முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு வல்லிய செல்ஃபி கதா!

 


'பாரீஸ்ல ஈஃபில் டவர் முன்னாடி புலன் மங்கும் மாலையில், சைன் நதிக்கரையில், ஒளிரும் வண்ண விளக்குகளுடன் மெல்ல நகரும் படகுகளின் பிண்ணனியில் நாமிருவரும் ஒருவரின் கரம் பற்றி ஒருவர் '

- ஒரு வல்லிய செல்ஃபி கதையானு!


அந்த ஏரியாவுக்கு நான் குடிவந்த புதிது.

நடுத்தட்டு, அடித்தட்டு, மேல்தட்டு வீடுகள் கலவையாய் சிதறியிருக்கும் ஒரு புறநகர்ப்பகுதி்.


இரண்டாம் நாள் அதிகாலை.

நாற்பதுகளின் அருகில் ஒரு களையான பெண்மணி விடிகாலையில் ஒரு நடுத்தட்டு வீட்டு வாசல் கூட்டி கோலமிட்டுக்கொண்டிருந்தார்.


பாந்தமாய் புடவை, வட்ட முகம், அமைதி, மகிழ்ச்சி நிறைந்த முகம், இவ்வளவும் அதிகாலை கிளறொளியில் சித்திரமாய் மனதில் படிய, ஒரு அலுவலுக்காக வெளியில் கிளம்பினேன்.


இரண்டடி தாண்டியிருப்பேன்; அவரது வீட்டுக்கு எதிரில் சைட் ஸ்டாண்ட் இட்ட பைக் மீது யாரோ அமர்ந்திருப்பது கோட்டோவியமாய் தெரிந்தது.

அவர் கோல மங்கையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். வயது கண்டுபிடிக்கும் அளவு வெளிச்சம் அப்பகுதியில் இல்லை.

நடையை சற்றே மெதுவான தாளத்திற்கு மாற்றி, கடைக்கண்ணால் பார்த்தால்... அந்த அம்மா அவரை அவ்வப்போது ஏறெடுத்துப்பார்ப்பதும் அவர் முகத்தில் புன்னகைக்கீற்று தவழ்வதும் பதிந்தது.

வீட்டின் உள்ளே நடமாட்டம் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை.


கடந்து போக முடியாமல் கடந்து  போனேன்.


திரும்ப வந்தால், நேர்த்தியான கோலம் ஒன்று அங்கு தரையில் கிடந்தது.

முன்பு கண்ட காட்சி என்னுள் வரைந்த கோலம் வேறாக இருந்தது.


மறுதினம் அதிகாலையிலும் இது தொடர்ந்தது. நேற்று பைக்கின் மீது அமர்ந்திருந்தவர் இன்று பைக்கில் சாய்ந்து நின்றிருந்தார். அது மட்டுமே வித்தியாசம்.

அவர்களது வயது மனதை நெருட அன்றும் கடந்து போனேன்.


சில மாதங்களாயிற்று ஏரியா புரிபட. எனக்குதான் அப்படி. என் மனைவிக்கு அல்ல!

அக்கம் பக்க பெண்கள் குழந்தைகளுடன் அவளுக்கு இணக்கமான தொடர்பு இழைகளை ஏற்கனவே நெய்திருந்தாள்.


ஒரு நாள் மாலை நான் வீடு திரும்புகையில் வட்ட முக பாந்தப்பெண்மணி கையில் சிறு பை ஒன்றுடன் வெளியேறினார்.

கடந்து உள்ளே போய் 'யாரு?' என்றேன்.

'நம்ம ஏரியாதாங்க. நல்ல பெண்மணி.  சாந்தா. வறுமைக்கோட்டில் அவ்வப்போது முழுகி... வீட்டு வேலை செய்றாங்க. கொஞ்ச நேரம் பேசிகிட்டிருந்தோம். போகும்போது பழைய காய்கறி கொஞ்சம் தந்தேன். நன்றியோட வாங்கிட்டுப்போறாங்க!' என்றாள் மலர்வாய்.

'பாத்து பழகும்மா. யார் யார் எப்படின்னு தெரியாதில்லையா?' என்று... நகர்ந்தேன்.


அதன் பின் அலுவல் காரணமாய் தொடர் பயணங்கள். வீட்டில் இருப்பதும், இருந்தாலும் அதிகாலை வெளிச்செல்லுதலும் இல்லாத பொழுதுகள்.


