ஒரு பாடலை ஒரு பாடகன் பாடுகிறான். பாடும்போதே உடைந்து அழுகிறான். பாடலை கேட்பவர்களின் கண்களிலும் நீர்த்துளி கோர்த்துக்கொள்கிறது.
முதல் முறை பாடும்போது மட்டுமல்ல, ஐநூறாவது முறை பாடும்போதும்!
முதல்முறை கேட்கும்போது மட்டுமல்ல, ஐநூறாவது முறை கேட்கையிலும்!
பாடல் என்னவோ வழக்கமான காதல் பாடல்கள் போலதான்.
தனது கலையை விரும்பிய பெண்ணை இவன் விரும்ப, கலைக்கு சொந்தக்காரன் இவனது சகோதரன் என்று தவறாய் கற்பிதம் செய்துகொண்ட அந்தப்பெண் இவனை உதாசீனம் செய்து இவனது சகோதரனை விரும்ப, ஒரு இயலாமை நேரத்தில் உடைந்துபோய் இந்தக்கலைஞன் பாடும் பாடல் இது.
S.P.B என்கிற மகத்தான பாடகன் இந்தப்பாடலில் தன் உயிரை உருக்கி ஊற்றி...
என்ன குழைவு, என்ன இயலாமை, என்ன தளும்பல், என்ன குமுறல்...
"
காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிகொண்டாய் நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா என் நெஞ்சிலே பனிமூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா
"
அடுத்தமுறை இந்த வரிகளை இந்தக்கலைஞன் பாடுவதை நீங்கள் கேளுங்கள், கண்களை மூடி, உறக்கம் வரும் புதிய இரவின் முந்தைய நொடிகளில்...
அதனோடு பின்னிசையாய் சாக்சஃபோனிலிருந்து கசியும் இசையையும் உள்வாங்கிக்கொண்டே...
உங்கள் உள்ளம் உருகி உள்ளே ஏதோ உடைந்து ஓடும், உங்கள் நுரையீரலில் மட்டுமல்ல ஆன்மாவிலும் காதல் அடைபட்டு திக்குமுக்காடும், உங்களையும் திக்குமுக்காட்டும். மூடிய கண்ணோரங்களில் ஈரநதி ஒன்று மெல்ல கீழிறங்கும்.
அதன்பின்னான நொடிகளில் அற்புத உறக்கம் ஒன்று உங்களை தழுவிக்கொள்வதும் கொள்ளாததும் உங்கள் வாழ்வின் அனுபவங்களை பொறுத்தது...
-----++----
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா உனை அமுதவிஷமென்பதா
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிகொண்டாய் நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா என் நெஞ்சிலே பனிமூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு....................
கருத்துகள்
கருத்துரையிடுக