அந்த மந்திரவாதிக்கு உறக்கமே வரவில்லை.
தொலை தூர கிரகங்களை எல்லாம் மந்திரக்கண்ணாடி கொண்டு காண முடிந்த அவனது ஆற்றலும் அறிவும் அவனுக்கு உணர்த்திய உண்மை அத்தகையது!
உண்மைகளில் பலவகை உண்டு; பொய்யான உண்மை, பொதுவான உண்மை, சில நேரங்களில் உண்மை, எக்காலத்திலும் மாறாத உண்மை.
அவன் கண்டுபிடித்த உண்மை, எக்காலத்திலும் மாறாத வகை; அன்று இருந்த பொதுவான உண்மைக்கு முற்றிலும் முரண்பட்ட உண்மை.
அவனது கண்டுபிடிப்பின் ஆதாரம் தந்த உந்துதலில் அவன் தன் சிந்தனையையொத்த மனிதர்களிடமும், தேடல் மிகுந்த மனிதர்களிடமும் பகிறத்தொடங்கினான்.
"கடவுளோடும் கடவுளின் பிரதிநிதிகளுடனும் மோதுகின்ற இந்த அறிவிலியை இழுத்து வாருங்கள்!" என ஒரு பிரதிநிதி ஆணையிட, கூண்டிலேற்றப்படுகிறான்.
"கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா? நமக்கு ஒவ்வாத முரண்கருத்துகளை பரப்பி மக்களை குழப்புகிறாயாமே?"
'இல்லங்கையா.... நான் கண்டறிந்ததை பகிர்கிறேன் ஐயா. அவ்வளவுதான்'
"குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா இல்லையா?"
'மாற்றுக்கருத்து வேறு முரண்கருத்து வேறு ஐயா. என்னது மாற்றுக்கருத்து மட்டுமே. முரணா இல்லையா என்பதை காலம் முடிவு செய்யும்...'
"அறிவிலி! காலத்தையே படைத்தது எம் கடவுள்! நம் கடவுள்! அவர் படைத்த நம் பூமியை சுற்றிதானே மற்ற கோள்களெல்லாம் செல்கின்றன? சூரியனும் அவ்வாறுதானே கிழக்கிலிருந்து மேற்கு நகர்ந்து நம் பூமிக்கு பகலும் இரவும் தருகிறான்? நீ சார்ந்த கூட்டமும்கூட இதைத்தானே இத்தனை ஆண்டுகளாய் ஏற்றுக்கொண்டிருக்கிறது?!
அதென்ன விசித்திரமான கோட்பாடு உனது?! சூரியன்தான் மையமென்றும், நம் இறை படைத்த பூமி அதை சுற்றும் பல பந்துகளில் ஒரு பந்து மட்டுமே எனவும்
முட்டாள்தனமான கோட்பாடு?
தவறென்று ஒப்புக்கொள்! இந்த கோட்பாட்டை இனி ஒருவருக்கும் பகிரமாட்டேன் என உறுதி கூர்!! இன்றே, இப்போதே!!!"
கலிலியோ மறுக்கிறார்.
"மன்னிப்பு கேட்கும் வரை வீட்டுச்சிறை!" என்று தீர்ப்பாகிறது.
வீட்டுச்சிறைக்குள் முடங்கியபடி ஒன்பது ஆண்டுகளை கழித்து ஒரு சாதாரண தினத்தில் மரித்துப்போகிறார்.
மன்னிப்பு என்ன ஆனது?
முன்னூறு ஆண்டுகள் கழித்து அவரிடம் மன்னிப்பு கோருகிறது கடவுளின் பிரதிநிதி அமைப்பு!
Such is the Power of Eternal Truth!
இந்த மாமனிதனின் கல்லறை முன் சில நிமிடங்கள் மௌனமாய் அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு எனக்கு கிட்டியதும் இவர்வழிவந்த அறிவியலாளர்களின் அசுர உழைப்பினால்தான்.(இத்தாலி நாட்டின் ஃப்ளோரன்சு நகரில் Basilica of Santa Croce இல் உள்ளது. இது இவருக்கு இரண்டாவது கல்லறை! ஏன் இரண்டாவது என்று இன்னொரு பதிவில் பார்ப்போம்:-))
அந்த வழி வந்த அறிவியல், இன்று பேராசை பெருவணிகத்தின் பிடியில் சிக்குண்டு, நம்மிடம் "சிகரெட் பிடிப்பது உடல் நலத்தை பாதிக்கவே பாதிக்காது. சிகரெட் புகை நுரையீரலுக்கு நல்லது!" என 1960களிலும், "ரவுண்ட் அப் களைக்கொல்லி, விவசாயிகளின் நண்பன்! புற்றுநோய்க்கும் இதற்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை!" என இன்றும் கலிலியோவின் கல்லறையில் கற்பூர சத்தியம் செய்துகொண்டிருக்கிறது!
அறியாமைச்சிறையில் நாமெல்லாம் வாழ்நாளை கழித்தபின்பு சில நூறு ஆண்டுகள் கழித்து 'மன்னித்துக்கொள்ளுங்கள் மாண்டோரே!' என அறிவியலும் மன்னிப்பு கேட்கும்.
அதுவரை, 'உல்லாச உலகம் உனக்கே சொந்தம், நுகரடா நுகரடா நுகரடா!' என நம் சந்ததியும் ஆடிப்பாடித்'திரிய'த்தான் போகிறது!
*Heresy:
ஒரு மதத்தின் நடைமுறை மெய்ம்மைகளோடு ஒத்தமையாத கருத்து அல்லது கோட்பாடு; முரண்கருத்து.
(Images may be subject to copyright. Used only for illustrative purpose here)
கருத்துகள்
கருத்துரையிடுக