சில மாதங்கள் கழித்து அருகில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி வாங்கி திரும்புகையில் அவர்களை பார்த்தேன்.


பைக்கை தள்ளிக்கொண்டு அவரும், அருகில் பாந்தமான புடவையில் சாந்த முகம். பார்வைப்பறிமாறல்களோடு, உரசாத இடைவெளியில் வாகன இரைச்சலுக்கிடையில் சித்திரம்போல் இதுவும் நினைவில் படிந்துபோயிற்று.


'எதுவோ நடக்கிறது. எதுவாயிருந்தால் என்ன?' என்று மறந்து என் நாட்களில் முழுகிப்போனேன்.


சில வாரங்கள் முன் ஒரு மாலையில் வீட்டில் நுழைந்தபோது என் வருகையில் கவனமின்றி ஆழ்ந்த துயர சிந்தனையில் என் மனைவி (அடுத்தது காட்டும் கண்ணாடி போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் அவளது).


கவனக்கலைப்பு செய்தேன்.


கண்ணீர் திரையிட்ட கண்களோடு என்னை பார்த்தாள்.


சற்றே கலவரமாய் 'என்ன ஆச்சும்மா?' என்றேன்.


என் நினைவில் படிந்திருந்த சில கோட்டோவியங்களை மேலும் வண்ணமயமாக மாற்றும் ஆற்றல் அவள் சொன்ன கதைக்கு இருந்தது அப்போது எனக்கு தெரியவில்லை.


'சாந்தா கணவருக்கு கொரோனாவாம்! ஒரே அழுகை போனில்... தைரியம் சொல்லி ஸ்வாப் டெஸ்ட் பண்ண சொன்னதே நாந்தான். ஆனால் எனக்கும் கஷ்டமா இருக்குங்க. என்ன மனுஷி? என்ன வாழ்க்கை? ஏன் இப்படி??' என்றாள்.


'கடவுள் அப்பப்போ கஷ்டப்பட்றவங்கள இன்னும் சோதிப்பான். ஆனா கைவிடமாட்டான்மா. கவலை வேண்டாம்னு சொல்லு' என்று ரஜினி டயலாக்கை உதிர்த்து நகர்ந்தேன்.


மனதில் ஏனோ அந்தப்பெண்மீது 'பாவமே!' என்கிற உணர்வே வரவில்லை.


சில வாரங்கள் கழித்து நான் வீடு திரும்புகையில் அந்தப்பெண் வீட்டு கேட்டை ஒரு கையில் திறந்து மறு கையில் அந்த பைக் மனிதரின் முதுகை அழவணைத்து வீட்டுக்குள் செல்வது புதிய கோட்டோவியமாய் படிந்தது.


வீட்டினுள் மனைவியிடம், 'அந்த அம்மா வீட்டுக்காரருக்கா கொரோனான்னு சொன்னே?' என சந்தேகமாய் கேட்டேன்.


'ஆண்டவன் கைவிடலைங்க. சரியாய்டிச்சு. செத்த முந்திதான் போன் பண்ணாங்க' என்று மலர்ந்தாள்.


'அந்த ஆளா?!' என்ற கேள்வியை உதிர்க்காமல் நகர்ந்தேன்.


அன்று இரவு உணவுக்கு பிந்தைய எங்கள் உரையாடல் அவர்களைப்பற்றியே இருந்தது.


கணவர் பெயர் ராசேந்திரனாம். காதல் திருமணமாம். ஏராளமான எதிர்ப்பை தாண்டி என்பதனால் குடும்ப சப்போர்ட் இருபுறமும் இல்லையாம். இரண்டு குழந்தைகளாம். மிகச்சிறிய வீட்டில் அந்தப்பெண் அவ்வப்போது கிடைக்கும் வீட்டு வேலைகளை செய்தும் அவரது கணவர் சுவரோவியங்கள் வரைந்தும் குடும்பம் வளர்க்கிறார்களாம்.


கேட்டுக்கொண்டிருக்கையிலேயே பழைய கோடுகள் அழிந்து புத்தம்புதிய சித்திரமொன்று மனதில் உருவாகத்தொடங்கியது.


அழகிய புள்ளிக்கோலம் அது, அந்தப்பெண. தினமும் வாசலில் இடும் கோலம்போலவே நேர்த்தியாய்.


ஆனாலும் ஒரு புள்ளி மட்டும் மிஸ்ஸிங்; கோலத்தின் மையப்புள்ளி; அந்த அதிகாலை பைக் காட்சிகள்...


