகட்டி... கல்வி நேரம் தவிர எஞ்சும் நேரங்களில் நம் குழந்தைகள் தூங்க மட்டுமே விரும்புகின்றனர், அச்சுறுத்தும் கனவுகள் இன்றி!


17-18 ஆம் நூற்றாண்டு வரையில் நம் பழைய உலகில் நிகழ்ந்த மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும் வாழ்வை செழுமையுறச்செய்யும் தொழில் நுட்பங்களும், கல்விக்கூடங்கள் சொல்லித்தந்து வந்ததல்ல! 


பெரியவர்கள் உணவு உற்பத்தியிலும் அதை சார்ந்த தொழில்களிலும் ஈடுபடுகையில் அவர்களது குழந்தைகளும்  அவர்களோடே விளையாட்டாய் வாழ்க்கைப்பாடமும் வாழ்வியலும் படித்தனர், பல வயது மனிதர்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகளிடமிருந்தும்!


1700-1800களில் இயந்திரப்புரட்சி வந்த பின்னர், பெரு வணிகம் காலூன்றி,  Mass Production எனும் பேருற்பத்தியை இயந்திரங்களை கொண்டு செய்யவைக்க ஆட்கள் தேவை என்று முதல் முதலாய் விளை நிலங்களில் இருந்து மக்களை வெளியே இழுத்தன.


பெற்றவர்கள் ஆலைகளுக்குச்செல்ல, குழந்தைகளை பார்த்துக்கொள்ள உருவானவையே முதல் கல்விக்கூடங்கள். அதிலும் நான்காம் வகுப்பு வரையே! அதன் பின்னர் சிறார்கள் வெளியுலகிற்கு வாழ்க்கை கற்க அனுப்பப்பட்டனர். (நான்கு வருடங்களுக்குள் இயந்திர வாழ்க்கை அலுத்து அவர்களது பெற்றோர்கள் மீண்டும் விளைநிலங்களுக்கு திரும்பியதால் நான்காம் வகுப்புவரையே அன்று இருக்க காரணமாய் இருந்திருக்கலாம்!)


மெல்ல மெல்ல பெரு நுகர்வுத்தேவைகள் பெருக, வணிகமும் வெகு வேகமாக உற்பத்தி பெருக்க, மென்மேலும் ஆட்கள் நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்டு வேறிடங்களில் பணியமர்த்தப்பட்டு, கல்விக்கூடங்கள் பெருகி, நான்காம் வகுப்பு எல்லை எட்டாகி, பத்தாகி, பண்ணிரண்டாகி, பதினைந்து, பதினாறாகி இன்று "வேலையில் இருக்கும் வரை தொடர்ந்து கல்வி கல்! இல்லையேல் நீ பழசாகி விடுவாய், அதன்பின் நீ எனக்கு தேவைப்படமாட்டாய்!" என வணிகம் நிபந்தனையிட்டு நம்மை படிக்கவைத்துக்கொண்டிருக்கிறது!


டேனியல் க்வின் ஒரு முத்தாய்ப்பு கேள்வியை நம் முன் வைக்கிறார்; 'ஏதோ ஒரு நிகழ்வினால் நாளை காலை நம் (மெத்தக்கற்ற) இனம் மொத்தமாய் அழிந்து போகிறது, நம் பதின் வயது சிறார்களை தவிர!' என வைத்துக்கொள்வோம்.


நம் குழந்தைகள் அவர்கள் நம் புதிய உலகின் கல்விக்கூடங்களில் கற்ற கல்வியை  மட்டும் நம்பி எத்தனை நாட்கள் தனியே உயிர்வாழ முடியும்?


இதே கேள்வியை நம் கானக தொல்குடி இனத்திற்கு பொருத்தினால், அவர்களது குழந்தைகள் கண்டிப்பாய் நன்கு வாழ்வார்கள் என உறுதியாய் சொல்கிறார்!


நம் குழந்தைகள் நலமுடன் உயிர் பிழைத்து, தழைத்து வாழ்வார்கள் என நம்மில் யாராவது, ஏன், நம் கல்வித்தந்தைகள் / தாய்கள் யராவது உறுதியாய் சொல்ல முடியுமா?


வாழ்க்கையை கற்பதை விட வேறென்ன பெரிதாய் நம் சிறார்களுக்கு நம் கல்விக்கூடங்கள் கற்றுத்தரப்போகின்றன?


அல்லது நாம்தான் கற்றுத்தரப்போகிறோம்?


வாருங்கள், கொரோனா மகாமாரி நம் கண்களை திறந்துவிட்டிருக்கிறது இன்று. இனியாவது நிஜமான கனவு காண விழைவோமா?


Mindless Development driven by crazy consumerism vs sensible development for inclusive growth - நமது சாய்ஸ் எதுவோ நம் குழந்தைகளின் சாய்சும் அதுவாகவே இருக்கும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்