மருதவனம் ஒரு அழகிய சிற்றூர். தஞ்சையிலிருந்து பஸ் பிடித்து மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வந்து அங்கிருந்து ஒரு நாளில் நான்கைந்து ட்ரிப்புகள் மட்டுமே செல்லும் களப்பாள் பேருந்தில் ஏறி, எழிலூர் வழியே சால்வனாறு பாலம் தாண்டி மருதவனம் கைகாட்டியில் இறங்கி, ஒதியத்தூர், சங்கந்தி செல்லும் மினி பஸ் பிடித்தால் பத்தே நிமிஷத்தில் வீட்டு வாசலில் இறங்கிக்கொள்ளலாம்.
சில ஆயிரம் குடியிருப்புகள், ஒரு பழைய சிவன் கோவில், அம்மன் கோவில், பெரியாச்சி கோவில், சில குளங்கள், காவேரிப்பாசன வாய்க்காலை ஒட்டியோடும் குறுகலான சாலைகள், காலத்தைப்பூசிக்கொண்டு நிற்கும் வீடுகள், ஒரு தொடக்கப்பள்ளி, நூலகம், நெல் கொள்முதல் நிலையம், போஸ்ட் ஆபீசு, ஓரிரண்டு பெட்டிக்கடைகள், புதிதாய் ஒரு உயர்நிலைப்பள்ளி, இவை தவிர நெல் வயல்கள், கண்கொள்ளும் தொலைவு வரை.
சிற்றூர்களுக்குள் ஏட்டுக்கல்விநிலையங்கள் நுழையாத காலத்தில் வீட்டெதிரே இருந்த ராமர் மடம், தன்னார்வல ஆசிரியர்களால் சொற்பமான மாணவர்கள் அ, ஆ பழகிய இடம், பழகிய தமி்ழ், இன்று புல் மண்டிய திடலாகி, புல்மேயும் பசுக்களின் வாயிலேறி காம்புவழி இறங்கி பக்தியையும் கல்வியையும் இன்றும் பரப்பிக்கொண்டிருக்கிறது. விரைவில் மனைக்கட்டாகி அதன்மேல் புதிதாய் ஒரு வீடு வந்துவிடும்போல தெரிகிறது.
மாட்டு வண்டியும் பார வண்டியும் கிறீச்சிட்டு கீறிச்சென்ற தடத்தில், ஏர்க்கலப்பையின் கொலு இட்ட கோட்டின் இருபுறமும் மாடுகளின் லாடக்கால்கள் குத்திச்சென்ற தடத்தில் சைக்கிள் டயரும் செருப்பறியாத மனிதக்கால்களும் பதிந்து ஒத்தடம் தந்த மண்சாலைகள், அவையனைத்தையும் தன்னுள் புதைத்துக்கொண்டு தார் வழிய ஓடிக்கொண்டிருக்கிறது, எதிர் திசையில் விரைந்தோடும் வாகனங்களின் அடியில்.
மண் சார்ந்த மனிதர்களின் ஈரமொழிகளும் இன்று வணிகக்காற்றில் காய்ந்து மொடமொடக்கும் ரூபாய் நோட்டுக்கள் போல சீவனற்று...
ஒரு காலத்தில் குறுவை, தாளடி பின்னே உளுந்து என நில்லாது சுழன்ற வேளாண்மை இன்று மேட்டூரின் நீரிருப்பை கவலையோடு பார்த்து, அவ்வப்போது சாலை மறியலும் செய்கிறது. குறுவை குறைந்துபோய் தாளடி மட்டுமே, அதுவும் டிராக்டர் ஏந்திவரும் நாற்றுத்தட்டுகளில் வளர்ந்த நெல்வித்து (நல்வித்து அல்ல!) கொண்டுதான்.
கல்விப்பட்டத்தின் நூல்பிடித்து பெருந்தொலைவு கடந்து குடியேறிய விழுதுகள் எல்லாம் ஒவ்வொன்றாய், கொரோனா காலத்தில் கூட்டம் கூட்டமாய் ஊர் திரும்பி... வீடு பழுது பார்த்தல், புதுவீடு கட்டுதல், கழனி வயல் சீரமைத்தல் என கால நதியோட்டத்தின் அடுத்த இழுப்புக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்குது மருதவனம்.
நாற்பது ஆண்டுகளாய் தன் வெளிப்பூச்சு மாறாத இந்த சிற்றூரில், கஜா புயல் புரட்டிப்போட்ட பிந்தைய மாதங்களில் மெ ல் ல தொடங்கிய அரசு சீரமைப்பு பணிகள் மின்சாரத்தை மீட்கவே எட்டு மாதங்கள் எடுத்துக்கொண்டாலும் பொறுமையோடு இருந்து ஒத்துழைத்த மருதவனத்தில், இன்று ரிலையன்ஸ் ஜியோ 1.2 GB இணைய வேகத்தில் சீறிப்பாய, சென்ற வாரம் அமேசான் நிறுவனம் தன் முதல் பார்சலை டெலிவரி செய்திருக்கிறது...
காலத்தை துரத்தாமல் இதுவரை நகர்ந்துகொண்டிருந்த என் சிற்றூரின் வாழ்வு, இனி பெருவணிகம் இணையவழி ராஜபாட்டையிட்டு விரித்திருக்கும் பெருநுகர்வு வலையில் விரும்பி உள் நுழைந்து... வரும் நாட்களில் 'இன்றே இப்போதே வேண்டும்!' என்கிற நோயில் சிக்கப்போவதை தெளிவாய் உணர்ந்தும் என்னால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது... இழந்தபோன ஊரின் நினைவாக சில மருத மரங்களை என் தோட்டத்தில் வளர்த்தாலும் அந்த ஊராகுமா இம்மரங்கள்?
ஆமை புகுந்த வீடும் அமேசான் புகுந்த சிற்றூரும்...
கருத்துகள்
கருத்துரையிடுக