தீபாவளி பட்டாசு.
அணு குண்டுகள் வெடிக்கும் ஓசை கேட்டிருக்கிறீர்களா?
காது கிழியும் அளவு சத்தமும், அதே அளவு உடல் அதிர்வும் தரக்கூடிய ஒற்றை வெடி அது.
"சைனாலேந்துதான் வாங்கணுமா?!
இந்தியன்டா! புறக்கணிப்போம்டா!!
பட்டாச இல்லடா, சைனா பட்டாச மட்டும்தாண்டா!!!'
சிவகாசி தொடங்கி ஆந்திரா, தெலங்கானா தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் பட்டாசு தொழிற்சாலைகள் பல, குடிசைத்தொழிலாக இயங்கி வருகின்றன.
தினக்கூலிக்காக, அருகிலுள்ள கிராமங்களில் வேலை வாய்ப்பு இன்றி / உடல் உழைப்பு தர இயலாத / நலிந்த... பெண்கள், முதியோர்கள், சிறார்கள் என சரவெடி முதல் மத்தாப்பு வரை செய்து தர ஆட்கள் ஏராளம்.
அது என்ன சாபமோ தெரியவில்லை. இவர்களில் பலரது வீடுகளில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை...
கடந்த இருபது ஆண்டுகளில் எத்தனை பட்டாசு ஃபேக்டரி தீ விபத்துகள்? உயிர் போய், கை போய், கண் போய் என இழப்புகள்?
புள்ளி விபரம் எதுவும் இன்றுவரை பொது தளங்களில் இல்லை.
"யானைகள் நடக்கையில் சிற்றெறும்புகள் மிதிபட்டு சாவது இயற்கை நியதிதானே?" என்பது பாழ்பட்ட பட்டறிவு...
கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை. யானை (அதன் தடத்தில்) மிதித்து எறும்பும் சாவதில்லை!
இது வாழ்வறிவு.
ஆனால், நாம் தீபாவளி வெடி வெடிக்க ஏன் அவற்றை உருவாக்கும் தொழிலாளர்கள் இறக்கவேண்டி இருக்கிறது? இன்று வரையில்?
இந்தியராய் இருப்பது, தேச பக்தியில் முழங்குவது மிக நன்று.
"மனி"தராய் இருப்பதும் மானுடப்பற்றில் முழங்குவதும், செயலாற்றுவதும் அதனினும் நன்று!
"வெடிகளையே புறக்கணிப்போம்!" என்ற முழக்கம் ஏன் இன்றுவரை உரத்து ஒலிக்கவில்லை?
'குடிசைத்தொழிலில் நெருப்பு பிடித்தால் குடிசைகள் எரிவதும், கூலித்தொழிலாளர்கள் வேவதும் இயல்புதானே' என்று யதார்த்தம் பேசுவதாய் சுற்றித்திரியாமல் முதலில் அங்கு உழைக்கும் தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் உயிர்ப்பாதுகாப்பு அளிக்க ஏன் தொழில்நுட்ப வல்லரசான நம் நாட்டில் இயலாமல் இருக்கின்றோம்?
செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பும் நம்மால் இயலாத அருஞ்செயலா இது?
புள்ளாகிப்பூடாகி பறவையாகி பல் மிருகமாகி... பல நிலைகள் உயர்ந்து மேன்மையான மனிதப்பிறவி அடைந்து, அதில் பல மனிதர் வாழ சில மனிதரை காவு தருதல்... கவலை ஏதுமின்றி கடந்துபோதல்...
இதற்காகவா இத்தனை நிலைகள்? இத்தனை இன்னல்கள்?
அணு குண்டுகள் வெடிக்கும் ஓசை கேட்டிருக்கிறீர்களா?
காது கிழியும் அளவு சத்தமும், அதே அளவு உடல் அதிர்வும் தரக்கூடிய ஒற்றை வெடி அது.
பல வருடங்களாக தீபாவளியின் 'அரசன்' இந்த வெடிதான்.
இதனால்தானோ என்னவோ இன்னாட்டு மன்னரெல்லாம் டமார செவிடாய் இன்றுவரை நம்மைச்சுற்றி நம் புறக்கணிப்பால், கவனக்குறைவால், அலட்சியத்தால் உயிரிழக்கும் எத்தனையோ உயிர்களின் ஓலம் நம் காதுகளைத்துளைப்பதில்லை.
ஆலை விபத்துகள், மலக்குழி மரணங்கள், வன்புணர்வு மரணங்கள், சாதி சமூக ஏற்றத்தாழ்வு உந்தும் மரணங்கள... பட்டியல் பெரிது...
ஊடகங்களும் இவற்றைப்பற்றி பேசுவதில்லை. அவர்கள் நமது கவனத்துக்கு கொண்டுவரத்துடிக்கும் வெற்று விஷயங்களையும் ஏன் விழி பிதுங்க, கழுத்து நரம்புகள் புடைக்க, கத்திக்கத்திப்பேசுகிறார்கள் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்!
இனி வரும் சில ஆண்டுகளின் பண்டிகைகளாவது வெடிகள், வாண வேடிக்கைகள் இல்லாது நடந்தால் மட்டுமே நமக்கு கேட்கும் திறன் ஓரளவாவது கிட்டும்.
ஒரே ஒரு கேள்வி:
ராணுவத்திற்கு மகனை அனுப்பிவிட்டு, வயிறு வளர்க்க உயிராபத்து தொழில்கள் செய்யும் தகப்பன்மார்களும் தாய்மார்களும் நிறைந்த நம் நாட்டில், எல்லையில் அந்த வீரனின் உயிர் எதிரியின் கண்ணி வெடியில் சிக்குண்டு இறப்பதற்கும், அவனது தாயோ தகப்பனோ நம் பட்டாசு ஆலைகளில் வெடி மருந்து பற்றியெரிந்து இறப்பதற்கும் / யார் வீட்டு மலக்குழியிலோ முடங்கி மிதப்பதற்கும் நம் பார்வையில், அணுகுமுறையில் ஏன் மலையளவு வித்தியாசம்?
இதுவா நம் முன்னோர்கள் கண்ணீராலும் உதிரத்தாலும், அகிம்சையாலும் கட்டிக்காத்து நமக்கு பெற்றுத்தந்த சுதந்திரம்?
ஒரே ஒரு கேள்வி என்று சொல்லி இரண்டு கேள்விகள் கேட்பதும் சுதந்திரம்தானோ?
இதுவே மூன்றாவது கேள்வியோ?
?
Favourite destination for people of the world for a loooong time, we have become a "Questi"nation of late. Everybody wants to question something or other but nobody wants to do / does anything to bring the needed change!
#myfestivalsarecrackerfree
அப்போ நீங்க?
கருத்துகள்
கருத்துரையிடுக