முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குதிரை லாய காவலர்களும் விவிலியப்பொருளாதாரமும்


குதிரை லாயங்கள் மகத்தான பணியை செய்பவை.

அவை, குதிரைகளுக்கு பாதுகாப்பான உறைவிடம், நிழல், உணவு வசதி, குடிநீர் வசதி, பராமரிப்பு வசதி என அனைத்து வசதிகளும் நிரம்பியவை.

உள்ளே வசிக்கும் குதிரைகள் வேலை நிமித்தமாய் வெளியே செல்லும்போதெல்லாம் பல வகையான விலங்குகளை வேலை நிமித்தமாய் சந்திக்கவேண்டியிருக்கிறது. கருத்துப்பறிமாற்றங்கள் நிகழ்கின்றன. அதன்பின்னான வீடு திரும்பலில் (லாயம் திரும்புதல்) இரு விலங்குகளுக்குமே ஒரு ஏக்கம் தொற்றிக்கொள்கிறது, 'அவரோட லாயம் இன்னும் நல்லா இருக்கே!'.

சரி, இந்த விலங்குகள் ஏங்கிக்கொண்டிருக்கட்டும், நாம் இப்போது மேட்டருக்கு வருவோம்.

அடக்குமுறைகளாலும் போர்களாலும் ஆனது இவ்வுலகு. மத்திய ஆசியாவில் தொடங்கிய போர்க்குணம் உலகெங்கும் பரவ சில ஆயிரம் ஆண்டுகளே போதுமானதாக இருந்தது. 

மத்திய ஆசியாவில் தோன்றிய போர்க்குணம்? இது என்ன பழங்கதை?!

மேற்கத்திய நாகரீகத்தொட்டில் தொடங்கிய இடம். உணவு சேமிப்பு தொடங்கிய இடம். உணவு பாதுகாப்பு தொடங்கிய இடம். காடுகள் விளை நிலங்களாய் மாறத்தொடங்கிய இடம். அனைத்து செல்வங்களும் உணவின் வழி குவிந்த இடம். இன்றைய ஜெருசலம் நகரின் அருகில் Gehon Springs என்று அழைக்கப்படும் ஒரு நன்னீர் ஊற்றின் ஈரத்தில் பிறந்த நாகரீகம் இது. 

செல்வம் ஆற்றல் தந்தது, சேனைகள் தந்தது. எல்லைகளை விரித்துக்கொள்ள போர் செய்தது, போர்க்குணம் மனிதர்களையும் ஏனைய உயிர்களையும்  அழித்து வளங்களை மேலும் சேர்த்தது.

இந்தப்பொருளாதாரத்திற்கு அன்று பெயர் எதுவும் இல்லை.

ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குள் இதே உத்திகளால் ஒரு அரசு வளர்ந்து ரோமப்பேரரசாகி, 'இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே', தேய்ந்து ஒழிந்ததே. 

இந்த அழிவினால், அரசின் பொருளாதாரக்கொள்கை (ரோமப்பொருளாதாரம் எனப்பெயர் சூட்டுவோம்) நழுவி மதங்களின் மடியில் வீழ்ந்ததே!

அதன் பின்பு விவிலியப்பொருளாதாரம், ஷரியத் பொருளாதாரம் என பல தேர்த்தடங்களில் பயணித்த இந்த வாழ்வியல் முறை, பின்னாளில் சந்தைப்பொருளாதாரம் என்ற ஒற்றைப்புள்ளியில் ஒண்ணா மண்ணா கலந்தது. கலந்தபின் இன்றுவரை கோலாகலமாய், ஆரவாரமாய், கடன்பட்டாவது பார்ட்டிகளை நடத்துவோம் என நிற்காமல் 'ஆடுகின்றது'.

இந்த பார்ட்டிக்கு 'முன்னாலயே வந்தாலும் லேட்டஸ்டாய் இருப்போம்ல!' என்று வாழ்ந்திருந்தது நம் பழைய பண்டமாற்றுப்பொருளாதாரம்.

கலாச்சாரக்காவலர்கள் தங்கள் கலாச்சாரங்களை காக்கவும் பொருள்தானே ஆதாரம்?!

பண்டமாற்றுப்பொருளாதாரம், ஒரு வகையில் Gift Economy எனவும் அழைக்கலாம், அடிப்படை தேவைகளாலும் நம்பிக்கைகளாலும் ஆனது, தற்சார்பும் தன்னிறைவும் கொண்டது. நீண்ட நெடிய வரலாறு கொண்டது. இந்த வரலாற்றில் கொடிய போர்களுமில்லை பஞ்சங்களுமில்லை. 

