அது ஒரு நிலாக்காலம்.
பெயரிலேயே கவிதை வழியுதே!
ராம்குமார், சென்னையில் கிண்டியில் சிறுதொழில்பட்டறை நடத்துகிறான். ஒரு பேருந்துப்பயணத்தில் அவளைப்பார்க்கிறான்.
சுகந்தா!
மையலாகிறான்.
அவளது பார்வையும் தன்மீது படுவதை உணர்ந்ததும், அவளை கவர்வதற்காக அழகழகாய் ஆடை உடுத்தி, தினமொரு ஆங்கில நாவலை கையில் எடுத்துக்கொண்டு, டைட்டில் அவள் பார்வையில் படும்படி பஸ்ஸில் நின்றுகொண்டு...
ஈர்ப்பு காதலாகி, கசிந்துருகி, கண்ணீர் மல்கி...
ராம்குமார் பொய்கள் நிறைய சொல்லும், கம்பீரமான மதுரைக்காரன். பணம் கொழிக்கும் வீட்டில் ஈடுபாடு அதிகமில்லாமல் இருப்பவன். 'சொந்த ஊரிலோ சொந்தத்திலோ பெண் வேண்டாம்' என பெரியகுளத்தில் நோட்டீசு ஒட்டியதால் உறவினர் பார்வையில் 'நட்டு கழண்ட கேசு'.
பி.ஏ ட்ராப் அவுட்.
காதலி எம்.ஏ எனத்தெரிந்ததும், தானும் எம்.ஏ என பொய் சொல்லி, அவளது காதலில் நனைந்து, மனசு தாளாமல் ஒரு நாள் உண்மையை சொல்கிறான்; 'பி.ஏ. லிட். க்ளாஸ்ல ஒரு நாள் டி.ஹச். லாரன்சோட சன்ஸ் அண்ட் லவர்ஸ் படிச்சிட்ரேந்தேனா,என்ன படிக்கிற? ன்னு எட்டிப்பாத்த லெக்சரர், 'போர்னோகிராபியா படிக்கிற?! கெட் லாஸ்ட்'னான். லாரன்சோட அரும தெரியாத லெக்சர்ர் காலேஜல இனி படிக்கிறதில்லன்னு முடிவு பண்ணேன்'!
சுகந்தா தன் அக்கா திருமணம் அமைந்தபின் வீட்டை விட்டு வெளியேறி ராமை மணப்பதாய் திட்டம். தானும் பொறுப்புள்ளவன் என காண்பிக்க ராமும் தன் கடைசித்தங்கையின் திருமணம் முடிந்தபின்னரே தன் திருமணம் என விரும்பிப்பொய் சொல்கிறான்.
இந்த இரு கடமைகளும் மெல்ல மெல்ல ஒரு வலுவான சுவராக அவர்களிடையில் இருவருக்கும் தெரியாமலேயே நாளொரு பொய்யிலும் பொழுதொரு ஏமாற்றத்திலும் வளர்கிறது.
சீலியா என்கிற ஆங்லோஇந்திய அழகி, அவனது பட்டறையில் கட்டில், பீரோ வாங்க வந்து, காமமுறுகிறாள். சுகந்தா ஊரிலில்லாத ஒரு நாளில் ராம்குமார் அவளது வலையில் சிக்க மகிழ்வாய் தயாராகி, அவளது வீட்டில் மாலை, இரவு இசை, உணவுக்குப்பின் உறவுக்கு தயாராகும் தருணத்தில் அவளது கஸ்டமர் யாரோ வந்து கதவைத்தட்ட, அதிர்ந்து விலகி வெளியேறுகிறான். பின்னொரு முறை சுகந்தா மேலுள்ள கோபத்தில் விரும்பி ஒரு முறை மட்டும் வலைக்குள் சிக்கி வெளியேறுகிறான்.
ரோஸ்மேரி என்ற வளர்ந்த பெண்குழந்தை, சீலியாவின் தங்கை, 'You are the Captain of my Ship' என்னுமளவிற்கு அன்பால் கட்டப்பட்ட பாலத்தில் ராம்குமாரின் நெருங்கிய வட்டத்தில் இணைகிறாள்.இருபது வயது ஆனால் பன்னிரண்டைத்தாண்டாத மன முதிர்ச்சி.
அவளுக்கு மானசீக தகப்பனாகிறான். முதிர்வற்ற அவளது காதலையும் மெலிதாய் அவளுக்கு வலிக்காது கடந்துபோகிறான், அவளது தகப்பனாகவே அவளது எதிர்காலம் குறித்து கவலை கொள்கிறான்.
ஒரு கட்டத்தில் ரோஸ்மேரி சில வெறியர்களால் சிதைந்துபோகிறாள்....
