முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழு, வாழ விடு.

மண்ணில் தோன்றிய உயிர் அனைத்தும் வாழத்துடிக்கும் ஜாதிதான்.


ஒற்றை செல் உயிரியிலிருந்து "பேராசை பெருநுகர்வின் வால் பிடித்து ஓடிக்கொண்டிருக்கும்" பேருயிர்கள் வரையான கோடி கோடி உயிர்களும் இதே ஜாதிதான். விதி விலக்கு என்பதே இயற்கையின் விதிகளில் இல்லை.


இத்தனை கோடி உயிர்களில் சிலது மட்டும் வாழ பலதும் அழியவேண்டும் என இயற்கை ஒருபோதும் எழுதியதில்லை.


தஞ்சையிலிருந்து ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, ஆவணம், பேராவூரணி வழியே பயணித்தால் வரும் ஒரு சிற்றூர், "பெருமகளூர்". இந்த ஊரின் பழமையான சிவன் கோவில் புகழ்வாய்ந்த ஒன்று. 


இந்த ஊர், காவிரியின் கடைமடைப்பகுதியில் இருக்கிறது. கடற்கரை சற்றே தொலைவில்.


பூமியில் துளையிட்டு நாற்பது அடிக்கு கீழே போனால் கடல்நீர் வரும்.


மழையை நம்பி விவசாயம் செய்யும் ஊர் இது. கடலை, எள்ளு, தென்னை என பலதும் விளைவித்து வணிகப்பொருளாதாரத்தில் சிக்கி, கடந்த பல ஆண்டுகளாய் நெல் சாகுபடி மட்டுமே முதன்மைப்பயிர்.


விளைச்சலைப்பெருக்க வீரிய விதைகள், வீரிய உரங்கள் எனப்பழகிய மக்கள் கடந்த சில ஆண்டுகளாக ரவுண்டப் என்னும் மிக வீரிய உயிர்க்கொல்லியை அதிகமாக பயன்படுத்துகின்றனர். 


விளைச்சல் அதிகமாகிறதோ இல்லையோ, எலிகள் இந்த ஆண்டு கட்டுப்படுத்த முடியாத அளவு பெருகிவிட்டன! பயிர் சேதாரமும் பல மடங்கு!


கிட்டி வைத்து எலிகளை பிடிக்கலாமென்றால் ஒரு கிட்டிக்கு ஐம்பது ரூபாய் தரவேண்டும். சில ஏக்கர்களே உள்ள ஒரு வயலின் வரப்புகளில் ஒரு நாளில் மட்டுமே நூற்றுக்கும் மேலாய் எலிகள் மாட்டுகின்றன. விந்தை என்னவென்றால் அடுத்தடுத்த நாட்களிலும் 100+ எலிகள் சிக்குகின்றன, ஒவ்வொரு வயலிலும்!


தினமும் ரூபாய் ஐந்தாயிரம், எலிகளை ஒழிக்க! எந்த விவசாயியால் இது இயலும்? எத்தனை நாட்கள்?


ஏன்? என்ன ஆச்சு பெருமகளூரி்ல்?!


விடை காண அங்கிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை, திருச்சி, கரூர் வழியாக கொங்கு மண்டலம் செல்வோம் வாருங்கள்!


மாறி வரும் பருவங்களாலும், குறைந்துவரும் மழையினாலும் கொங்கு மண்டலத்தில் விளை நிலங்களும் தோப்புகளும் விரைவாக கோழிப்பண்ணைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன.


கோழிகளுக்கு முதல் எதிரி பாம்பு இனம்.


கிட்டி வைத்து பாம்புகளை பிடிக்க இயலாதே!


எங்கோ ஒரு விவசாயி தன் கோழிப்பண்ணையின் எல்லை முழுதும் ரவுண்டப் என்னும் உயிர்க்கொல்லியை லட்சுமணன் கோடு போல பரப்பிவிட, தாண்ட முயன்ற பாம்புகள் தொடர்ந்து பரலோகம் போகின்றன. கோழிகள் பயமின்றி வளர்கின்றன. ரவுண்டப் நச்சு படிந்த தீவனங்களை உண்டு முட்டைகள் இடுகின்றன. பண்ணையாளரும் பாம்பு சேதாரம். பற்றிய பயமின்றி மகிழ்வாய் வாழ்கிறார்.


