புயலுக்கு முன்னான பேரமைதி.
சட்டென இருண்ட மதிய வானம்.
இலையைக்கூட அசைக்காது உறைந்து நின்ற காற்று.
நடமாட்டமே இல்லாது நின்ற சாலை.
இவையனைத்தையும் கலைத்துப்போடும் விதமாய் எழுந்தது ஒரு நலிந்த குரல்; மெலிதான அழுகை, ஈனக்கூப்பாடு, பிரிவின் தவிப்பு, என்ன நிகழ்கிறது என புரியாத பேரச்சம்... இவை அனைத்தின் கலவையாய்.
பிறந்து சில வாரங்களே ஆன நாய்க்குட்டி ஒன்று, காணாமல் போன தாயைத்தேடி நிலைகொள்ளாது அங்குமிங்கும் கால்களும் கண்களும் அலைய, சாலையின் எல்லைகள் பிரிவுகள் பிரிவுகளின் எல்லைகள் என ஓடித்திரும்பி மீண்டும் ஓடி... இத்தனையும் நிகழ்ந்தது என் கண் முன்னே சில நொடிகளில்.
'என்ன கொடுமை இது? தாயைத்தொலைத்த குழந்தை இப்படி தவிக்கிறதே! எங்கிருந்தாவது அவள் ஓடி வந்து குட்டியின் கண் எல்லைக்குள் நிழலாடமாட்டாளா?' என கலவையான நினைவுகளோடு, கவலையோடு சில நொடிகள் நின்று பார்த்தேன்.
'அழைக்கலாம்... உணவு / தண்ணீர் தரலாம். தந்தால் வேறெங்கும் செல்லாது இங்கேயே தங்கிவிடும். ஆணா பெண்ணா தெரியவில்லை. வீட்டில் ஒரு ஆண்குட்டி, பெண் குட்டி தேடத்தொடங்கும் வயதில். வாயிற்கதவு தாண்டி இதை உள்ளே அழைத்து இது பெண்குட்டியென்றால் சிக்கல்; சாலையில் தூக்கி "தெரிந்து கொள்ளலாம்" என்றால் தூக்கும் நொடியில் தாய் அங்கு வந்தால்? குழந்தைக்கு ஆபத்து என்று நம்மை தாக்கினால்? அப்படி எதுவும் நிகழாவிட்டாலும், "குழந்தைகளை வளர்ப்பதே பெரும்பாடு" என அவ்வப்போது சலிக்கும் மனைவி, நம் இருவரையும் வெளியே துரத்திவிட்டால்????' என அப்பப்பா, எத்தனை எத்தனை கேள்விகள் என் ஒற்றை மனதில்!
கண்ணிமைக்கும் நொடியில் இவை எதையும் சிந்திக்காத இளைஞனொருவன் தான் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை, சாலையில் நாய்க்குட்டி கண்டு வேகம் குறைத்து நிறுத்தி, சற்றும் யோசிக்காமல் பூப்பந்து போல நேசத்துடன் அள்ளிச்சென்ற அழகுக்காட்சி, 'சே! வாழ்வில் அறிவு அனுபவம் சேர்க்காமல், கேள்விகளையும் கவலைகளையும் சுமக்காமல் அந்த இளைஞன் போல அன்பின் வழி மட்டுமே வாழ்ந்து பார்த்திருக்கலாமோ?!' என ஏங்க வைத்தது.
அந்த நாய்க்குட்டிக்குழந்தை தன் குவிந்த வாயை வான் நோக்கி உயர்த்தி அழுதது போல ஒரு கேவல் என்னுள் எழ, அனுபவ அறிவு அதை அடக்கி, நின்ற இடத்திலிருந்த வாழ்வை நீட்டக்க என்னை உந்தித்தள்ள, அந்த நாய்க்குட்டி மட்டும் தங்கிப்போச்சு மனதில்.
இறை தேடும் மனம் ஒவ்வொன்றுமே அந்த நாய்க்குட்டிதானே!
(Images used here for illustration only. Copyright may lie with respective owners)
கருத்துகள்
கருத்துரையிடுக