ஆதியில் நீரின் ஆற்றலுக்கு அஞ்சி சமதள பரப்புவாசிகள் மேலேறி மேலேறி மலையடிவாரம் அடைந்து... மலைமேலிருந்தும் விழும் நீருக்கு அஞ்சி மலையேறத்தொடங்க, மலையுச்சிதான் நீராபத்து இல்லாத பகுதி என தங்கிப்போய்விட்டார்களாம்.
அவர்களால் ஏற முடிந்த மலை உச்சிகளில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரம் செடி கொடி பூ காய் கனி விலங்குகள் பறவைகள் என குலுங்கியதாம்.
நல்ல இடம் இந்த இடம் என தங்கி வேட்டையாடியும் உணவு பறித்தும் உண்டு மகிழ்ந்து சந்ததி பெருக்க, ஒருநாள் உண்ணக்கிடைத்தது அனைவர்க்கும் போதவில்லையாம்.
பகிர்ந்து உண்டு, பின் நிரம்பாத வயிறோடு உறங்கச்சென்று உறக்கம் தொலைத்த இரவுகளின் தீராத சிந்தனையில் வேளாண்மை தோன்றியதாம்.
மழையை நம்பிய வேளாண்மையில் அதிக விளைச்சல் அதிக ஆற்றல் குறுகிய காலத்தில், குறைவான நீர்த்தேவையில் (பெய்த மழை சரிவில் இறங்கிப்போக, ஈரப்பதத்திலேயே வளரும்) சிறு தானியங்கள் விருப்பப்பயிராச்சாம்.
பயிர் வளர்ந்து கதிர் பிடிக்கும் காலத்தில் அதை உண்ண கூட்டம் கூட்டமாய் வந்த உயிரிகளை காணும் ஆர்வம் உந்த, மலைக்காட்டு பறவைகள் தாழப்பறந்து புழு பூச்சியோடு அவை அமர்ந்த கதிரையும் உண்ண, கதிர்சுவை பிடித்துப்போய் கூட்டமாய் தரையிறங்கி கொத்தித்தின்ன, தானியங்கள் விதைத்துக்காத்தவர்கள் மீண்டும் பறவைகளுக்கு எஞ்சியதை பகிர்ந்து உண்டு நிரம்பாத வயிறோடு உறங்கச்சென்று உறக்கம் தொலைத்த இரவுகளின் தீராத சிந்தனையில் பரண் பாதுகாவல் தோன்றியதாம்.
நிலம்தோறும் பரண் அமைத்து காவல் காக்க, தூரப்பறவைகளை இலக்கு தவறாமல் விரைந்து தாக்கி துரத்த கவண்பொறி செய்தனராம்.
இப்படி ஒரு பரணில் திணைக்காவலுக்கு வந்த ஒரு வேடுவ கன்னியிடம் மனதைப்பறிகொடுத்த வேடன் ஒருவன் அங்கு வந்து அவளை 'கண்டு' செல்ல... "முருகா! எல்லாம் உன் செயல்" என வேடுவர் கூட்டம் அவர்களை மணம் செய்வித்து மகிழ்ந்ததாம்.
சரி, தலைப்புக்கு வருவோம்.
சந்ததி பெருகப்பெருக, மலையுச்சி தாண்டி வான் வெளியில் வாழிடம் இல்லையென வேடுவ வேளாண் குடும்பங்கள் சரிவில் இறங்கி குடும்பம் பெருக்க, குடியிருப்பு பெரிதாச்சாம், ஊரொன்று உருவாச்சாம்.
குடும்பமெண்டால் பிணக்குகள் வரும்தானே! தீராப்பிணக்கை தீர்த்துவைக்க ஊர்த்தலைமை, சிலரை இன்னும் சரிவில் இறங்கி தனித்து 'இருக்க' தீர்ப்பெழுத, தனித்துவிடப்பட்டோர் தரை நோக்கி சரிந்து சரிவெங்கும் ஊர்பெருக்க, ஒரு காலத்தில் மலையடிவாரம் வரை ஊர்கள் பெருகியதாம்.
பின்னொரு நாள் கடும் மழையில் மலையிறங்கிய நீர் தாக்க, தடுமாறிய அடிவார ஊர்கள் மேடு நோக்கி நகரத்தொடங்க, தொடங்கியதாம் எல்லைப்பிணக்கு!
மேட்டில் குடியிருந்தோர் சரிவேறிய தம் பழைய பங்காளிகளை, தாம் ஒதுக்கி வைத்தவர்கள் குடும்பங்களை மலை ஏற விடாமல் தடுக்க, அன்று தொடங்கிய "மேட்டுக்குடி" "தாழ்குடி" பிணக்கு பின்னாட்களில் பல வடிவங்களில் மாறிப்போனாலும் இன்று வரை மாறாமல் தொடர்கிறதாம்!
நம் உலகில் பாதுகாப்பின் தேவை, பசித்த வயிறின் தேவை இருக்கும்வரையில், அந்த தேவைகளை இட்டு நிரப்ப தடைகள் இருக்கும் வரையில், இந்தப்பிணக்கு தொடரத்தான் போகிறதாம்.
முருகா, இந்த பிணக்கை தீர்க்க யாராவது மேல் நிலத்திலிருந்து தாழ் நிலத்துக்கு தீர்வுக்காவடி சுமந்து வேல் யாத்திரை செய்வார்களா என எம் போன்ற பக்தர்களின் கனவிலாவது சொல்லப்பா...
கருத்துகள்
கருத்துரையிடுக