இதை அறிந்த பலரும் ரவுண்டப்புக்கு மாறுகின்றனர்.


சரி, கொங்கு மண்டல நிகழ்வை தெரிந்து என்ன பயன்? பெருமகளூரில் இன்னும் எலிக்கூட்டம் பெருகுகிறதே!


உண்மைதான். இவை இரண்டையும் இணைத்து, பெருமகளூரில் நடப்பது என்ன என்பதை நாம் உணர, விமானம் ஏறி சிங்கப்பூர், தாய்லாந்து வழியே ஆஸ்திரேலியா செல்வோம் வாருங்கள்!


ஆஸ்திரேலியா ஒரு சுற்றுலா தலம். பிரிட்டிஷ் பேரரசின் திறந்தவெளி சிறையாக ஒரு காலத்தில் மாறிப்போன நாடு, இன்றி உலகெங்குமிருந்து சுற்றுலாப்பயணிகள் ஆண்டு முழுதும் குவியும் நாடு.


பயணிகள் பலர், Outback எனப்படும் ஆஸ்திரேலிய உள்நிலப்பரப்புகளை (அதிகமாய் மனிதர்கள் வசிக்காத, சொற்பமான பழங்குடியினர் வசிப்பிடங்கள் கொண்ட மிகப்பெரிய நிலப்பரப்பு) கண்டறியும் ஆவலில் அலையலையாய் உள் செல்ல, அநேகர் அங்கு பாம்புக்கடிக்கு ஆளாகினர். 


இதனால் பயணிகள் வரவு குறையுமே, அந்நியச்செலாவணியும் குறையுமே என கவலை கொண்ட ஆஸ்திரேலிய அரசு, பாம்புகளை வேட்டையாடி அழிக்க மக்களை ஊக்குவித்து பல திட்டங்களை அறிவி்த்தது. 


மனிதக்கூட்டத்திற்கு கோடு காட்டினாலே போதுமே, அழிவுத்தொழில் செய்ய!


வெகு விரைவாக ஆஸ்திரேலிய பாம்புகள் வேட்டையாடப்பட, அரசும் சுற்றுலாப்பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டு தம் தம் பயணங்களை தொடர, சில வருடங்களிலேயே வேறொரு பெருந்தொல்லை தலைதூக்கியது எலிகள் வழியே!


இன்றைய பெருமகளூர் விவசாயிகள் போலவே அன்றைய ஆஸ்திரேலிய விவசாயிகள் திடீரென பெருகிய எலி-பயிர்-சேதம் கண்டு கவலையுடன் அரசை அணுக, அரசும் ஆராய்ச்சி செய்து கண்டறிந்தது என்ன தெரியுமா?


"பாம்புகள் அறவே ஒழிக்கப்பட்டதால் அவற்றால் வேட்டையாடப்பட்ட எலிகள் தடையின்றி பயிரை உண்டு இனம் பெருகி இன்று நாடு முழுவதும் மகிழ்வாய் பயிர்ச்சேதம் செய்கின்றன!"


பதறிப்போன அரசு, வெளி நாடுகளில் இருந்து பாம்புகளை இறக்குமதி செய்து எலிப்பெருக்கத்தை பெரும்பாடு பட்டு கட்டுப்படுத்தியது!!!!


அன்று அரசின் ஊக்கத்திட்டங்கள் கொன்ற பாம்புகளை இன்று நம் நாட்டில், பெருமகளூரிலும் கூட, ரவுண்டப் போன்ற உயிர்க்கொல்லிகள் கொன்று குவிக்கின்றன.


உணவுச்சங்கிலியின் அடிப்படைகள் (வாழு, வாழ விடு. 

ஒன்று வாழ மற்றொன்றின் இருப்பு அவசியம். 

சங்கிலியின் ஒரு கண்ணி உடைக்கப்பட்டாலும் அதன் பின்னான விளைவுகளுக்கு இயற்கை பொறுப்பேற்காது!) நமக்கு மறந்துபோனதால் நிகழும் துயரம் இது...


பெருமகளூரில் விவசாயம் செய்யும் என் உறவினருக்கு இந்த தகவலைப்பகிர்ந்தது போலவே இப்போது உங்களிடமும் பகிர்கிறேன்!