ராமை மிகவும் பாதிக்கும் நிகழ்வு இது.
சுகந்தாவின் அக்கா திருமணம் சடுதியில் நிகழ்கிறது. சுகந்தாவிற்கும் வரன் வருகிறது, அமெரிக்க பேராசிரியர், அவளது சாதியிலேயே. அவள் வீடு சம்மதிக்கிறது. அவள் பயத்தை வெளிக்காட்டாத அமைதியோடு ராம்குமாரை கல்யாணத்திற்கு அவசரப்படுத்துகிறாள். ஆனால் அவனது தங்கை திருமணம் முடிந்தபின் அவனது பெற்றோர் சம்மதத்துடன்தான் என்பதில் உறுதியாய் நிற்கிறாள்.
அவனது தங்கை திருமணமும் கூடி வருகிறது.
இருவரும் இணைந்து வாழ நல்லதொரு வாடகை வீடு அட்வான்சு தந்து, வாங்கவேண்டிய பொருட்களுக்கு லிஸ்டு போட்டு கனவாய் பொழுது கழிகிறது.
தங்கை திருமணம் முகூர்தத்திற்கு சில வாரங்களே இருக்கையில் நின்றுபோகிறது.
ராமின் பொய் சொல்லும் சுபாவம் சுகந்தாவின் மனதில் புதைத்த சந்தேகங்களை அவளது தோழி நீரூற்றி வளர்க்க, பிணக்கு நேர்கிறது. பல தருணங்களில் அவன் உண்மையின் விளிம்பில் நின்று தன் பலவீனங்களை அவளிடம் பகிர்ந்தபோதும் அது போதுமானதாக இல்லை.
எந்த கடற்கரையில் காதலை அங்கீகரித்தார்களோ, எந்த கடற்கரையில் முதல் முத்தம் பதிந்தார்களோ, எந்த கடற்கரையில் கண்ணீரில் கரைந்த பாரத்தோடு நிலாச்சோறு பகிர்ந்து உண்டார்களோ, அதே கடற்கரையில் ஒரு பெருந்துயரம் நிகழ்கிறது... 'உனக்கு நிஜமாவே தங்கை இருக்காளா?, ப்ரூவ் பண்ணு' என்று தோழியின் சந்தேகத்தூண்டுதலால் அவள் சீற, காயமடைந்த அவனது தன்மானம், 'அந்த அளவு சந்தேகப்படறியா? நீ உங்க அப்பாவுக்குதான் பிறந்தவள்னு ப்ரூவ் பண்ணு' என அவன் மீற, காவியக்காதல் முறிந்து கரையொதுங்கிக்கிடக்கிறது.
அமெரிக்க மாப்பிள்ளையுடனான அவளது அவசர திருமணம் மனதை ரணமாக்க, ஏற்கனவே ரோஸ்மேரியை இழந்த வலியும் சேர்ந்துகொள்ள, நிறுவனத்தை மூடிவிட்டு இலக்கற்ற மனிதனாய், துறவின் அருகில் ராம் அலைகிறான்.
எந்த பொய்களால் காயம்பட்டு சுகந்தா விலகினாளோ அதே போன்றதொரு பொய் அவள் அமெரிக்க வாழ்வை சிதைக்கிறது. இந்தப்பொய்யை சொன்னது, ஏற்கனவே இத்தாலியப்பெண் ஒருத்தியை மணந்ததை மறைத்து இவளை மணந்த பேராசிரியன், 'தான் ஒரு பேச்சிலர்' என்று சொன்ன அந்தப்பொய்.
"அந்த உண்மையை அறிந்த சுகந்தா அடைந்த அதிர்ச்சியும் அவமானமும், இதனால் அமெரிக்க வீதியொன்றில் சித்தம் கலங்கியவள்போல் ஓடிய கொடுமையும் அலங்கோலமும், சில மாதங்களிலேயே அவள் ஒரு அகதியென இந்தியாவிற்கு மீண்டுவந்த நிர்க்கதியும் சோகமும்; எந்தக்கடற்கரையில் மண்ணை வாரி எறிந்து காறி உமிழ்ந்து உறவை முறித்துக்கொண்டு சென்றாளோ அதே கடற்கரையில், அதே ராம்குமாரின் கால்களில் விழுந்து அவள் கதறி அழுத பரிதாபமும் வேதனையும், வாழ்க்கையெனும் நெடுங்கதையின் மிக வறண்ட அத்தியாயங்கள்..."
என்று முடிகிறது அது ஒரு நிலாக்காலம்.
