கண்விழிக்கும்போதே என்னுள் தளும்புது காடு.
கண்மூடும் விழிக்குவிப்பில் குவியும் காடு, உறங்கும் என்னுள்ளே.
உள்ளிழுக்கும் மூச்சிலும் அதுவே
உயிரில் நனைந்து வெளியேறும் காற்றிலும் அதுவே.
காண்பதனைத்திலும் காட்டின் சுவடு காணும் கண்கள்.
காட்டின் இடையறாத ஓசை கேட்கும் காதுகள்.
இலக்கின்றி காட்டுள்ளோடும் உயிரிகளாய் எண்ணங்கள்.
காட்டு மரங்களில் உதிரும் இலைபோல மலர்போல சொல்லுதிர்க்கும் நா.
முறிந்து விழும் மரக்கிளையாய், சாயும் பெருமரமாய் எப்போதாவது அனல்மூட்டும் காட்டின் கனப்பு உள்ளுலவும் உடல்.
காட்டுள் ஆயிரமாயிரம் உயிரினங்கள் அங்குமிங்கும் அலைந்தாலும் அத்தனையும் உள்ளடக்கி அடர்மௌனம் காக்கும் இதயம்.
காட்டுள்ளே உயிரனைத்தையும் பொத்திக்கதகதப்பாய் காத்துநிற்கும் பேரன்பில் சொதசொதப்பாய் நெகிழ்ந்த ஆன்மா.
கனிந்து விழுந்த பழம் விதையாகி துளிராவதுபோலே செயல்.
காடு தேடி அலைவதில் நாட்டமில்லை எனக்கு.
ஏனெனில்,
தான் காடென்பதே அறியாத ஏனைய காடுகள் போலன்றி, தன்னுணர்ந்த ஒரு பெருங்காடு நான்.
என் சிந்தனையும் காடுருவாக்கும், இனி பிறக்கப்போகும் பறவைக்கும் சேர்த்தே.
மனிதரின் கால்தடம் பட்ட இடமெலாம் கல்லாய் சமைந்துபோன காடுகள் அனைத்தும் என் பறவைகளின் சிறகொலி கேட்டு உயிர்பெரும். அவற்றின் எச்சத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு மறுபடி காடாகும். காடொருநாள் வீடேறும்.
அந்நாளில் நீயும் காடாகியிருப்பாய் தோழி!
அதற்கு முன்னே என்னைக்காண ஆவலென்றால் பறவையாய் மாறுவதே எளிதான வழி.
ஐயமிருந்தால் என்னைச்சுற்றும் பறவைகளைக்கேள்!
கருத்துகள்
கருத்துரையிடுக