மலை முகடுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமதளங்களிலும் காற்று ஓய அவர்கள் காத்திருந்தார்கள்.
கடல் அலைகளும் சற்றே கண்ணயரும் நேரத்திற்காக அவர்கள் காத்திருந்தார்கள்.
இவையிரண்டும் நிகழ்ந்த நொடியில் நள்ளிரவின் இருளில் அவர்கள் இறங்கி வந்தார்கள்.
மணல் துகளிலும், அலை நுரையிலும், இலைக்கீற்றிலும், ஏன், காற்றிலும்கூட பரவி இசையற்ற ஏதோ ஒரு இசையோடு இயைந்து ஆடத்தொடங்கினர்கள்.
ஒரு கோடி வைரங்கள் காற்றேறி மிதந்து அந்தரத்தில் சுழன்றாடியது போல் அவர்களது ஆட்டத்தில் சிந்திய வெளிச்சத்துணுக்குகள் யாவும் ஓசையின்றி படிந்தன அவர்கள் நிரப்பிய வெளி அனைத்திலும்.
ஒளிக்கீற்று தொடத்தொடங்கிய இடங்களை விட்டு சடுதியில் ஓசையின்றி நீங்கி, இருளின் ஆடை நுனியைப்பிடித்துக்கொண்டு தொடர்ந்த அவர்களது பயணம், தொடர்ந்த வண்ணமே இருந்தது இருளோடு.
ஒளி தொடும் இடங்களை நீக்கிய ஏனைய புவிப்பரப்பில் இருள்தானே ஒளிர்கிறது?! இவர்களால்தானே ஒளிர்கிறது!
புவியிறங்கிய விண்மீன்கள் தாம் தொட்ட இடங்களையெல்லாம் கழுவித்தழுவி இலைகளின் பளபளப்பாய், பூக்களின் மெல்லிய வெளிச்சமாய், மணற்துகளுள் வெளிச்சப்புள்ளியாய், அலை நுரையின் வெண்படிமமாய், நள்ளிருளில் கண் விழிக்கும் குழந்தைக்கண்களில் ஆறுதல் ஒளியாய் மாறிப்போய் மாயமாக...
"கீழிறங்கிய பெற்றோரும் உற்றாரும் ஏனின்னும் திரும்பவில்லை?" என கவலையோடு கண் விழித்துப்பார்த்திருக்குது ஒரு குட்டி விண்மீன் கூட்டம்.
"ஏனைய நாங்களெல்லாம் இருளில் மட்டும் துலங்க, நீ மட்டும் எப்படி வெளிச்சமாய் எப்போதும்?' என்ற விண்மீன் குழந்தைகளின் கேள்விக்கு, அப்பெரிய (சூரிய) மீன் ஏதோ சொல்ல, " காணாமல் போன எம் மூத்தோர்கள் எங்கேயன உன் அணையாத ஒளிக்கற்றைகளால் கண்டுதான் சொல்லேன்!" என்ற அவர்களின் ஏக்க வினாவிற்கு விடையறியாது மௌனமாய் அந்தரத்தில. சுற்றுது அப்பெரிய மீன்.
கருத்துகள்
கருத்துரையிடுக