ஆப்கானிஸ்தான "போரா போரா" மலைப்பகுதியில் அமெரிக்க கங்காணி செயற்கைக்கோள்களின் வான் கண்களுக்கு தென்படாமல் மலை எலிகள் போல குகைகள் குடைந்து பதுங்கிய தீவிரவாதிகளை அழிக்க, மலையடி குகைகளுக்குள் ஊடுருவி உள் நுழைந்து தாக்கும் கொத்து வெடி குண்டுகளை (cluster bombs) கண்டு பிடித்து சந்தைப்படுத்திய பேராசை பெரு வணிகம், தம் உயிர்க்கொல்லி மருந்துகளால் நம் விவசாயிகள் இடும் லட்சுமணன் கோடுகளை தரை மீது தாண்டாமல் சாமர்த்தியமாய் வளை தோண்டி தாண்டும் எலிகளை ஒழிப்பதற்காக, எலி வளைகளை ஊடுருவி தாக்கும் உயிர்க்கொல்லி கொத்து வெடிகளை கண்டறிந்து சந்தைப்படுத்தும் காலம் தொலைவில் இல்லை (கரப்பான் பூச்சிகளை இவ்விதமாய் கொல்லும் மருந்துகள் ஏற்கனவே சந்தையில் கிடைக்கிறது!).


அதற்கு முன் நம் வயல்களில் மரங்கள் வளர்த்து ஆந்தைகளும் கீரிகளும் உடும்புகளும் கழுகுகளும் வந்து தங்க வழி செய்யும் விவசாயகளின் பயிர்கள் மட்டுமே எந்நாளும் எலி சேதம் தாண்டி செழிக்கும்!


உணவுச்சங்கிலியின் அடிப்படை விதிகள்: 


வாழு, வாழ விடு. 


ஒன்று வாழ மற்றொன்றின் இருப்பு அவசியம். 


சங்கிலியின் ஒரு கண்ணி உடைக்கப்பட்டாலும் அதன் பின்னான விளைவுகளுக்கு இயற்கை பொறுப்பேற்காது!


இந்த உணவுச்சங்கிலி விதிகள்,  எலிகளுக்கு மட்டுமல்ல, கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்றுகளுக்கும் பொருந்தும்!


கொரோனாவாகட்டும், வேறொரு புதிய கிருமியாக இருக்கட்டும், இந்த ஒட்டுண்ணிக்கிருமிகள் தொற்றி வாழ, பல்கிப்பெருக, அவற்றுக்குக்கூட மனிதர்கள் போன்ற உயிர்கள் தேவை. 


மனிதரை மட்டும் தொற்றும் ஒரு கிருமி, மனிதர் உடலில் ஒட்டிக்கொண்டு அந்த உடல் உயிரோடிருக்கும்வரை மட்டுமே உயிர் வாழக்கூடிய, அடுத்தவருக்கு தொற்றக்கூடிய அந்தக்கிருமி, மனிதர் அனைவரையும் ஒழித்து விட்டால் அதுவும் ஒழிந்துபோகுமல்லவா!


எனவே இது போன்ற கிருமிகளின் நோக்கம் 'வாழு, வாழ விடு!' என்பதே!


கிருமிகள் ஒருபோதும் எதையும் கொன்றொழிப்பதில்லை. அவை தொற்றும் உயிர்கள், ஏற்கனவே தம் உடலில் வாழ்வியல் மாற்றங்கள் வரவழைத்த நோய்களை சுமந்துகொண்டிருந்தால் மட்டுமே இரு உயிர்களுக்கும் ஆபத்து!


நாம் நலமே வாழ, பெரு வணிகம் கடை விரிக்கும் நுகர்வுப்பொருட்களும் மருந்துப்பொருட்களும் உதவப்போவதில்லை எந்நாளும்! 


நமக்கு தேவை என்ன தெரியுமா? உணவுச்சங்கிலி விதிகளைப்பற்றிய சரியான புரிதலும் அவற்றின் வழி வாழ்தலும் மட்டுமே.


வாழ்க நலமுடன். நலமே வளம்!


(Image courtesy: Pan American Health Organization. Image may be under copyright)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...