உரக்கமற்ற இரவுகளின்
இமை உரசல்களில்
உதிர்ந்த கனவுகளில்
ஏதேனும் ஒன்றை
நிகழில் எதிர்கொள்கையில்
கனவென்றறியாது கடந்துபோய்
ஏதோ நினைவில்
திரும்பி நோக்க
காலத்தின் பெருங்காற்றில்
அது போயிருக்கும்
பலதூரம் பறந்து.
கனவு பொறுக்கி
கனவு சேர்த்து
கனவில் நெய்த
கனத்த ஏக்கங்கள்
சொல்லாமல் சுற்றிச்சூழும்
பொருள்தேடி உழலும்
வெக்கை தினங்களிலும்.
கனவு மெய்ப்பட
ஓடித்தேடும் இரவுகளில்
ஒரு கனவில்
கண்விழித்து நிசமாகாதா
என ஏங்கித்தவித்து
மறுபடி உறங்கிப்போகும்
மனதுக்கு தெரியுமா
கனவு மெய்ப்பட
மெய்வருத்தம் தேவையென?
கனவென்பது ஓர்விதை
விதையென்பது பேராயுதம்
நானே நல்நிலம்.
மெய்வருத்தி ஊன்றி
ஊன்றியதை போற்றி
கண்ணும் கருத்துமாய்
உரக்கமின்றி வளர்த்து
வளர்த்தது வளர
வளர வளர
வாழ்வு துலங்கும்
(விதை)ஆயுதம் பெருகும்.
"ஆயுதம் செய்வோம்
தலை சாயுதல்
செய்யோம்" என
தோழனொருவன் முழங்கியது
உரக்கம் கலைத்துப்போட
உறங்கப்போவதில்லை நான்
என் கனவு
காடாகும் வரை.
உறங்கப்போவதில்லை நான்
நானே காடாகும்வரை.
வீழ்வேன பதைத்தனையோ
சொல்லடி சிவசக்தி!
நச்சிட்ட நிலத்தினிலும்
நான் விதைத்த
கனவு விதை
விசையுறு பந்தினைப்போல்
விரும்பியபடி வளர்ந்து
நித்தம் நவமெனச்
சுடர்விடும் ஜோதியாய்
திசைகாட்டும் வெளிச்சமாய்
உயர்ந்து நிற்குது
இன்று பெருமரமாய்.
பெருமரம் தோப்பாகி
தோப்பு காடாகி
இன்று என்
காட்டு மரங்களில்
கிளைகளில் இலைகளில்
தங்கிச்செல்ல இளைப்பாற
இடமிருக்குது ஏராளமாய்.
விதை சுமந்து
காடு பரப்பும்
பறவைக்காய் எப்போதும்
ஈரமுடன் காத்திருக்குது
என் வேர்கள்.
நல்லதோர் வீணை
நல்விதை ஒவ்வொன்றும்.
நலம்பட நல்நிலம்
சமைக்க வீழும்,
"பொங்கியெழுந்தது காடு"
என விழுந்தது
மகிழ்ந்து முளைக்கும்
தழைக்கும் செழிக்கும்
ஐநிலமும் காடாகும்,
காடுவழி வாழ்வின்
சுவடுகள் நீளும்.
வாழ்வென்பதே ஆராதனை.
கருத்துகள்
கருத்துரையிடுக