மார்கழி முப்பதுக்கு காலத்திற்கும் உரக்க கேட்கும் திருப்பாவை தந்தவளை உலகம் போற்றட்டும். எனக்கதில் அக்கறையில்லை.
போற்றுவோர், தம் வாழ்வியல் சூக்கும கயிறு கொண்டு தம்மைத்தாமே அந்த முப்பதில் பிணைத்து அதனுள்ளே உய்யட்டும்.
என் ஆண்டாள், "நாச்சியார் திருமொழி" ஆண்டாள்.
143 பாடல்வழி தன் கண்ணனை 'உண்டு இல்லை' என ஆக்கிய பெருங்காதல் பெண்; ஆண்கள் வார்த்த உலகில் பெண்ணுக்காய் அவர் வார்த்தடைத்த உலோகக்கதவுகளை தன் கவிதைகள் கொண்டு எட்டி மிதித்து ஏறித்தாவி மறுபுறம் குதித்து இறையோடு கலந்த காதல் தலைமகள்.
நெஞ்சமெல்லாம் கண்ணனென உன்மத்த காதலில் அற்ப மானிடரை அண்ட விடேன் என்று திண்ணமாய் நின்றவளை 'என்ன செய்வதென' அறியாது தவித்த சமூகம் பற்றிய உணர்வெதுவுமின்றி காதல் பெருவெளியில் பாற்கடலை கடைந்தவனின் 'அரையில் சாத்திய பீதாம்பரத்தை என் மீது படியும்படி சாத்தி என் வாட்டம் போக்கும்படி செய்யாமல் ஏன் என்னை இன்னும் நோகடிக்கிறீர்கள்?!' என பாடிக்கேட்கும் பெறும்பேறு பெற்ற மாயவன் அவளை தன்னுள்ளே சூடிக்கொண்டதில் விந்தையென்ன?
ஜெய கோவிந்தத்தை சிலாகிக்கும் சமூகம், மார்கழித்திங்கள் மதி நிறைந்த சமூகம், அவளது மனத்திண்மையை, மண்ணுலகை அலட்சியமாய் சுண்டியெறிந்து விண்ணாண்ட காதலை, அதை அவள் போற்றிப்பாடிய நூற்று நாற்பத்து மூன்றை என்றாவது ஒரு நாள் தம் சமூக அளவீடுகளை புறந்தள்ளி, கைகளில் உயர்த்திப்பிடித்த துலாக்கோலையும் தூக்கியெறிந்து வாசித்துப்பார்க்கும் மன வலிமையையும், அவை முரசு கொட்டும் அவளது உன்மத்த காதலை பார் புகழ போற்றி உய்யும் மன முதிர்வும் தர அருள்புரிவாய் நாரணனே!
(143 - நான் உன்னை நேசிக்கிறேன் என ஆங்கிலத்தில் மூன்று சொற்களில் எழுதுகையில் முதல் சொல்லின் நீளம் ஓரெழுத்து, இரண்டாம் சொல்லின் நீளம் நான்கெழுத்து, மூன்றாம் சொல்லின் நீளம் மூன்றெழுத்து!)
Image courtesy: Forum Art Gallery (from the web. Image may be under copyright by the artist)
கருத்துகள்
கருத்துரையிடுக