Perfection.
உங்கள் கையில் ஒரு மந்திர தூரிகையும், அட்சயபாத்திரம்போல வண்ணங்கள் நிரம்பிய பாத்திரமும் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
வெட்டவெளியில், நீங்கள் உங்களது உயரத்திற்கான முதல் படியை வண்ணம் குழைத்து தூரிகையினால் வரைகிறீர்கள். அந்த ஓவியப்படி, நிசமான படியாக மாறுகிறது.
மகிழ்வுடன் அதில் ஏறி நிற்கிறீர்கள். மனம் அடுத்த அடுத்த படிகளை வரையத்தூண்டுகிறது.
வரைந்து வரைந்து, நிசமாக மாறிப்போன மந்திரப்படிகளில் ஏறி ஏறி உயரம் தொடுகிறீர்கள். தரையிலுள்ள புழுதி, நாற்றங்களிலிருந்தும் கசகசப்பான சனத்திரளில் இருந்தும் நீங்கள் விலகிய உயரம் உங்களை மகிழ்விக்கிறது.
மகிழ்வோடு படிகள் பல வரைந்து, ஏறி, வரைந்து, ஏறிக்கொண்டே இருக்கிறீர்கள்...
எங்கே செல்லும் இந்தப்பாதை?
எங்கே முடியும் இந்தப்பயணம்?
மலைச்சிகரங்களில் ஏறுவதற்கும் இந்த மந்திரப்படிக்கட்டுகளில் ஏறுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு, மலைச்சிகரம் ஒரு புள்ளியில் முடிந்துவிடும்; இந்தப்படிக்கட்டுகள் முடியாது நீளும்!
கமல்,
மராத் சஃபின்,
சுஷாந்த்,
வான் கா,
அந்தோனி போடெய்ன்...
இன்னும் பலர் நடந்த பாதை, கரணம் தப்பினால் மரணம் என்கிற சாகசப்பாதை, சிலர் இறந்த பாதையும்கூட.
உயர உயர செல்லச்செல்ல, தம்மை சுற்றியுள்ளோரிடமிருந்து விலகி விலகி செல்வர். வேரடி மண்ணோடு உறவாட மிக நீண்ட குனிதல் வேண்டியிருக்கும். குனியமுடியாதோர் உடைந்துபோவர், சுஷாந்த் போல, அந்தொனி பொடோய்ன் போல, குர்ட் கோபெய்ன் போல...
இன்னும் சிலர், கமல் போல, ரோஜர் ஃபெடரர் போல, தான் ஏறிய படிக்கட்டுகளில் முடிந்தவரை பலரையும் ஏற்ற முயல்வர்.
ஒவ்வொரு படியிலும் இவர்களை அறிந்த சிலரேனும் இருக்கையில் படிகளில் சறுக்கல் நேர்ந்தாலும் பயமின்றி முன்னத்தி ஏர்கள் தொடர்ந்து நடப்பார்கள்.
ஒரு மொழியின்செழுமை என்பது அதை பயன்படுத்தும் மக்களின் வாழ்வியலின் கண்ணாடி.
முன் தோன்றி மூத்த நம் குடியில், நம் தமிழ் மொழியில்,
லாபமு லேது
பர்ஃபக்ஷனும் லேது!
கானல் நீர், மாய மான், தோற்றப்பிழை என்றால் உடனே 'புரிஞ்சிடுச்சி!' என கைதூக்கும் நம்மில் பலருக்கு, தமிழில் ஏன் இந்த சொற்கள் வழக்கிலில்லை? என்ற கேள்வி, எழுந்தாலும் அவை ஆர்வமாகவோ தேடலாகவோ மாறுவதில்லை.
லாபம் ஏன் தமிழில் இல்லை என பல மாதங்களுக்கு முன் ஒரு பதிவு இட்டிருந்தேன். இந்த முறை பர்ஃபக்ஷன் பற்றி மட்டும் பார்ப்போம்.
Perfect : early 15c. classical correction of Middle English parfit "flawless, ideal" (c. 1300), also "complete, full, finished, lacking in no way" (late 14c.), from Old French parfit "finished, completed, ready" (11c.), from Latin perfectus "completed, excellent, accomplished, exquisite," past participle of perficere "accomplish, finish, complete," from per "completely" (see per) + combining form of facere "to make, to do" (from PIE root *dhe- "to set, put").
இவ்வளவு வேறு வேறு சொற்களாலும் விளக்கமுடியாத ஒரு குழப்பமான சொல், எப்படி ஒரு வாழ்வியல் சொல்லாக முடியும்?!
நம்மில் பலரும் perfect என்பதற்கு மேற்காட்டிய சொற்களில் ஏதாவது ஒன்றையோ சிலதையோ பொருளாக எடுத்துக்கொண்டிருக்கிறோம்!
கானல் நீரைப்போன்றதொரு மாயத்தோற்றம் கொண்ட இந்த சொல்லின் பின்னே ஓடி அலுத்தவர், களைத்தவர், மாண்டவர் எத்தனை பேர்?
பெரிதினும் பெரிது கேள் என்று பாரதி சொன்னது perfection ஐ நோக்கி நம்மை நகர்த்த அல்ல!
பெரிதினும் பெரிது என சிலவற்றை நாம் வேண்டி, அவை அத்தனையும் அருளப்பட்டால், நாம் என்ன செய்வோம்?
