ஒரு மன நல மருத்துவரிடம் தம் மீன் குழந்தையை அதன் மீன் பெற்றோர்கள் அழைத்து வந்தனர்.
'என்ன சிக்கல்?' என்றார் மருத்துவர்.
'நாங்க பட்ட கஷ்டம் எதுவும் இவன் படக்கூடாதுன்னு பாத்து பாத்து வளக்கிறோம். எங்களால முடியாதத இவனாவது பண்ணுவான்னு எதிர்பார்க்கிறோம். ஆனாலும் இவன் மரம் ஏற மறுக்கிறான். கொஞ்சி, கெஞ்சி, மிஞ்சி கூட try பண்ணிட்டோம், யார்கூடவும் பேச மாட்டேங்கிறான், தனியாவே கிடக்கான்!'
அவர் அவர்களுக்கு சொன்ன தீர்வே இப்பதிவு.
எந்த காகமும் தன் குஞ்சுகள் பொன்னிறத்திலில்லாது கருகருவென இருப்பதை நினைத்து வெம்புவதில்லை.
ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு என கற்பிதம் செய்கிறோம், நம் குழந்தைகளையும் அவ்வாறே நினைத்து வளர்க்க முயல்கிறோம் :-)
Special என்கிற உணர்வு, காக்கையானாலும் அதற்கு அதனது குஞ்சு special என்ற உணர்வில் உண்டாக்கப்பட்ட பழஞ்சொல் இன்று நமது எதிர்பார்ப்புகளின், ஏமாற்றங்களின் இடையில் நசுங்கிப்போய் நிற்கிறது, நம் குழந்தைகள் போலவே!
இந்தப்பதிவின் drift புரிந்தவர்கள் முதுகில் தட்டிக்கொண்டு உற்சாகமாய் தொடருங்கள். மற்றவர்களும் என்னோடு தொடர்ந்து இப்பதிவில் பயணப்படுங்கள் :-)
1970களில் பிறந்த எனது தலைமுறை வரையில், முதல் குழந்தை பிறந்தவுடனே குடும்ப பொறுப்பு எனும் ஒரு மாயக்கயிறு அதனது தொப்புள்கொடியுடன் பிணைந்துகொள்ளும், ஆண் குழந்தையானால். பெண் குழந்தையானால், 20-23 வயதுக்குள் வேறிடம் போகவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் பிணைந்துகொள்ளும்.
நம் பெற்றோர், தங்களுடைய எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும், வலிகளையும், பயங்களையும் பாதை காட்டும் கருவிகளாக நமக்கு தந்து, மீறினால் பல வழிகளில் தண்டித்து...என நாமும் எங்கோ ஓரிடத்தில் அவரவர் வாழ்வில் கரை ஒதுங்கிவிட்டோம்...என்கிற நினைப்பில் இதே time tested model ஐ இன்றைய தலைமுறையிடம் திணிக்க நினைக்கையில் தொடங்குகிறது சிக்கல்.
நமது தலைமுறை, கடிவாளமிடப்பட்ட தலைமுறை. இன்றைய தலைமுறை Born Free தலைமுறை.
இவர்களின் சமூக தொடுபுள்ளிகள் அனைத்திலும் (social touch points) எதிர்ப்புகள் இதனாலேயே எழுகின்றன, வீடு முதல்!
உணவு, உடை, வசிப்பிடத்தில் தேவைக்கும் ஆசைக்கும் ஓதுக்கவேண்டிய இடம் தொடங்கி சகலத்திலும் சிக்கல் கண்ணுக்கு தெரியாத சிலந்தி இழைபோல பற்றிப்படர்ந்து இறுக்குவதை உணரக்கூட நேரமின்றி அவரவர் இலக்கு நோக்கி அவரவர் ஓட்டம்...
விழாக்காலங்களில்கூட, விழா நாட்களில்கூட, வீட்டில் அனைவரும் கூடுவது அரிதாகிப்போகிறது.
மருத்துவமனைகளிலாவது இன்று இதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வரும் காலங்களில் இதுவும் மாறிப்போகும்...
மாற்றம் ஒன்றே மாறாதது என்கிற ஆதி தத்துவத்தை உணராமல், பழகாமல் நம் வாழ்வு நம்மிடமிருந்து நழுவிக்கொண்டிருப்பதைக்கூட உணராமல் trivia பின்னால் பக்தர்களாக அலைகிறோம் (where entertainment is the ONLY God regardless of the garbs in which it appears).
"பொறுப்புகள் இருப்பதால்தானே வரையறைகள் வகுக்கிறோம்? அவற்றுள் வாழ்கிறோம்?
வாழ்வென்பதே வீணா? மகிழ்வாய் அனுபவிக்க, கொண்டாட ஒன்றுமே இல்லையா!"
என்ற கேள்விகளும் கவலைகளும் நமக்குள் எழுவது இயல்பே.
"வாழ்வென்பது ஒரு மகா உற்சாகமான கொண்டாட்டம், ஒவ்வொரு நாளும், நொடியும்" என்று நான் சொன்னால் 'ஏய் ஜல்லியடிக்காதே, தனக்கு வந்தாதான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்... உனக்கு கஷ்டமே வந்ததில்லையா?!' என்று நீங்கள் முழங்குவதும் இயல்பே.
