பரமனின் சிரிப்பு மாறவில்லை துளியும்!
பரமன் கழுத்துப்பாம்பும் அது சீண்டிய கருடனும் அருகருகே கிடந்தன.
கருடன் அலகினால் கீறிய பாம்பும், பாம்பு தீண்டிய கருடனும் குற்றுயிரும் குலையுயிருமாய் அருகருகே கிடக்கையில் நிகழ்கிறது இந்த உரையாடல்:
'சௌக்கியமானுதான கேட்டேன்?!'
"பரமன் கழுத்து தந்த பாதுகாப்புல கிண்டலால்ல கேட்ட!"
'பேச்சு பேச்சா இருக்கையில ஏன் பாய்ஞ்ச?'
"அவருக்கும் நியாயம் தெரியும்னு நம்பினேன். அதான் பாய்ஞ்சேன்..."
'என்ன ஆச்சு பாத்தியா...?'
"என்ன ஆவப்போவுது? பரமன சேரப்போறோம்..."
'சரிதான்'.
இரண்டும் இறந்து போயின.
சீண்டுதலும் சீறுதலும் - இதில் பரமனின் பொறுப்பு என்ன?!
பாம்பின் வேலையை அது பார்க்க, கருடனின் வேலையை அது பார்க்க, அதனதன் வாழ்க்கை அதனதின் பாட்டில் போய்க்கொண்டிருந்திருக்கும் அல்லவா?
பாம்பை தின்பதற்காகவே கருடன் என்று பரமனும் விதித்ததில்லை.
இரையொன்று கண்டால் இறங்கித்தாக்கும் கருடனுக்கு பாம்பென்ன பழுதென்ன? உணவொன்றுதானே அதன் குறி?
தர்க்க நியாயங்கள் வாழ்க்கைக்குதவாது என்பதாகவே 'யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே!' என்றாகி இருந்தது.
பாம்புக்கென்ன வேலை பரமனின் கழுத்தில்?
உவமான உவமேயங்கள் பின் நாம் உணவு மறந்து ஓடிக்கொண்டிருப்பதை சற்றே நிறுத்தி, இதை சிந்திப்போமே...
உயிரனைத்தையும் நேசிக்கச்சொன்ன வாழ்வியல், கடவுள் வழி இதை போதிக்க வாகனமாகவும் அணிகலனாகவும் அஸ்திரமாகவும் நிழற்குடையாகவும் கொடியாகவும் அவற்றை உள்ளிழுத்து, இருக்குமிடத்தில் அவையெல்லாம் இருக்கும்வரை சௌக்கியமாய் இருப்பதுபோலே நாமும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே என்பதை 'இருந்துகாட்டிய' இறைகளிங்கு ஏராளம்.
பஞ்சபூதங்களே கடவுள்கள் என்று தொடங்கி, காற்றின் கடவுள், நீரின் கடவுள், நிலத்தின் கடவுள், நெருப்பின் கடவுள், ஆகாயத்தின் கடவுள் என மருவி, பின் 'என் கடவுள் வேறு உன் கடவுள் வேறு!' எனப்பிரிந்து, பிரித்து... இருந்த இடம் விட்டு வெகு தொலைவு வலசை தேடி நகர்ந்து, வந்து சேர்ந்த இடம் எந்த இடம் என்று தெரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தைகளாய் மனித இனம் மட்டும் இன்று வாழ்வை தொலைத்து உக்கிரமாய் நிற்கையில்... ஏனைய உயிர் எதுவும் இடம் விட்டு, இனம் விட்டு தொலைதூரம் போய் தடம் மறந்து தொலைந்துபோனதாய் வரலாறில்லை.
மொனார்ச் என்கிற வண்ணத்தி இனம், முதல் தலைமுறை வலசை செல்ல கிளம்பி, சேர்வதென்னவோ நான்காம் தலைமுறை மட்டுமே (மூன்று தலைமுறைகள் பயண காலத்திலேயே மரித்துப்போகும். நான்காம் தலைமுறைதான் சேருமிடம் சேரும்).
இவற்றை தடம் மாறாது வழி நடத்தும் இறை நம்மை மட்டும் கைவிட்டுவிடுமோ என்ற அச்சம் ஏன்? 'தலையிலிருந்து நான், மார்பிலிருந்து நீ...' என கால்வரை விகிதாசாரம் ஏன்?
இத்தனை இடைவெளியில் இறையை தொலைத்த நாம் ஏன் தொலைந்துபோனோம் இன்று?
இன்னும் புரியாதது போலவே மேலும் மேலும் தொலைந்துகொண்டிருக்கிறோம்.
பரமனின் சிரிப்பு மாறவில்லை துளியும்!
வலசை: 'மேலான' இடம் தேடி இடம் பெயர்தல் :-)
கருத்துகள்
கருத்துரையிடுக