இன்னும் பல வேண்டுமென்று கேட்போம்!
பாரதி வேண்டிய 'பெரிதினும் பெரிது', ஒருமுறை கேட்டு பெற்றபின் வேறு எதுவும் வேண்டியதில்லை என்ற 'பெரிது'!
இந்த கானல் நீரை நம் முன்னோர்கள் எவரும் தொடர்ந்து தேடியதில்லை. அது அவர்கள் வாழ்வியலிலும் இல்லை. அதனால்தான் இந்த (perfect) சொல்லுக்கான நேர் தமிழ்ச்சொல் நம் வழக்கில் இல்லை!
"அப்படி என்றால் சுய முன்னேற்றமே தேவையில்லையா?" என்ற கேள்வி நம்முள் எழுவது இயல்பே!
இதற்கு விடையாக, நமது முன்னோர்கள் வேறொன்றை வாழ்ந்துகாட்டி, முடிவற்றது போல தோன்றும் இந்த முன்னேற்ற மாயப்படிகளுக்கு முற்றுப்புள்ளியும் தந்துவிட்டே சென்றிருக்கிறார்கள்!
'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து'! என்பதே இந்த முற்றுப்புள்ளி.
ஆதி மனிதன், உணவு மற்றும் பாதுகாப்பு தேடி கண்டங்கள் தாண்டி நெடும்பயணங்கள் செய்தபோதெல்லாம், எங்கு இவை இரண்டும் கிடைத்ததோ அங்கேயே தங்கிவிட்டான், இன்னும் படிகள் வரைந்து ஏறி ஏறி செல்லலாம் என வாழ்நாட்களை வீணடிக்காது!
அன்றிலிருந்து இன்றுவரை வாழ்வில் உச்சம் தொட்டதாய் நாம் நினைத்த மனிதர்கள் பலர், ஒரு திடீர் நாளில் அத்தனையும் விட்டுவிட்டு எஞ்சிய வாழ்நாட்களில் முற்றிலும் வேறான ஒன்றை, ஒன்றை மட்டுமே, மகிழ்வாய் செய்து வாழ்ந்ததும் நாம் அறிந்ததுதான்! (மெக்சிகோ தேச அதிபர் ஒருவர் தனது பணிகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி வேளாண்மை செய்ததும், ஒரு கட்டத்தில் முழுதாய் வேளாண்மைக்குள் நுழைந்ததும் வரலாற்றுப்பதிவுகள்!)
சே என்று அன்போடு உலகம் கொண்டாடும் புரட்சியாளன், க்யூபா விடுதலையோடு நின்றிருந்தால் இன்றும் நம்மிடையே இருந்திருப்பான்! அவன் தனக்காக அடுத்தடுத்து வரைந்துகொண்ட, பல தென்னமெரிக்க நாடுகளின் 'விடுதலை' என்ற, பல படிகளில் ஒன்றில், ஒரு பள்ளியில் படுத்து ஓய்வெடுக்கையில் கொல்லப்பட்டான்...
1970களில் கமல் என்கிற பர்ஃபக்ஷனிஸ்ட், ஒரு ஆண்டில் பல படங்கள் பாலசந்தருடன் செய்தும் நிறைய நேரம் மிச்சமிருக்க, அந்த நேரத்தில் என்ன படிகள் வரையலாம், ஏறிச்செல்லலாம் என்ற குழப்பம் தலைக்கேறி விரக்தியடைந்து, தற்கொலை செய்யும் எண்ணம் எழ, அதை அவர் நண்பர் அனந்துவிடம் பகிர்ந்ததால், அனந்துவும் கமலின் தேடலை உணர்ந்து மலையாளப்பட உலகுக்கு அவரை மடைமாற்றி விட்டதால், அந்தக்கலைஞன் இன்றும் நம்மிடையே இருக்கிறார்! (இது அவரே பதிந்தது).
சுஷாந்த் சிங் ராஜ்புத், உன்னத உத்வேக கலைஞன், குறுகிய காலத்திலேயே தனக்கான பல படிகளை தானே வரைந்து, விரைந்து ஏறி, ஒரு படியில் உதவி தேடியபோது அனந்து போல அவருக்கு அங்கு யாருமில்லை.... அவ்வளவு உயரத்திலிருந்து குனிந்து உதவி தேடும் முயற்சியில்... சுயம் முறிந்து போனார், போய்விட்டார்... :-(
ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்று புத்தன் பரப்பியதும்,
போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்ற தமிழ் விரித்த safety net ம், இந்த சாகச வீரர்களை ஒரு புள்ளியில், ஒரு படியில் நிற்கவைக்க, அமரவைக்க, மகிழ்வோடு வாழவைக்கத்தான்!
நாம் வாழ்வில் எதை அடைய எத்தனை படிகள் வரைந்துகொண்டே செல்கிறோம்? நம்மோடு படிகளில் இணைந்து பயணிக்க முடியாதவர்களை, நமக்கு மிக நெருங்கியவரானாலும், அவர்கள் சிறுகுழந்தைகளாக இருந்தாலும்கூட எப்படி கையாள்கிறோம்? என்ற சிந்தனையை உங்கள் நினைவில் இருத்தும் ஒரு சிறு முயற்சியே இந்த நீள்பதிவு!
போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து!
வாழ்த்துக்கள், நலமாய் வாழ!
கருத்துகள்
கருத்துரையிடுக