ஐன்ஸ்டைன் ஒரு மாபெரும் அறிவியல் ஆளுமை. உலகம் இவர்போல இன்னொருவரை கண்டதில்லை என்ற அளவுக்கு உலகம் பற்றிய நமது அறிவியல் புரிதலை பல மடங்கு உயர்த்திய வித்தைக்காரர் இவர் என்பதும் நாம் அறிவோம்.
இவரது சில மேற்கோள்களின் வாயிலாக, இவர்போன்ற இன்னும் சில ஆளுமைகளின் மேற்கோள்களின் வழியாக இப்பதிவை அதன் மையப்புள்ளிக்கு நகர்த்துகிறேன், Be with me!
ஐன்ஸ்டைன்:
"இந்த வையகத்தில் முடிவில்லாது நீள்வது இரண்டு மட்டுமே, ஒன்று நமது வான்வெளியின் எல்லை. இன்னொன்று மனித இனத்தின் முட்டாள்தனம். எனக்கு வான்வெளி பற்றிமட்டுமே உறுதியாக தெரியவில்லை!"
"வாழ்வதற்கு இரண்டே வழிகள்தான். ஒன்று, நாம் காணும் நிகழ்வுகள் அனைத்தும் அற்புதங்கள் என (கொண்டாட்டமாய்) வாழ்வது. இன்னொன்று, எதுவுமே அற்புதமில்லை என (நிலைகுலைந்து) வாழ்வது"
"ஆறு வயது குழந்தைக்கு எளிதாய் ஒன்றை நம்மால் விளக்கமுடியவில்லை என்றால் நமது புரிதல் அரைகுறையானது என்பதே நிஜம்"
"நேற்றின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள். இன்று வாழ். நாளையை எதிர்பார். கேள்விகேட்பதை மட்டும் நிறுத்தாதே"
"இன்றைய ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு என்ன தெரியாது என கண்டுபிடிக்கவே கேள்விகளை பயன்படுத்துகிறார்கள். இதை விட்டுவிட்டு, அவர்களுக்கு என்ன தெரியும்? எவற்றை தெரிந்துகொள்ளும் திறன் இருக்கிறது? என கண்டுபிடிக்க கேள்விகளை பயன்படுத்தவேண்டும்"
கலீல் கிப்ரான்:
"உங்கள் குழந்தைகள் உங்களது குழந்தைகளே அல்ல!. வாழ்வெனும் பேராற்றல் தன்னைத்தானே நீட்டித்துக்கொள்ள (உங்கள் வழியே) படைத்துக்கொண்ட மகன்கள் / மகள்கள் அவர்கள்! உங்களது அன்பை மட்டுமே நீங்கள் அவர்களுக்கு கொடுக்க இயலும், உங்களது சிந்தனைகளை அல்ல. ஏனெனில் அவர்களுக்கான சிந்தனைகளை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள்.
உங்களால் அவர்களது உடல்களுக்கு வீடு அமைத்துத்தரமுடியுமே தவிர அவர்களது ஆன்மாக்களுக்கு அல்ல. ஏனெனில் அவர்கள் (அவர்களது ஆன்மாக்கள்), நாம் காணமுடியாத எதிர்காலமெனும் வீட்டில் வாழப்போகின்றன'
பழமொழி ஒன்று (சொன்னவர் யாரென தெரியவில்லை. கண்டிப்பாய் ஐன்ஸ்டைன் அல்ல!):
" பிறப்பில் அனைவருமே ஜீனியஸ்தான். ஆனால் மரமேறத்தெரிந்தால்தான் மீன்கள் ஜீனியசாக முடியும் என்று வரையறுத்தால், மீன்கள் தம் வாழ்நாள் முழுவதும் தாம் முட்டாள்கள் என்ற குற்ற உணர்வோடு வாழவேண்டியிருக்கும்!"
குழந்தைகள் மீன்களில்லை. அவர்களது ஜீனியசை நாம் வரையறுக்க முயல்வது வீண். அவர்கள் நமது குழந்தைகளே இல்லை!
நம் அனைவரையும் இணைக்கும் ஒற்றைப்புள்ளி 'மனிதம்' மட்டுமே!
மனிதர்கள் பற்றியும், மனிதம் பற்றியும் ஐன்ஸ்டைனின் இரு புகழ்பெற்ற மேற்கோள்களை இப்பதிவில் படங்களாக இணைத்துள்ளேன்.
மனிதம் பழகுவதை நம் வீட்டிலேயே தொடங்குவோமே, நம் குழந்தைகளிடமும், வாழ்க்கைத்துணையிடமிருந்தும்!
நாம் எல்லோருமே ஜீனியஸ் தான். கண்டிப்பாக நம்மால் செய்யமுடியும். நான் சொல்லலீங்க, ஐன்ஸ்டைன் சொன்னாரு :-)
கருத்துகள்
கருத்துரையிடுக