முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாதுகாப்பில்லாத தேசம்



நம் நாட்டிலுள்ள அனைத்து அரசுகளுக்கும்,  கட்சிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் ஒரு எளிய இந்தியனின் விண்ணப்பம்:

ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட ஒரே காரணத்தால், குடும்பப்பொறுப்பை ஒற்றையாய் சுமக்கும் ஏழை அம்மாவுக்கு உதவியாய் சாலையில் தேநீர் விற்ற பதின்வயது சிறார்களை கவர்ந்து சென்று, காப்பகத்தில் வைத்திருந்து, தாயின் + நல்மக்களின் எதிர்ப்பு கண்டு பின்வாங்கி, மீண்டும் தாயிடம் சேர்க்கின்றது ஒரு அமைப்பு, அரசின் உதவியோடு.

'இனிமேல் குழந்தைகளை வேலைக்கு அனுப்பமாட்டேன், நன்கு வளர்ப்பேன், பள்ளிக்கு அனுப்புவேன்' என அந்த அம்மா உத்தரவாதம் தந்தபிறகு.

தேநீர் விற்ற சிறார்களுள் ஒருவர் ஆணுடை அணிந்த சிறுமி,

சீர்குலைந்த சமூக ஆண்களின் விஷமப்பார்வையிலிருந்து மானம் காக்க ஆணுடை உதவும் என்கிற நம்பிக்கை...

'நீ வேலைக்குப்போய் பசங்கள காப்பாத்தவேண்டியதுதான? ஏன் இப்படி ரோட்ல டீ விக்க வைக்கிற?' என்ற கேள்வி அம்மாவிடம் வைக்கப்படுகிறது.

'குடிகாரர்களும் காம வெறியர்களும் நிறைந்த சமுதாயத்தில் யாரை நம்பி என் குழந்தைகளை தனியே வீட்டில் விட்டுவிட்டு உழைக்கச்செல்வேன்? அது இயலாத காரியம் என்பதால்தானே அவர்களை படிக்கவைக்க முடியாமல் வீட்டிலிருந்தபடியே உழைத்து, எனக்கு வேலையில் உதவ வைக்கிறேன்! ' என்ற அவளது பதில் கேள்வி, நம் அலட்சியத்தின் பெருஞ்சக்கரங்களின் அடியே சிக்கி வழக்கம்போலவே சிதைந்துபோகிறது...

இன்னொரு நிகழ்வில், நேற்று ஒரு சிறுமியை சூறையாடி கொன்று வீசியிருக்கிறான் யாரோ ஒருவருடைய மகன் / சகோதரன் / தோழன்...

நேற்று ஒரு 24 வயது அம்மா, வேலைக்கு போனவள், ஒரு 17 வயதான, யாரோ ஒருவருடைய மகனால்/சகோதரனால்/தோழனால் சீரழிக்கப்பட்டு உயிர்பறிக்கப்படுகிறாள். அவளது கணவன் அவளைக்காணது தேடி ஒரு பெட்டிக்குள் உயிரற்று முடக்கப்பட்டவளை வீடு சுமக்கிறான்.

அவளது அழுகை கூக்குரலும் நம் அலட்சியத்தின் பெருஞ்சக்கரங்களின் அடியே சிக்கி வழக்கம்போலவே சிதைந்துபோகிறது...

கண்ணுக்குத்தெரியாத ஒரு கொலைக்கிருமியிடமிருந்து நம்மை பாதுகாக்க அரசு இயந்திரத்தின் அத்தனை சக்கரங்களும் முடுக்கிவிடப்பட்டு, நம்மை வீட்டுக்குள்ளேயே பத்திரமாய் காப்பாற்ற பாடுபடும் எந்த அரசுகளும் ஏன் இந்த விளிம்பு நிலை மனிதர்களின் உயிர்காக்க, வாழ்வு காக்க, மானம் காக்க திட்டங்கள் செயலாற்றமுடியவில்லை?

மானத்தோடு தன் குடும்ப வயிறு வளர்க்க, நம் நாட்டை பொருளாதார வல்லரசாக்க, வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி  உழைக்க, வெளியில் செல்லும் ஒவ்வொரு தகப்பனும், அம்மையும் இடையறாது வேண்டுவது "வல்லூறுகளின் நடுவே நம் குழந்தைகள் சிக்காது இன்றைய பொழுதும் உயிருடன், நலமுடன் இருக்கவேண்டுமே!' என்பதே!

