மலை மரம்.
மா மரம்.
பூ மரம்.
அரச மரம்.
மலைப்பூவரச மரம்.
வளர வளர பெருக்கும் இதன் சுற்றளவு, வருடங்கள் ஆன பின் பலர் கூடி கட்டிப்பிடிக்க நினைத்தாலும் இயலாத ஆகிருதி கொண்ட மரம்.
இது நன்றி மரம்!
தன் இருப்பிடத்திலேயே விதையாய் விழுந்த நாளிலிருந்து இன்று பூமியின் கீழும் மேலும் குடை வளர்த்து நிற்கும் நாள் வரையிலும், தான் மலைப்பூவரசாக மாற உதவிய அனைத்துயிர்க்கும் நன்றி சொல்லி, தன் பூ, இலை, காய், கனி, காய்ந்த சுள்ளி என இது உதிர்ப்பதெல்லாம் நன்றியன்றி வேறில்லை.
இந்த பதிவை வாசிப்பதை சற்றே நிறுத்தி, இங்கு நான் இணைத்துள்ள ஒளிநிழல் படங்களை பாருங்களேன், இந்த "மா" மரத்தின் நன்றியை உணர!
ஒரு நாள் அதுவே உதிர்ந்து விழுந்தாலும் நன்றியாகவே விழும், பூமிக்கு பாரமின்றி மெள்ள மெள்ள.
நன்றி நன்றி நன்றி பாலு சார்.
இவருக்கும் எனக்கும் என்ன உறவு? சொந்தமா பந்தமா?
எதுவுமில்லை ஆனால் ஏதோ ஒன்று.
என்னதெனத்தெரியாத அந்த ஏதோ ஒன்று என்னுள் மறுகி மறுகித்தவித்தது இந்தப்பூமரம் உதிர்ந்த நாளிலிருந்து.
அடுத்த சில நாட்களுள் என் வயதான, நெருங்கிய உறவினர் ஒருவரும் உதிர்ந்து போனார்.
இறுதியாக அவர் முகம் காண, அஞ்சலி செலுத்த, அங்கு சென்று அவர் கண்ணாடிப்பேழையில் படுத்திருக்க நான் அருகில் நிற்க...
மனம் கனத்ததே தவிர அந்த முந்தைய உள்மறுகல் இல்லை...
வெளியே வந்து தனியே அமர்ந்து இதைப்பற்றி சிந்திக்கையில் ஒன்றை உணர்ந்தேன்...
'நமக்கு யார்யார் என்னவெல்லாமாக எப்போதெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தே மறுகலோ மெலிதான துயரமோ நம்மை சூழ்கிறது' என்பதே அது.
சற்றே சிந்தித்துப்பாருங்களேன்... நமது சொந்த பந்தங்களில் அன்பினாலோ பந்தத்தாலோ நமக்கு வழித்தடியாக இருந்தவர்கள் கூட வாழ்வின் கட்டாயங்களால் நாம் பகிர்வு தேடும், துணை தேடும், ஆறுதல் தேடும், உறக்கம் தேடும் எல்லா நேரத்திலும் நம்மோடு இருந்திருக்க வாய்ப்பில்லை. நம் எண்ணங்களை, உணர்வுகளை ஒவ்வொரு முறையும் பிரதிபலித்திருக்க வாய்ப்பில்லை.
இசைக்கும் பாடலுக்கும் அதற்கு உயிர்கொடுத்தவர்களுக்கு மட்டுமே அந்த வரம், அந்த இடம்.
அந்த வகையில் என் வாழ்வில் நான் நவரச தருணங்களை தாண்டுகையிலெல்லாம் என் கைபிடித்து தாண்ட துணை செய்தது இவரது குரல், இன்னொரு மேதையின் இசையோடு இயைந்த இவரது குரல்!
அந்தக்குரலே ஓய்ந்து போன அந்த நொடியில், வாழ்வின் நிலையாமையும் நம் நிலையாமையும் முகத்திலறைந்து கேசம் பற்றி உலுக்கும் நொடியிலும் என் மனம் தேடியது இவரது குரலையே துணையாக.
அதனால்தான் என் உள்கிடந்த ஏதோ ஒன்று மருகி மருகி தவித்தது!
இவரை ஊடக வெளிச்சம் தாண்டி நானறியேன். என் இருப்பே இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், காற்றில் அலைந்த இவரது குரல் என்னுள்ளே சுதி சேர்க்கப்பட்ட ஏதோவொன்றினில் இறங்கியிருக்கிறதுதானே!
மன வேதனை மெல்ல மெல்ல விலகி இன்று இவரது இசை வாழ்வை, நினைவை கொண்டாடும் கோடி ரசிகரில் நானும் ஒருவனாகிப்போனது எதனால் தெரியுமா?
அதை தெரிந்துகொள்ள, என் எண்ணவோட்டத்தை நீங்களும் கடக்கவேண்டும்...
"வாழ்வில் இவர் ஏறிய மேடையனைத்திலும், பாடிய பாடலனைத்திலும், பொதுவெளியில் உதிர்த்த சொற்கள் அனைத்திலும், இவர் உதிர்த்ததெல்லாம் நன்றி மட்டுமே, நன்றி தவிர வேறொன்றுமில்லை.
குரலில் அன்பு, உச்சரிப்பில் நிதானம், மனதின் நன்றி தந்த கனிவு ததும்பி, வழியும் பார்வை. இவரது சொற்களின் களம் எவராக இருப்பினும், ஐந்து வயது குழந்தையானாலும் எண்பது வயது முதியவரானாலும்.
Gratitude is the word, the code that he lived by. The reason why he is so loved by!
வாழ்வில் எவ்வளவோ உச்சம் தொட்ட ஒருவர் இவ்வளவு நன்றியோடு எவரையும் மகிழ்வோடு மட்டுமே அணுக முடிகையில், மானுட வெள்ளத்தில் ஒரு துளியான நான்?"
கடந்த சில நாட்களாக என் சொற்களின் வேகம் சற்றே குறைந்திருக்கிறது. எண்ணங்களில் நன்றி மிகுந்திருக்கிறது... மறுபடி பாலு சாரின் பாடல்களை கேட்டு இன்னும் மகிழ்வாய் உணர முடிகிறது, எனது தினங்களை ஆராதிக்கமுடிகிறது...
உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே
உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே என்ன
நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
...
நலம் புரிந்தாய்
எனக்கு நன்றி உரைப்பேன்
உனக்கு நான் தான்
உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே
அமரம்ம் நீங்க பாடின
பாட்டைத்தான் படிச்சேன்
ஞான தங்கமே.
இனியும் படிப்பேன் தங்கமே ஞானத்தங்கமே!
கருத்துகள்
கருத்துரையிடுக