முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இறை கனவு, பலிக்கட்டும்!

எண்ணமெல்லாம் வண்ணம்

பல வண்ணம்

நம் இயல்பிலேனோ

பல வர்ணம்.


வர்ணங்கள் வண்ணங்களல்ல

நிறங்களே வண்ணங்கள்!


வர்ணபேத வாழ்வில்

வண்ணங்களற்ற பொழுதுகளை

எண்ணங்கள் கொண்டு

நித்தம் கடப்போரை

ரசம் மாறாது

ரசிக்குது சாலைப்பூக்கள்.


கல்சாலை மண்சாலை

நகரசாலை கிராமசாலை

பெருநகர வீட்டின்

சுற்றுச்சுவருள் ஒடுங்கி

கோடிட்ட இடங்களில்

பரவி நிற்கும்

அலங்கார சாலை

என சாலைகளிலும்

வர்ணம் பல வர்ணம்.


இவையெங்கிலும் சளைக்காது

வண்ணங்கள் மட்டுமே 

சுமந்த கிண்ணங்களாய்

நிற்குது மலர்க்கூட்டம்,

வண்ணங்களே கிண்ணங்களாய்...


இந்த வண்ணங்களை

அள்ளிப்பூச தெளித்துக்கொள்ள

வழியில்லை எனினும்

பார்த்து ரசிக்கலாம்

வர்ணங்களை உதறி.


சாலைகள் அற்ற

வர்ணங்கள் அற்ற

ஏன்? மனிதர்களற்ற

சிறு பரப்பிலும்

பூத்து நிற்கும்

இந்த வண்ணக்குடுவைகள்

யாரும் பார்க்காமலே!


வானவில்லுக்கும் வண்ணங்கள்

இங்கிருந்தே கிடைக்கிறதாம்!


இறைவன் ஒருநாள்

உலகை காண

மலராய் வந்தாராம்

கண்ணில் பட்ட

மலர்களை எல்லாம்

'நலமா?' என்றாராம்.


"எங்கள் நலமும்

எங்கள் வாழ்வும்

மங்காத வண்ணங்களென

சங்கே முழங்கு"


என முழங்கி

தலைவணங்கிய மலர்கள்

கூட்டம் கூட்டமாய்

இறையிடம் சொன்னது

என்ன தெரியுமா?


"ஐயனே அம்மையே,

ரூபமே அரூபமே,

அடிமுடியிலாத பெருவண்ணமே...


உன் படைப்பில்

தலைசிறப்பு என

செருக்கோடு திரியும்,

காணும்போதெலாம் கண்டும்

காணாதெமை கடக்கும்

ஆறறிவு உயிர்களுக்கு

ஏன் எங்கள்

வண்ணங்கள் தெரிவதில்லை?"


பல வண்ணங்களில்

சிந்தித்து தெளிந்த

இறை சொன்னதாம்,


'மரபின் பிழை,

இது மரபுப்பிழை.


முன்னொரு நாளில்

மரங்களில் வாழ்ந்த

பல்லுயிர்க்கூட்டம் உம்

அழகால் ஈர்க்கப்பட்டு

கிளைகளில் ஊர்ந்து

தொங்கி தாவி

"எனக்கே எனக்கு!"

என்ற உந்துதலில்

பறிக்க முயன்று

தவறி தரைவீழ்ந்து

பல் முதலாய்

வால் சிறகு

பற்றிக்கொள்ளும் கால்முறிந்து

மீண்டும் மரமேற

இயலாது சினந்து

அன்றிலிருந்து உங்களை

எதிரியாய் மட்டுமே

எதிர்ப்படுகையில் மட்டுமே

கண்டும் காணாமல்

போகுது நெடும்பயணம்

வண்ணங்கள் இல்லாமலே

எதிர் திசையில்

என்னையும் கடந்தே'


"இறை இருக்கையிலே

இது தகுமா?"


என துயருற்ற 

மலர்கள் வினவ


மென்சோக முறுவலுடன்

இறை பகிர்ந்த 

செய்தி இது;


'உறவு இணக்கம்

மறுபடி உருவாக்க

அவர்களை எமக்காய்

ஆலயம் செய்யவைத்தோம்

நந்தவனங்கள் செய்யவைத்தோம்...


மலரின்றி கிடைக்காது

இறை கருணை

என உணர்த்த

அவர்தம் வேண்டுதலில்

மலர் நுழைத்தோம்...


அர்ச்சன செய்தால்

போதாது மனிதா,

வர்ணபேத வாழ்வில்

அதுவேண்டும் இதுவேண்டும்

என வேண்டுகையில்

மலர்கொண்டு எமக்கு

மாலைசூடி அர்ச்சித்து

வழிபட்டால் மட்டுமே

பெருந்துயர் குறையும்

வேண்டியது கிட்டும்

வண்ணங்கள் உன்

வாழ்வில் மலரும்...


உடைந்தது அறுந்தது

முறிந்தது இழந்தது

அனைத்தும் மீளும்.


இப்போது பறிக்கலாம்

அர்ச்சனை செய்யலாம்

இறையருள் பெற்றபின்

மீண்டுமொருநாள் மரமேறி

மலர்களை ரசிக்கலாம்

பறிக்கமட்டும் வேண்டாமே!'


இறை கூற்று...

கேட்பவர் யாருமில்லை!


வர்ணபேத இல்லங்களில்

யாரும் காணாமலே

வாடி நிற்கும்

மென்மலர்களின் மௌனம்

வாசமற்ற காகித

மலர்கள் சூடிய

இறையை வாட்ட


துயருற்று களைத்துப்போய்

இமையுறங்கும் நேரங்களில்,

இறைகண்ட நெடுங்கனவை

மலர்கள்வழி நானறிந்தேன்...


மலர்மரங்கள் செடிகொடிகள்

மீண்டும் வைப்பேன்

நான் நடக்குமிடமெல்லாம்


பின்னொருநாளில் என்

கால்தடத்தில் முளைத்த

பெருங்கானகத்தில்


என் நட்பே

உன் வம்சாவழி

மீண்டும் மரமேறி


பகலில் மலர்களுடனும்

இரவில் நட்சத்திரங்களுடனும்

கதைபேசி மகிழ்ந்திருக்கலாம்


இன்று நீ

இக்கனவை மறக்காதே.


விதை நானிட்டது

கவிதையும் நானே

மலரும் நானே

மனிதனும் நானே

அதனுள் உறையும்

இறையும் நானே


எண்ணமும் நானே

வர்ணமும் நானே

வண்ணமும் நானே

திண்ணமும் நானே

தொடக்கமும் நானே

முடிவும் நானே

நானே நான்மட்டுமே!











































































































பின் குறிப்பு: 

இக்கவிதை நம் உலகை வண்ணங்களால் இட்டு நிரப்பும் அத்தனை மலர்களின் அத்தனை இதழ்களிலும் பல மொழிகளில் இறை எழுதிய கவிதை. 


ஏதோ எனக்கு கொஞ்சமாய் வாசிக்கத்தெரியும் :-)


இந்தப்பதில் உள்ள 108 மலர்கள்...லாக் டவுன் நேரத்தில் என்னை சூழ்ந்திருந்த தோழமைகளின் வண்ணங்கள் :-)



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்