வண்ணத்தொலைக்காட்சிகள், மிக்சிகள், க்ரைண்டர்கள், வாகனங்கள் விலையில்லாது தரும் அரசுகள் ஏன் இவர்களை சார்ந்திருக்கும் இவர்களது சிறார்களுக்கும், முதியோர்க்கும் 
சமுதாயப்பாதுகாப்பு (சமுதாயத்திலிருந்தும் பாதுகாப்பு) தர "விலையில்லா பகல்நேர பாதுகாப்பு மையங்களை" அமைத்து செயல்படுத்தக்கூடாது?

இந்த மையங்களை அரசுகளும், CSR விதிகளுக்காக லாபத்தை செலவழிகவேண்டிய கட்டாயத்திலுள்ள பெருநிறுவனங்களும் நடத்தட்டுமே?

அவ்வாறு நடத்தினால், விலையில்லா பொருட்களை அவரவர் தேவைக்கேட்ப விலை கொடுத்து அவர்களே வாங்கிக்கொள்வார்கள். அந்த செலவு அரசுகளுக்கு மிச்சம்.

கூட்டிக்கழித்துப்பார்த்தால், இப்போது அரசுகள் விலையில்லா பொருட்கள் வழங்க செலவிடும் தொகையும், பெறுநிறுவனங்கள் சமுதாய மேம்பாட்டுக்காக செலவிடும் லாபத்தின் சிறுதொகையும் இந்த பாதுகாப்பு மையங்கள் நடத்த தேவையான தொகையைவிட குறைவாக இருக்கவும் கூடும்.

ஆனால் பலன்கள் பலமடங்கு:

1. பகல் பொழுதுகளில் நலமான சூழலில், பாதுகாப்புடன் குழந்தைகள்/முதியவர்கள். 

2. அங்கு அவர்களுக்கு கல்வி தருவதும், சத்துணவு தருவதும் மருத்துவம் பார்ப்பதும் எளிது.

3. பெற்றோர்கள் நிம்மதியாய் தாம் வேலை செய்யுமிடங்களில் உற்பத்தி பெருக்குவார்கள்.

4. பாலியல் குற்றங்கள் குறையும்.

5. வயதானவர்களின் உடல்+மன நலம் மேம்படும்.

6. நாட்டின் மருத்துவத்தேவைகள் குறையும்.

7. வேலையில்லாதோர்க்கு நல்லதொரு வேலைவாய்ப்பிடங்களாக இந்த மையங்கள் வளரும்.

8. இன்னும் பல.

'பெரிதினும் பெரிது' கேட்கச்சொன்ன முண்டாசுக்காரனின் வழித்தோன்றல்கள் நாம், இந்தச்சிறிய "அக்கினிக்குஞ்சு" எண்ணத்தை நம்மிடையே நாமே விதைப்போமே... 

இதன் தழல்வீரம், காடெறிக்காது, மாறாக, தீண்டிய இடமெல்லாம் நாடு வளர்க்கும், மனிதம் தழைக்கும்.

பள்ளிக்கூடங்கள் தந்த கடமை வீரர், சத்துணவு தந்த மக்கள்திலகம், ஏழைகளின் வாழ்வை மேம்படுத்த போராடிய திராவிட கட்சிகள், கம்யூனிச சித்தாந்தங்கள், நாடு வளர்க்கப்போராடிய, போராடும் தேசிய கட்சிகள்... இவை அனைத்தையும் இணைக்கும் மையப்புள்ளியாக இந்த 'பகல்நேர பாதுகாப்பு மையங்கள்' அமையட்டுமே.

ஜெய்ஹிந்த்!

மானுடம் வெல்லும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை தரும் பேரன்புடன்,
பாபுஜி.

(பின்குறிப்பு: படம் இணையத்திலிருந்து. இதன் காப்புரிமை யாரிடமாவது இருக்கக்கூடும். இங்கு வணிகமற்ற நோக்கத்திற்காக பயன்படுத்தியுள்ளேன். நன்றி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...