முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூனை மனிதர்கள்

கிராமத்தில் அந்த ஐயனின் தோப்பு வீட்டில் வெளிர் அரக்கில் வெள்ளைக்கோடுகள் ஓடும் பூனைக்குட்டி ஒன்றை வளர்க்கிறார்...இல்லை இல்லை, அதுவாய் வளர்கிறது, அந்த அம்மையின் திட்டுக்களை சட்டை செய்யாமல்.


கிராமத்து வீடுகளில் எலி நடமாட்டம் தவிர்க்க இயலாத ஒன்று. அரிசி பருப்பு மூட்டைகளையும் காய்கறி பழங்களையும் அவை உண்டு ஓடுகையில் வீட்டிலுள்ள பெரியவர்கள் டி.வி விளம்பரங்களில் வரும் உயிர்க்கொல்லிகளை ஒருபோதும் நாடுவதில்லை. மாறாக பூனை வளர்க்கிறார்கள் அல்லது ஒரு முறை வீட்டுக்கு தவறி வரும் பூனைக்கு உணவளித்து அங்கேயே தங்கிப்போக பழக்குகிறார்கள்.


அந்தப்பூனை ஏதாவதொரு காரணத்தால் காணாமல் போய்விட்டால் அவர்கள் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் சில நாட்கள் தேடி, அதன் பின் எந்தப்பூனை அந்தப்பக்கம் வந்தாலும் அதை வளர்க்க இயல்பாய் முனைகிறார்கள்.


இப்படித்தான் நான் இவர்கள் வீட்டில் இப்போது பார்ப்பது மூன்றாவது பூனை. இதற்கு முன் சாம்பல் நிறப்பூனை, அதற்குமுன் முற்றிலும் வெண்மை நிறத்திலான பூனை என்று நினைவு.


பூனைகள் நாய்கள் போல எளிதில் பழகாது. எளிதில் அண்டாது. எளிதில் அண்ட விடாது. ஆனால் சுவாதீனமாய் உரிமை எடுத்துக்கொள்ளும், நம் ஆடை நுனிகளை பற்றிக்கொண்டு தொங்கும், நம் செருப்புகளுக்குள் புகுந்து தோல் பட்டைகளை கடிக்கும், நம் மீது இஷ்டம் போல் ஏறி நடந்து இறங்கும், கால் பாத இடைவெளிக்குள் நாம் எதிர்பாராத நொடியில் புகுந்துகொள்ளும். 'சரி நம்மிடம் இவ்வளவு உரிமையும் அன்பும் காண்பிக்கிறதே!' என மகிழ்ந்து நாம் கரம் நீட்டி தொடவோ தடவிக்கொடுக்கவோ முயன்றால் நட்பற்ற ஒரு பார்வை பார்த்து பற்கள் தெரிய மியாவ் என எக்காளமிட்டு விலகியோடும்.


அந்த அம்மைக்கு பூனைகளை பிடிக்காதுதான். ஆனாலும் கரிசனமாய் உணவு தருவார். அது ஏதாவது குறும்பு செய்தால்கூட கடிதோச்சி அதன்மீது மெல்ல எறிவார், கையில் கிடைத்த கனமற்ற பொருட்கள் ஏதாவதை.


ஒரு நாள் ஆர்வம் தாங்காது கேட்டேன்...

'அம்மை? ஏன் இப்படி பொய்க்கோபம்?' என்று.


'கோபம் பொய்யல்ல. பூனைகள் இயல்பில் மாமிச உண்ணிகள். நாங்களும்தான். எலிகள் அவை இருப்பதால் வருவதில்லைதான். ஆனால் அவை பொழுதுக்கும் தோப்பில் ஓடும் ஓணான், அரணை, பூரான் இத்யாதிகளை வாயில் கவ்விக்கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்து வைத்து உண்ணும். உண்டபின்னான கழிவுகளை சுத்தம் செய்வதும், சமயங்களில் பூனையின் வாயிலிருந்து தப்பியோடும் உயிர்களை காப்பாற்றுவதா அல்லது அடித்துக்கொல்வதா என்ற தார்மீகமாய் சங்கடப்படும்படியான சந்தர்ப்பங்களையும் உண்டாக்கிவிடும். இப்படித்தான் சில நாட்கள் முன்பு ஒரு பாம்புக்குட்டியை பிடித்து வந்து வீட்டுக்குள் விட்டுவிட்டது. கண்ணாடி விரியன்!' என்றார். நான் சற்றே உறைந்துபோய் பின்பு தெளிந்தேன்.


அதன் பின்னான என் சிந்தனையோட்டம் இவ்வாறாக இருந்தது; 'மனிதர்களாகிய நாமும் இப்படித்தானே. நம்முடைய சிக்கல்களை சரி செய்ய, நம்மை விடுவிக்க, நமக்கு மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். தீர்வு தேடும் நாமே சமயங்களில் பூனைகளாய் மாறிப்போய் வெளியில் இருந்து ஒரு மனிதரையோ அல்லது புதிதாய் ஒரு சிக்கலையோ நம் மனதுக்குள் / வீட்டுக்குள் இழுத்து வந்து பின்னர் அதை விண்டு விழுங்கவும் முடியாமல் வெளித்தள்ளவும் முடியாமல் பூனையாய் வெளியில் ஓடிப்போய் அதன்பின் அந்த தோப்பு வீட்டின் அம்மையாக மாறி புலம்பிக்கொண்டே அந்த புதிய உயிரோடு மல்லுக்கட்டவேண்டியிருக்கிறதே! இது மாறவே மாறாதா?:


வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் என் மேலான பாதி, அதாங்க Better Half, என்னிடம் இயல்பாய் சொல்ல ஆரம்பித்தார், 'மேல் மருவத்தூரில் என் தூரத்து சித்தி பொண்ணு என்ன பண்ணினா தெரியுமா?...'


நான் இப்போது பூனையா, பூனை வாய் உயிரா அல்லது அந்த அம்மையா?!!!!


Jokes apart, நமக்கு வெளியே என்ன நடக்கிறது என்கிற நம் அதீத ஆர்வமே நம் ஒவ்வொருவரையும் நமக்கு தொடர்பில்லாத, தேவையற்ற சிக்கல்களை நம்முள் இழுக்கவைத்து, நம்மையும் நம்முடன் இருப்பவர்களையும் அந்த அம்மையின் நிலைக்கு சதா சர்வகாலமும் தள்ளுவது இன்றைய 24*7 connected உலகின் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது என நான் அஞ்சுகிறேன்.  இது நாம் முயன்றால் தவிர்க்கக்கூடிய சிக்கலா? இல்லையா?


உங்கள் எண்ணங்களை பகிருங்களேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்