சந்தைப்பொருளாத பார்ட்டிகளின் ஆரவாரங்களில், செயற்கை வனப்பில் தடுமாறி மயங்கி, இன்று நம் பண்டமாற்றுப்பொருளாதாரமும் "தண்ணி" தொட்டி தேடி வந்த கன்றுக்குட்டியாய் தடம் மாறி  ஆடிக்கொண்டிருக்கிறது தாறுமாறாய்!

"ஹலோ? யாருகிட்ட?! நாங்கள்லாம் உலகமயமான சந்தைப்பொருளாதார ஜோதியில ஐக்யமாகி பல வருஷம் ஆச்சி. போவியா!!!!" என்று எண்ணுபவர்கள், கடந்த இரண்டு வருடங்களில் மகாமாரி நமக்கு தந்த படிப்பினையை மறந்தவர்கள். நேற்றுகூட என் வீட்டில் முருங்கை இலையும் கறிவேப்பிலையும்  ஒடித்துக்கொண்டு எனக்கு சில வாழைத்தண்டுகள் தந்து சென்றனர் என் நாட்டில் படிப்பினை பெற்ற சிலர் :-)


'அதெல்லாம் சரி, குதிரை லாயத்துக்கும் இந்தப்பதிவுக்கும் என்ன சம்பந்தம்?' என focus ஐ மாற்றுபவரா நீங்கள்?

நன்றி, சம்பந்தம் செய்திடலாம், இப்பவே!

போர்களால் வளம் சேர்த்த காலம் போய் இப்போது Soft Wars எனப்படுகிற 'மறை யுத்த' காலம். அதாவது, உலகெங்கும் நான்மறை போன்ற பண்டைய வாழ்வியல்களுக்கும் ஏனைய விவிலிய மற்றும் ஷரியத் மறைகளுக்கும் நடக்கும் யுத்தம் என்றும் பொருள் கொள்ளலாம்.

விவிலியப்பொருளாதாரத்தில் சேராத தெற்காசிய மக்களும் தென்னமெரிக்க மக்களும்தான் யுத்த இலக்குகள். 

ஐம்புலன்களின் வழி இந்த யுத்தம் கடந்த நம் நாட்டில் எழுபது ஆண்டுகளாக, இன்றுவரை, நாளையும்கூட, தொழில்நுட்பத்தின் துணையோடும் கலாச்சார காவலர்களின் துணையோடும் 'நம் கண்ணெதிரே•' கனஜோராய் நடந்துகொண்டிருக்கிறது, பண்டமாற்றுக்கலாச்சாரம் நிறம் மாறிக்கொண்டிருக்கிறது, 'சந்தைப்பொருளாதாரத்தில் கொள்ளை லாபம் பார்க்கிறோம், அந்த பணத்தில நம் கலாசாரத்தை காக்கிறோம்' என்பதாக.

(•கண்ணெதிரே - ஊடகங்களின் காட்சிகளர வழியே நம் வாழ்வியலுக்கு ஒவ்வாத சிந்தனைகள், செயல்கள், உணவு, உடை...என எல்லாமே எளிதாக குடியேறிக்கொண்டிருக்கின்றன.)

மாறிப்போன உணவின் வழி, நுகர்வின் வழி, நம் குதிரை லாயங்களின் எஞ்சிய பூட்டுக்களும் களவாடப்பட்டுவிட்டன, களவு போய்க்கொண்டிருக்கின்றன, கலாச்சாரக்காவலர்களின் உதவியோடு.

இவ்வாறு ஈர்க்கப்பட்ட குதிரைகளெல்லாம் லாயங்களிலிருந்து தொலைதூரம் ஓடிப்போய் ஏதேதோவாக மாறிப்போய் பலகாலம் ஆயாச்சி.

இப்போது உடனடியாக குதிரை லாயங்களைப்பூட்டவேண்டும் என கலாச்சாரக்காவலர்கள் பல்வேறு வழிகளில் மக்களோடும் மகாமாரியோடும் மல்லுக்கட்டுகிறோம்!

பண்டமாற்று, Gift Economy, தற்சார்பு, Self Sustainable, மீள் சுழற்சி - recyle... 
என நாம் தூக்கியெறிந்த, பராமரிக்க மறந்த பல பயனுள்ள தளவாடங்களை இப்போது தூசி தட்டி எடுத்து மறுபடி பயன்படுத்த ஆயத்தமாகிறோம்.

ஆன்மாவையே நைந்துபோகும்வரை பிறவிக்கடலில் மறுசுழற்சி செய்யும் பாரம்பரியத்தில் பிறந்த நாம், கலாச்சாரக்காவலர்கள், இவைகளை recycle செய்வதும் இயல்பானதுதானே!

(Horse image from internet is used for illustration. Copyright of the picture may lie with the owner)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...