அதிகாலையில் வெளியில் கிளம்பி காரில் ஏறி கதவை மூடும் அந்த சிறிய இடைவெளியில், காற்றில் மிதந்து இலை ஒன்று உள்ளிறங்கியது.
"என்ன அழகான நிகழ்வு! இந்த இலைக்கு இன்று free ride வேண்டுமாம்!' என்று மகிழ்வாய் கிளப்ப, இலை அசைந்தது, நகர்ந்தது!
"விரல் நக அளவே உள்ள இது என்ன?" என வியந்து கேமரா கண் வழியே பார்த்தேன். பட்டு பச்சையில் நெய்ததுபோலான முதுகு காட்டி, 'அது' ஒரு சப்போட்டா விதையின் மீது ஒண்டியிருந்தது. சற்றே நகர்ந்து மறுபடி ஒண்டியது.
முடிந்தவரை கேமராவை அதனருகில் கொண்டு சென்று பல படங்கள் எடுத்தேன், அது நகரவேயில்லை...
நாமதான் நல்ல படங்களை தேடித்தேடி பதிவு செய்யும் இனமாயிற்றே என்ற இறுமாப்போடு எனது பேனாவைக்கொண்டு அதை மெல்ல நகர்த்தினேன், ஒரு தேர்ந்த மாடலை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் படமெடுக்க விழையும் கலைஞனின் தாகத்தோடு.
பேனாவின் அடிப்பகுதி அதன்மேல் பட்டதுதான் கண்டேன்...அடுத்த நொடியில் என் நகமளவே இருந்த அது, இழுத்து நாண்பூட்டிய வில்லிலிருந்து தெறித்துப்பறக்கும் அம்பு போல ஆறடி உயரம் தாண்டி எகிறிப்பறந்து கட்டாந்தரையில் அமர்ந்து திரும்பி முறைத்தது 'போடா ம**' என்று திட்டியபடி!
திட்டு வாங்கினாலும், "இந்தச்சிறிய உயிரில் இவ்வளவு ஆற்றலை குவித்து அதை இயக்குவது எது?!" என்ற பெருவியப்போடும் 'வெட்டுக்கிளி பரம்பரடோய்' என கண்டுபிடித்த மகிழ்வோடும் நகர்ந்தேன். அது திட்டியதை அங்கு இருந்த சில மரங்கள், சாம்பல் குருவிகள் தவிர வேறு யாரும் பார்க்கவில்லை!
அந்த ஒரு ஜோடி ஆரஞ்சு வண்ண கண்கள் இன்றும் இன்னும் சிலநாட்களும் என் நினைவில் வந்துவந்து போகும் :-)
கருத்துகள்
கருத்துரையிடுக