"பூமி போல ஏமாளி கிரகமொன்று சிக்காதா?" என எல்லைகளற்ற விண்வெளியில் துழாவுது ஒரு கூட்டம்.
அண்டவெளியனைத்தையும் அலசி ஆராய்ந்து நாம் இதுவரை கற்றிருப்பது, பூமியில் நம்மைச்சுற்றி வியாபித்திருக்கும் சகலதும் பற்றிய நம் அறிதலை விட பெரிதானது!
நம் கண்ணருகே உள்ள உலகை, அதன் அற்புதங்களை, புதிர்களை, உணர முடியாத நாம், நம் காலடியில் தலையாட்டும் அற்புதங்களை, வானில் சிறகடிக்கும் அற்புதங்களை உணர முடியாத நாம், நம் காலடியையும் உச்சி வானத்தையும் இணைக்கும் மரங்கள் முதல் காடு மலைமுகடுவரை எதையும் உணர முடியாத நாம், இடைவிடாது வேற்றுலகங்கள் தேடுவது ஏன்?
காசினி (Cassini) என்ற செயற்கைக்கோளை பூமியிலிருந்தே ரிமோட்டில் இயக்கி, சனி கிரகத்தின் ஆரஞ்சு வளையங்களுக்கிடையே துல்லியமாக புக வைத்து, சனியின் உட்பரப்பை படமெடுக்க உதவும் அறிவு போதுமா நாம் நலமுடன் வாழ?
இன்று இந்தியாவில் 43 சதவீதம் பேருக்கு(!) மன அழுத்தம் சார்ந்த பாதிப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி அழுத்தத்தை இன்னும் அதிகமாக்குகின்றன...
சக உயிரின் துயரை, அவற்றுக்கே தெரியாமல் சாவித்துளை வழியே பார்த்து ரசிக்கும் பெருங்கூட்டமாக நம்மை மாற்றிய அறிவுதான் வளர்ச்சியா?
உணர்வின் வழிமட்டுமே பெருகக்கூடிய ரகசியமாக இனப்பெருக்கத்தை இயற்கை வடிவமைத்து கட்டிக்காப்பதால்தான் இன்றுவரை பல்லுயிரும் தழைத்து வாழும் இடமாக நம் பூமி. (அறிவினால் மட்டுமே இது நிகழக்கூடிய நாளில் இங்கு மனிதர்களுக்கே தேவை இருக்காது...)
இதில் ஒற்றை உயிர்க்கூட்டம் மட்டும் அறிவின் இறகுகளைப்பற்றிக்கொண்டு, சினை முட்டை வங்கி, 'கரு தாங்கி' பெண்கள் என பல வசதிகளை செய்து கொடுத்து நம்மை 'உற்பத்தி பெருக்கும்' இயந்திரங்களாக மாற்றியிருப்பது, height of the irony.
ஓடு, ஓடு, ஓடு தேயும் வரை ஓடு. இளைப்பாற சாவித்துவாரம் வழியே குரூரம் கண்டு களி என, யார் வகுத்த தடம் இது என உணராமலே, ஓடுபவர் அனைவரும் வேறு யாரையோ காரணமாய் கற்பிதம் செய்து பல தளங்களில் காறி உமிழ்ந்து, ஓடுதலை தொடர்கிறோம்...
உணர்வை புறந்தள்ளி, அறிவை மட்டுமே தூக்கிப்பிடித்து பயணிக்கும் நம்மிடம், "நெஞ்சுக்கூடின் அவசியம் என்ன?" என்று கேட்டால் அறிவியல் சார்ந்த விடைகள் ஆயிரம் இருக்கும் ரெடியாய்.
இந்த அறிவியல் எதுவும் அறியாத, தெரியாத ஒரு சாதாரண தகப்பன், உணர்ந்திருக்கிறான் இதன் தேவையை, வேறு விதத்தில்...
அறிதலுக்கும் உணர்தலுக்கும் உள்ள வேறுபாட்டை நம் நெஞ்சாங்கூட்டில் அடித்துச்சொல்ல இவனை விட உகந்த அறிஞன் எவனும் என் உணர்வுக்கு புலப்படவில்லை.
இவனது மனைவி கருத்தரிக்கிறாள்.
குறைப்பிரசவம்.
நோஞ்சான் குழந்தை.
அறிவியல் இக்குழந்தையை Incubator இல் வைத்து காக்க முனைகிறது. Incubator இல் சில நாட்கள் சில மணிநேரங்கள் கிடத்தி கிடத்தி எடுக்கிறது.
குழந்தைக்கு வேண்டிய தாயின் கதகப்பையும், அது தரும் பாதுகாப்பு உணர்வையும், பிரசவித்த வேதனையையும் தாண்டி பாலூட்ட முடியாது திணறும் தாயின் பெரு வலியையும் அறிவியல் உணராதே!
அவன் உணர்ந்திருந்தான்.
மருத்துவர்கள் மறுத்தும் கேளாமல், பச்சிளங்குழந்தையை வாரி தோளில் போட்டுக்கொண்டு, மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தான்.
குழந்தைக்கு வேண்டிய கதகதப்பை, பாதுகாப்பை, தகப்பனின் நெஞ்சாங்கூடும் தரும் என்ற உணர்தலில், வாரி அள்ளி மார்பின் மீது போட்டுக்கொண்டு, துண்டால் போர்த்துக்கொண்டு...ஒரு நாளல்ல இரு நாளல்ல, பதினெட்டு மாதங்கள் இவ்வாறே நாள்முழுதும் கிடத்தி...குழந்தை முழு நலம் பெற்றது!
அறிவியல் Incubator ஐ காட்டியது. உணர்வு, தகப்பனின் நெஞ்சாங்கூட்டை காட்டியது.
இந்த உணர்வை எங்கு தொலைத்தோம்?
(புகழின் உச்சம் தொட்டபின் எந்த மனிதனுக்கும் ஒரு சறுக்கல் வந்தே தீரும். சறுக்கலில் அமிழ்ந்து போவதும் தப்பி மீள்வதும் பல காரணிகள் சார்ந்தது. அப்படி ஒரு உச்சம் தாண்டிய ஈராண்டு சரிவில், படங்களற்ற நாட்களில், இப்படித்தான் கழிந்தது இவனது பொழுதுகள்...)
கருத்துகள்
கருத்துரையிடுக