இன்னும் சில வாரங்கள் கழித்து மார்க்கெட்டில் காய்கறி தேர்வு செய்கையில், சோசியல் தொலைவில் முக கவசத்துடன் ஒருவர், 'சார்!' என்று கூப்பிட்டார்.

கவசத்தினுள் இருப்பது யாரென்ற கேள்வி எழுமுன், 'நம்ம தெருதான் சார். வீட்டம்மாக்கு உங்க வீடு நல்ல பழக்கம் சார். கொரோனால படுத்திருந்தப்போ பணம் பொருள் உதவி மட்டுமில்லாம அப்பப்போ போன்லயும் உங்க வீட்டுக்காரங்க பேசி தைரியம் தந்தாங்களாம் சார். பெரிய மனசு சார்! நன்றி சார்' என்றார்.


'அது ஒன்றும் பெருசு இல்லீங்க ராசேந்திரன். மனுசனுக்கு மனுசன் இதுகூட செய்யலன்னா எப்படி!' என கவசத்துக்குள் நான் புன்னகைத்தது அவருக்கு தெரிந்தது.


விடைபெற்று நகர்ந்தேன்.


மனைவியிடம் காய்கறிப்பையை தந்து சொன்னேன், 'ராசேந்திரன பாத்தேம்மா

 நல்ல மனுஷர்!' என்றேன்.


அன்றும் உணவுக்குப்பின் அவர்கள் கதைதான்.


மனைவி மீது மாறாத காதலாம். பதினெட்டு வயது சாந்தாவை மணந்து இருபத்தி நான்கு ஆண்டுகள் கடந்தும் குறையவில்லையாம். 


'அவங்க சந்திச்ச கதைய கேட்டா "ஹையோ! இதுதான் காதலா!' ன்னு தோணுங்க! சாந்தா பள்ளிக்கூடம் போனதில்ல. ஒரு நாள் விடிகாலைல வீடு தெளிச்சி கோலம் போடுகையில் எதிரே நிழலாடியதாம். நிமிர்ந்து பார்த்தால் சாலையின் மறுபுறம் இருளோடு இருளாக சைக்கிள் ஒண்ண பிடிச்சிகிட்டு கோலமிடும் கை மீதான பார்வையை நகர்த்தாமல் ராசேந்திரன்!'


புள்ளிகள் கோலமாகி கோலம் காதலாகி கசிந்துருகி எதிர்ப்பு தாண்டி வேறூரில் கல்யாணமாகி குழந்தைகளாகி இன்று 'அடுத்த வார செலவுக்கு என்ன செய்வது!' என சிந்தனை பிசையும் நாட்களிலும் சாந்தா அதிகாலையில் கோலமிடுவதும், ராசேந்திரன் தள்ளி நின்று ரசிப்பதும் தொடர்கிறதாம்!


என் சிந்தனையில் உருவாகியருந்த கோலத்தின் மையப்புள்ளி, தானே தன்னை பொருத்திக்கொண்டது!


கழிவிரக்கமற்ற வாழ்வின் பொழுதுகளில் நிதம் நிதம் துவைபட்டு பிழிபடும் மனிதர்களின் உயிரிழைகளிலும் காதலின் ஈரம் இன்னும் உயிர்த்திருக்கிறது.


வசதி வாய்ப்புகள் வாழ்வில் உயர உயர, நாம் காதலித்த காதலையே  காலத்தில் புறந்தள்ளி ஓடும் நிகருலகில் இவர்களைப்போன்ற மனிதர்களும் வாழ்கிறார்கள்தானே!


அன்றைய இரவின் உரையாடலின் பின்னான நாட்களில் எங்கள் பொழுதுகளில் மீண்டும் காதலின் ஈரம் பட்டு பூக்கள் பூத்துக்கொண்டிருக்கின்றன.


'பாரீஸ்ல ஈஃபில் டவர் முன்னாடி புலன் மங்கும் மாலையில், சைன் நதிக்கரையில், ஒளிரும் வண்ண விளக்குகளுடன் மெல்ல நகரும் படகுகளின் பிண்ணனியில் நாமிருவரும் ஒருவரின் கரம் பற்றி ஒருவர் ' என நாங்கள் கற்பனை செய்திருந்த கனவு செல்ஃபிக்கு அவசியமில்லாமல் செய்துவிட்டார்கள் சாந்தாவும் ராசேந்திரனும்!


(Image may be subjected to copyright)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்