நேற்று இட்ட மாக்கோலம்
நேற்றோடு போகாது
இன்று காலைக்காய் காத்திருக்கும்
காற்று மழை எறும்புதாண்டியும்.
இன்று காலை புலருமுன்
சொம்பு நீரை சிதறவிட்டு
வாருகோலினால் வருடித்தள்ளி
இன்று எந்த கோலத்தை
எத்தனை புள்ளியில் சிறைவைக்கலாம்
என சிந்தனை செய்கையில்
கண்முன்னே காத்துக்கிடந்தது
கலைந்த கோலம்,
நான் கலைத்த கோலம்.
நொடியில் துயருற்று வாருகோலை
கையிலெடுத்து கவனமாய் தேடியும்
கிடைக்கவில்லை கலைந்த கோலம்.
பொடிப்பொடியாய் ஈர்க்குச்சிக்கு ஆடையாகி
சொம்பு நீரின் எஞ்சிய துளிகளை
தன் கடைநுனியில் கோர்த்து...
ஒவ்வொரு துளியிலும் நேற்றைய கோலம்.
கோலம் தொட்டுத்துடைத்த வாருகோலிலும் தொங்கிநிற்கும் கோலம்,
தரையில் இழையவிட்ட விரல்களிலும்
இயக்கிய சிந்தையிலும்
மகிழ்ந்த மனதிலும்
வழிந்துகொண்டுதானே இருக்கும்
இந்த சிந்தனை நொடியிலும்...
இனியென்ன கோலமிட?
இன்றைய கோலம் இதுவாகவே இருக்கட்டும்.
வரும் நாட்களிலும் இதுவே.
எறும்பு தின்னுமோ
மழை பேய்ந்தழிக்குமோ
காற்று துடைக்குமோ நானறியேன்.
அப்படியொரு நிகழ்வின் பின்
வெற்றிடமாகிப்போகும் வாசல்போல
என் விரலிடுக்கும் கோலமாவின் பிசுபிசுப்பு
காய்ந்து உலர்ந்து உதிர்ந்துபோனபின்பு
சிந்திக்கலாம் அன்றைய கோலத்தை.
கோலத்தை அற்புதமான கவிதை வடிவியலாக படம் பிடித்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குThank you!
நீக்கு