ஓசை என்பது தேவையின் அடிப்படையில் எழுப்பப்படுவது.
தேவைகள் ஓய்வின்றித்தொடரும்போது ஓசை இரைச்சலாக மாறுகிறது.
கண் விழித்து கண்மூடும் இடைவெளியெங்கும் நம் தினங்களை இட்டு நிரப்பியிருக்கிறோம் இரைச்சலினால்.
உரங்கும்போதாவது ஓசையின்றித்தூங்க முடிகிறதா?!
மின் விசிறிகள், குளிர்சாதன எந்திரங்கள், நடுநிசியிலும் வீடருகே விரையும் வாகனங்கள் என இரைச்சல் இங்கு 24*7 ஆகிப்போனது. இத்தனை இரைச்சலினால் அயர்ச்சியாகி தூங்கும்போதும் குறட்டை இரைச்சல்!
குயில்களின் ஓசையும்கூட நம் காதுகளில் சேர்வதற்குள் இரைச்சலில் சிதறிப்போகின்றது...
ஓசை, இரைச்சல் இரண்டையும் தாண்டிய பேரோசையொன்றும் பேரமைதி ஒன்றும் நமக்குள்ளேயே புதைந்துகிடக்கிறது. நாம்நான் கேட்பதாயில்லை.
நம் இதயத்துடிப்பின் ஓசைக்கும் அடுத்த துடிப்பிற்குமான இடைவெளி தரும் பேரமைதியில் நமது ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், தாபங்கள், கோபங்கள் அனைத்தும் நிர்வாணமாய் அலைகின்றன.
அமைதியின் பேரோசையை, அது காண்பிக்கும் இந்த ஆன்ம தரிசனத்தை, தாங்கமுடியாமல் ஒரு பெருங்கூட்டமே அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்கிறது.
மதங்கள், கடவுள்கள், கோட்பாடுகள் எவையும் நமக்கு உண்மையை தரிசிக்கும் ஆற்றலை, பேரோசையை தாங்கிக்கொள்ளும் வலிமையை... தரவே தராது!
மரமேறக்கற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் வாழும் மீன்களாய் நாம் நம்மை பாவிப்பதை நிறுத்தி, 'உனக்கென்ன வேணும் சொல்லு!' என்று நமது இதயத்திடமே கேட்போம். கேட்க கேட்க இதயத்துடிப்புகளின் இடைவெளி அதிகமாகும், பேரமைதி அதில் குடியேறும்.
அமைதியை நோக்கிய நம் பயணம் மட்டும் ஏன் இவ்வளவு இரைச்சலாய்?!
(Image may he under copyright protection, used here for illustration purpose only).
கருத்துகள்
கருத்துரையிடுக