(மீண்டு வந்த சுகந்தா, க்வாலியரில் பெண்கள் மறுவாழ்வு அமைப்பு ஒன்றில் அதிகாரியாக சேர்ந்து தனியே வாழ்வதையும், தனது தவறுக்கு பரிகாரமாய் தனியாகவே வாழ்ந்து முடிக்க முடிவெடுத்ததையும், இன்னும் பல செய்திகளையும் அவ்வப்போது கடிதங்கள் மூலம் ராம்குமாருக்கு பகிர்ந்து, இருவரின் வாழ்வும் நகர்கிறது)
நம் சராசரி வாழ்வு, ஒரு பெண்டுலம் போல சராசரி மையத்திற்கும், சமுதாயத்தளைகளை உடைத்த வாழ்வின் விளிம்பு நிலைகளுக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டே இருக்கிறது.
இந்த பெண்டுலத்தில் நம்மை ஏற்றி, நம்மையும் இந்த இரு நிலைகளுக்கும் இடையில் சுழல விட்ட, ஏங்க விட்ட, தவிக்கவிட்ட, அழவைத்த, மாபெரும் கதைசொல்லி ஸ்டெல்லா ப்ரூஸ்.
கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழில் இதைவிட சிறந்த அகவெளிப்புதினம் இதுவரையில் எவராலும் எழுதப்படவில்லை.
எண்பதுகளில் ஆனந்தவிகடனில் தொடராய் வந்தபொழுது பதின்பருவ வாசகர்களை ராம்-சுகந்தா என்ற மாயக்கம்பளத்தில் இவர் வாரா வாரம் ஏற்றி இறக்க, இறங்கிய நொடியிலிருந்து தளும்பும் மனதோடு தனக்கான சுகந்தாவை தேடி ஏங்கியோர் ஏராளம்! தொடர் முடிந்தபோது தன் வாழ்வில் நிகழ்ந்த சொந்தத்துயராய் இவர்கள் பிரிவின் வலியை உணரவைத்த அவரது எழுத்து, இன்றும் வலிக்கவைக்கிறது...
இன்றும் படிக்கையில் பல இடங்களில் தன்னிச்சையாய் கண்களில் நீர் திரண்டது. காதல் காதல் காதல், காதல் போயின் காதல் என்பதாய் வாழ்வைக்காதலித்த, தீராத தாகத்துடன் அலைந்த ஒரு விளிம்பு நிலை மனிதன், தன் மனவெளியில் நிகழும் உணர்வுகளின் நாட்டியத்தை சொற்கள் வழி பாவம் மாற்றாது வெளிப்படுத்தியிருப்பதும், இன்றும் அந்த பாவம் மாறாது ராம்குமார்-சுகந்தா இப்போது எங்கே எப்படி வாழ்கிறார்களோ என்று அறியத்துடிக்கும் ஏக்கத்தை ஏற்படுத்தியிருப்பதும் இவரது காலம் கடந்தும் இவரது எழுத்தின் வலிமையை, உண்மையை, ஒளியாய் தூவிச்செல்கிறது வாசிப்பவர் மனதில்.
இந்த நாவலின் கட்டமைப்பில் இவர் செய்த புதுமைகள், தொட்ட உயரங்கள், எட்டவில்லை வேறு எவரும், இன்றுவரையில்.
எனக்கு நினைவு தெரிந்து, ஒரு கதை வெளியிட்டு முடிந்தபின், அந்தக்கதையின் Prequel எனப்படும் முன்கதையை இன்னொரு தொடராக அவர் எழுதியது, உலக வரலாற்றில் முதல் முறையாக இருக்கலாம்...
தன் நேசமனைவியின் நோய்த்தீவிரமும் இறப்பும் தந்த வேதனையினால் இந்தப்பெண்டுலம் ஓரு இறுதி உந்தலில் வாழ்வின் மையத்திலிருந்து விலகி, விளிம்பு நிலையை உடைத்துக்கொண்டு மீளா இருளில் மூழ்கிய துயர நாளை செய்தித்தாள் மூலம் அறிந்த அந்த நாளிலும், அதன் பின்னான சில நாட்களிலும் நான் உணர்ந்து கடந்த வலி, அவரது எழுத்தின் வலி, இன்றும் அழுகிறது என்னுள் மௌனமாய்.
அது ஒரு நிலாக்காலம்...
பின்குறிப்பு:
இந்த நாவலை ஒரு நூலகப்பதிப்பில் வாசித்தேன். அதில் ஒரு அத்தியாயத்தின் துவக்கத்திலுள்ள வெற்றிடத்தில் எழுதப்பட்டிருந்த இந்த பேனாக்குறிப்பு, இன்றுவரையில் என்னை கலங்கடித்துக்கொண்டிருக்கிறது;
' Dear L, Please excuse me. I am not your match. God will provide you with everything and keep you with happiness.
By,
Useless Husband
'
கருத்துகள்
கருத்துரையிடுக