கைதே! கஸ்மாலம் என்று சாய்ஸ் வார்த்தைகளில் அந்த இத்தாலியனை நான் திட்டிக்கொண்டிருந்தது, ரோமாபுரிப்பட்டணத்தில் கிறிஸ்துவர்களை நீரோ மன்னன் சிங்கங்களுக்கு இரையாக்கும் விளையாட்டு கோலாகலமாய் நடத்திய கொலூசியம் என்ற வட்ட வடிவ அரங்குக்கு வெளியே.
வேலையின்மை, பசி, பிணி மறக்க தன் நாட்டு மக்களுக்காக நீரோ வடிவமைத்த விளையாட்டுத்திடல் இன்று ஒரு பாதுகாக்கப்பட்ட பண்டைய சின்னம்.
அங்கதான் அந்த கஸ்மாலத்தோடு மல்லுகட்டினேன்.
காலை எட்டு மணிக்கு கொலீசியம் வந்து சேர்ந்து வெஜிடேரியன் சிற்றுண்டி நா வரள தேடி, 'கண்டேன் பிட்சாவை!' என இவனை கண்டடைந்து தெளிவாய் சொன்னேன், 'Une Pizza, Verdura' (சாருக்கு ஒரு வெஜ்ஜீ பிட்சா!).
'Si Si' என வாயெல்லாம் பல்லாக சிரித்து ஒரு ஓரு பிட்சாவை எடுத்து ஒரு தட்டில. இட்டு, 'Pizza Verduraaaa' என நீட்டினான்.
முதல் கடியிலேயே மாமிசத்துணுக்கு நெருடியது பல்லில், பொடிப்பொடியாய் முட்டைக்கோஸ் துருவல் போல.
அதிர்ந்துபோய் பிரித்துப்பார்த்தால் மீன் செதில், துணுக்கு துணுக்காய்!
மரித்துப்போன வெஜீடேரியன் உணர்வுகளை குவித்து துர்வாச முனி பார்வையோடு 'Verdura???? THIS IS TUNA, NOT VEGETARIAN!' என ஆத்திரமும் பசியும் தொண்டையை அடைக்க, கூவினேன்!
அதே சிரிப்போடு பிட்சாவை என்னிடமிருந்து வாங்கி, நிதானமாய் பிரித்து மேய்ந்து அதனுள் ஒளிந்திருந்த ஒரே ஒரு இலையை உருவி எடுத்து, 'SI!! Verrrrrrrduuuuuuuraaaaaaa!' என்று திருப்பிக்கொடுத்தான்.
அதன்பின் நிகழ்ந்ததைத்தான் நீங்கள் பதிவின் துவக்கத்தில் படித்தீர்கள்!
சிங்கங்கள், கை கால்களில் பூட்டிய விலங்குகள் தடுக்க உயிர்தப்ப ஓடி முடியாது இடறி விழுந்த கிறிஸ்தவ கைதிகளை குருதி ஒழுக வேட்டையாடுவதை கைதட்டி ஆர்ப்பரித்து ஐபிஎல் மேட்ச் போல ஒரு மனிதக்கூட்டம் பார்த்து ரசித்த அந்த மைதானம், இன்று அமைதியாய் வரலாற்று சாட்சியாய்...
நம் வாழ்வில் பெரும்பாலான தருணங்களில் நாம் எந்த ஒரு நிகழ்வையும் ஆதரிப்பதோ எதிர்ப்பதோ, அந்த பிட்சா வெஜிடேரியனா இல்லையா? என்பதில் அவரவர் கோணத்தின் நியாயம் போலத்தானே!
கருத்துகள்
கருத்துரையிடுக