இதுவல்லவா வாழ்வு!
கண்களை மூடி கற்பனை செய்து பாருங்கள்; மெல்ல தாலாட்டும் நதியில் சில படகு வீடுகள், பத்து இருபது மனிதர்கள், நினைத்தபோது நதியில் பயணித்து இரவில் / பகலில் மீன் பிடித்து என வாழ்வு. நதிக்கரையில் இந்த மனிதர்களை தேடி வந்து மீன் வாங்கும் மக்கள் கூட்டம், படகு வீடுகளின் குழந்தைகள் படிக்க அருகில் சிற்றூரில் பள்ளிக்கூடம்...
நதிப்படகே வாழ்விடம்!
இருபது வருடங்களாக இப்படி ஒரு மேலான வாழ்வை நம் நாட்டில் சிலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்!
சமீபத்தில் அரசு இவர்களுக்கு ரேஷன் அட்டைகளும் தந்து கௌரவப்படுத்தியுள்ளது!!
ஆந்திரா, ஒரிசா, சட்டீஷ்கர் மாநிலங்களின் எல்லைகள் சந்திக்கும் நிலப்பரப்பில் மூன்று மாநிலங்களையும் நனைத்துச்செல்லும் சபரி நதியில் இவர்கள் வாழ்கின்றார்கள்.
(சபரி, கோதாவரியின் கிளை நதி)
உழைப்பால் இவர்கள் மீனவர்கள்.
'நமக்கெதற்கு நிலத்தில் வீடு?' என இவர்களில் மூத்தவர், குடம் வெங்கடேஸ்வர்லு, ஒரு நாள் சிந்தித்ததன் விளைவு இது.
ஆண்களும் பெண்களும் தேவைக்கு மீன் பிடித்து விற்று, இவர்களது குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கல்வி கற்று... இப்போது அடுத்த தலைமுறையில் ஒரு திருமணமும் நிகழ்ந்திருக்கிறது!
'இங்கு எங்களுக்குத்தேவையான எல்லாமும் கிடைக்கிறது; நீர், மீன்கள், குடும்பம், மற்றும் எங்களது மீன்களுக்கான சந்தை. கல்விக்கூடமும் அருகில், வாழ்க்கைச்செலவோ மிகக்குறைவு'
என்ன ஒரு ஆழ்ந்த, தெளிவான, எளிதான, மேன்மையான சிந்தனை!
இதை தாண்டி வேறென்ன வேண்டும் இயற்கையோடு ஒன்றி நலமாய் மகிழ்வாய் வாழ?!
இவற்றை தாண்டியும் நாமெல்லாம் வாயில் நுரைதள்ள "வாழ்நாள் ஓட்ட"மாக ஓடிக்கொண்டிருப்பது எவற்றை நோக்கி?!
இப்படி இவர்களுக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் குடிஅமர்ந்த இவர்களுக்கு பாதுகாப்பு பற்றிய அச்சமே இல்லையா என்று கேட்டபோது, 'அரசு எங்களுக்கு பாதுகாப்பான வாழ்வுச்சூழலை வழங்குகிறது' என்று சொல்வார் என்றுதான் நினைத்தேன். ஆனால் வெங்கடேஸ்வர்லு சொன்னது என் மனக்குளத்தில் ஏதோ ஒரு பெருங்கல்லை எறிந்தது (கல் வட்டங்கள் இன்றும் நின்றபாடில்லை!).
"எங்களுக்கு இங்கு எந்த இன்னல்களும் வந்ததில்லை. ஏனெனில் எங்களுக்கு உதவ இங்குள்ள "கோயா"க்கள் (பூர்வகுடியினர்) எப்போதும் தயாராக இருக்கிறார்களே!'
கோயாக்கள் - ஆதியில் இம்மூன்று மாநில கானகங்களின் காவலர்கள், பின்னாளில் மேட்டுக்குடிகளின் படைகளில் ஆயுதமேந்திய சேவகர்கள், இன்னாளில் மழைப்பயிர்களான சிறு தானியங்களையும் கிழங்கு வகைகளையும் தேவைக்கு உற்பத்தி செய்து தமக்கான தனி மொழி, தனி வாழ்வியலோடு இன்றும் இந்த மூன்று மாநில கானகங்களில் வாழ்பவர்கள். பூமியின் ஆதிகுடிகளாக கருதப்படும் கோண்டு இனத்தின் உறவு வழி வந்தவர்கள்...'!
இவர்களைப்பற்றி ஒரு விரிவான தனிப்பதிவு, விரைவில் :-)
நம் வாழ்வு என்னவோ சக மனிதர்களை சார்ந்தே நீள்கிறது அன்றும், இன்றும், என்றும்; எங்கோ இருக்கும் அரசை விட கூப்பிடு தொலைவில் இருக்கும் மனிதர்கள்தானே இதை சாத்தியமாக்குகிறார்கள்!
(Top image: Courtesy thehindu.com)
கருத்துகள்
கருத்துரையிடுக