ஒரு 20+ வயதுள்ள பெண் கருவுற்றால் அவளது உடல்நிலை + மன நல மாற்றங்களை தாங்கிக்கொள்ள, பாதுகாக்க, போற்றிக்கொண்டாட, கணவனும், குடும்பமும், சுற்றமும் இருக்கும்.
அவளது கணவன் தகப்பனாகப்போகும் பெருமித்த்தில் மிதப்பான்.
அவளது தகப்பன் தான் தாத்தனாகப்போகும் மகிழ்வில் கனிவான்.
அம்மாவும் மாமியாரும் 'நம் வீட்டுக்கு புதிய வரவு ராஜகுமாரனா, ராஜகுமாரியா?' என விவாதிப்பார்கள்.
ஒவ்வாமை, வளைகாப்பு, மூச்சு விட சிரமம், நடக்க சிரமம், படுக்க சிரமம், உறங்க சிரமம்... என்றாலும் மகிழ்வாய் அந்தப்பெண் தாயாக 39 நெடிய வாரங்கள் தயாராவாள்.
15 வயது பெண்குழந்தை?
அந்தப்பெண்குழந்தை ஏழு மாத கர்ப்பம்.
தாய் இல்லை.
தகப்பனும் தாத்தனும் மாறி மாறி சீரழித்ததில் அந்தச்சிறுமி கருவோடு சேர்த்து ஒவ்வாமை, வீங்கிய வயிறு, உயிரைப்பிசையும் பயம், வலி, இன்னும் என்னவெல்லாமோ சுமந்து வாழ்கிறாள் மதுரையில். தமிழ் வளர்த்த மதுரையில், அறம் வளர்த்த மதுரையில், மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரையில்.
உயர்நீதிமன்றத்தில் அவளது உறவினர் தொடர்ந்த வழக்கில் நேற்று ' மருத்துவ ஆலோசனையின் பேரில் கருவை கலைத்துவிடலாம்' என நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அரக்கத்தனமான மனிதர்கள், மறிதாபிமானமற்ற மருத்துவர்கள் (ஏழு மாதம் சிசு வளர அவர்களில் ஒருவரது பார்வையில்கூட அவளது வீங்கிய வயிறு தெரியவில்லையா?), சக மனிதர்களுக்கு என்ன நேர்ந்தால் என்ன? என்ற அக்கறையில் நெருப்புக்கோழி மனிதர்களாய் அவரவர் இருப்பில் தலையை புதைத்துக்கொண்டு சுற்றம்.
இரு தினங்களுக்கு முன்புதான் கேரளாவில் தன் தந்தையினால் கற்பழிக்கப்பட்டு கருவுற்று கரு கலைத்த இன்னொரு பதினைந்து வயது சிறுமிக்கு நீதி கிட்டத்தொடங்கியிருக்கிறது. அவளது மாமன் ஒருவரின் உதவியால் அவள் நீதியை அணுக, அவளது தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தனது வாயின் உள்புறத்தை கடித்து, குருதி சுவையில் மயங்கி, தன் சதையை தானே தின்னும் நாய்கள் போல வாழ முற்பட்டுள்ள நமக்காகவா பாரதி பாடினான் இந்த ஜெயபேரிகை பாடல்?
காக்கை குருவி எங்கள் ஜாதி,
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
காணும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்
...
கொட்டடா ஜெயபேரிகை கொட்டடா...
இந்த பேரிடர் நேரத்தில் பலப்பல வீடுகளில் பாதுகாப்பற்ற சூழலில், பொது இடங்களிலும், ஏன், தம் சொந்த வீட்டிலேயே பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் வன்கொடுமைகளுக்கு ஆளாவது செய்திகளில் வராமலா இருக்கிறது?
தவறு செய்பவர்கள் சில ஆயிரம் பேர் என்றால் மீதமுள்ள நூற்று முப்பது கோடி சொச்சம் ஏன் நம் பாராமையினால், அமைதியினால் இவர்களுக்கு துணைபோகிறோம்?
இது நம் நாட்டில் நடக்கும் இந்தக்குற்றத்துக்கு மட்டுமல்ல, எந்தக்குற்றத்துக்கும் பொருந்தும்.
தன்னை காத்துக்கொள்ள இயலாத பெண்களிடம், குழந்தைகளிடம், முதியவர்களிடம் வன்முறையை அனுதினமும் கட்டவிழ்த்து விடும் நாட்டில் இதை தடுக்கும் வாய்ப்பும், வசதியும், அதிகாரமும் இருந்தாலும் வேடிக்கை மட்டுமே பார்த்து கடந்துபோகும் நாம் அனைவருமே தம் குருதியில் சுவையில் மயங்கி தம்மைத்தாமே உண்ணும் பசித்த நாய்கள்தான்.
தறிகெட்ட தேசமென்றால் தட்டிக்கொட்டி சரிசெய்யலாம், கட்டுக்குள் கொண்டுவரலாம். குறி கெட்ட தேசமென்றால்?
ஒரு நிர்பயா மரித்துப்போன நிலப்பரப்பில் பல ஆயிரம் நிர்பயாக்கள் அனுதினமும் பயந்து வாழ, என்ன தவம் செய்தோம் நாம்?
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்...
நம் வேதங்களும் வாழ்வியலும் கற்பித்ததை அறைகுறையாய் கற்று அதையும் பாதியில் நிறுத்திவிட்டோம், பேய்களாய் தங்கிவிட்டோம்...
கருத்துகள்
கருத்துரையிடுக