1980களின் ஆரம்பம்.
தஞ்சாவூரின் கருந்தட்டான்குடியில் பாபு என்ற இளைஞர், பஸ் கண்டக்டர், ஒரு டவுன் பஸ்ஸில்.
வீட்டுக்கு ஒரே பிள்ளை.
ஒரு குறிப்பிட்ட ஆண்டின் பஸ் தின விழாவில் அந்த பஸ்சில் பயணம் செய்த 'மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி' மாணவர்கள் டிக்கட் வாங்குகையில் ஏதோ தகராறாகி, கைகலப்பாகி பாபு தாக்கப்படுகிறார். பயணிகள் சிலரும் ஓட்டுநரும் நுழைந்து தடுத்து, வண்டியை நிறுத்தி, மாணவர்களை வலுக்கட்டாயமாக இறங்கவைக்கின்றனர்.
சொற்ப பயணிகளுடன் வண்டி நகர, படிக்கட்டில் ஸ்டைலாக பாபு நின்று விசில் ஊதியதோ அல்லது அவரது உடல்மொழியோ மாணவர்கள் மத்தியில் ஒரு நெருப்புப்பொறி போல விழுந்தது அவருக்கு தெரியவில்லை.
வண்டி நகர்கையில் அவர் படியேறி உள்ளே செல்ல, அவரது காலிலிருந்து ஒரு செருப்பு நழுவி கீழே சாலையில்...
கணநேரமும் சிந்திக்காமல் ஓட்டுநரை வண்டியை நிறுத்தச்சொல்லி விசில் அடித்து, நின்றதும் தாவி இறங்குகிறார்.
செருப்பை எடுத்து நிமிர்வதற்குள் சூழும் மாணவர் கூட்டம் மிருகத்தாக்குதல் நிகழ்த்த, ஏராளமான காயங்களோடும், முறிந்த முதுகுத்தண்டுவடத்தோடும் மீற்கப்படுகிறார்.
ஏழைப்பெற்றோர் அதன்பின் பல வருடங்கள் அவரை சக்கர நாற்காலியில் வைத்து பராமரித்த கண்ணீர்க்கதை என் பால்ய நினைவுகளில் இன்றுவரை ஒட்டடை போல படர்ந்திருக்கிறது.
ஏன் மாணவர்கள் இப்படி கொடுந்தாக்குதல் நடத்தினார்கள்?
ஏன் அவர் அந்த ஒற்றை செருப்புக்காக அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தார்?
ஓட்டுநரும் ஏன் வண்டியை நிறுத்தினார்?
என விடையற்ற பல கேள்விகள்...
சமீபத்தில் ஐக்கிய ராச்சியத்தில் (United Kingdom), Black Lives Matter என்ற பெரும் போராட்டம் ட்ரஃபால்கர் சதுக்கத்தில் நடந்தது. முறையாக அரசு அனுமதி பெற்ற போராட்டம்.
அந்த போராட்ட நிகழ்வுகள் நடக்கையில், வெள்ளை போலீசையும் வெள்ளை அரசுகளையும் ஆதரிக்கும் அமைப்பு ஒன்று அதே இடத்தில் கூடி எதிர்போராட்டம் நடத்த, ஒரே அமளி துமளி, அடிதடி...
இந்த அடிதடியில் ஒரு வெள்ளை இன மனிதன் கறுப்பு இன மனிதர்களிடம் சிக்கிக்கொள்கிறான்.
சரமாரியாக அடி, உதை.
மண்டை உடைந்து ரத்தம் ஓடுகிறது!
'Hey! THIS IS SO WRONG! We are NOT supposed to do THIS!!!' என்ற கூக்குரலோடு ஓடி வருகிறான் ஒரு கருப்பின மனிதன், உடற்பயிற்சிக்கூடம் ஒன்றில் பயிற்சியாளராக வேலை செய்பவன்.
அந்த வெள்ளை மனிதனை மேலும் அடிகள் வாங்கவிடாமல் தடுத்து, அவனை அலேக்காக தூக்கி தனது தோளில் கிடத்தி, திமிறும் தன் கூட்டத்தை விலக்கி, அருகில் நிற்கும் ஆம்புலன்சுக்கு கொண்டு சேர்க்கிறான் அந்த கருப்பு இன மனிதன்!
அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால இடைவெளி...
எங்கோ தவறிய மனிதம் உயிர்பறிக்க, எங்கோ தழைக்கும் மனிதம் உயிர் காக்கிறது, நம் உலகை இன்னும் தடம் மாறாமல் இயங்கவைக்கிறது...
தீரச்செயல்கள் புரிய அதற்குத்தோதான களம் என்று எதுவுமில்லை. பிறக்கையில் யாரும் வீரத்தோடோ கோழைத்தனத்தோடோ பிறப்பதில்லை.
மனிதத்துக்கும், மனிதாபிமான செயல்களை தேவைப்பட்ட இடத்தில், நேரத்தில் செய்வதற்கும் களம் என்று தனியே எதுவும் தேவையில்லை. 'வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்' (பாலகுமாரன் என்று நினைவு), என நாம் வாழ்கையில், வாழும் காலம் வரையிலும் மனிதாபிமானத்தோடு வாழ்வோமே.
நம் உலகில்
குண்டுகள் வெடிப்பது நிற்காது,
யுத்தங்கள் ஓயாது.
பசி, பிணி மூப்பும் தேயாது.
மனிதமும்தான்!
கருத்துகள்
கருத்துரையிடுக