காலக்கூத்தனின் உதிர்ந்த மயிரொன்று
"ஏனிந்த தண்டனை?" என ஈரைந்து மாதமாய் மெய் வருத்தி கடுந்தவம் செய்ய,
அவன் எட்டி உதைக்க, வழுக்கி 'விழுந்த' நொடியில், விழுந்த இடத்தில், எங்கெங்கு காணினும் வேசதாரிகள் கூத்தாடும் காட்சி.
புதிதாய் சேர்ந்ததுவும் ஆட்டம் பாட்டம் பார்த்து, யாரோ பூசிய வண்ணங்களை தாங்கி வேசமிட்டு ஆட, ஆட்டமான ஆட்டம், பாட்டமான பாட்டம், கொண்டாட்டம்.
வேசத்தின் வேசம் நொடிக்கு நொடி மாறும் விந்தை, வேதனை, மகிழ்வு, கோபம், பயம், தயக்கம், மயக்கம் உந்தித்தள்ள, வேசந்தாங்கியின் சிந்தை குழம்பி "நான் யார்?" என தட்டுக்கெட்டு சுழல,
தங்கள் ஆட்டத்தில் அபசுரமாய் "இதென்ன புதாட்டம்?" என்று திகைத்த மற்ற வேசங்களும் வேசக்காரர்களும், தம் சுருதியிலிருந்து பிசகி ஆடும் வேசதாரியை பார்த்து சொன்னது இதுவே:
"ஒன்று சிவமாயிரு, இல்லை சவமாயிரு. இரண்டுக்கும் இடையில் நீ வேறொன்றாக இருந்தால் எங்களைப்போலே இரு. சுருதிபேதம் ஆடலுக்கு ஆகாது"
சிவமாயிருப்பதும், சவமாயிருப்பதும், இரண்டுக்குமிடையில் காற்று வெளியில் வேசங்கட்டி ஆடும் மயிராயிருப்பதும் அவரவர் விருப்பமல்ல, எட்டி உதைத்ததுவின் விருப்பம்.
இதை உணராத மயிருலகில் அவரவர் விருப்பம் என ஏதேதோ வண்ணங்குழைத்து யார்யார் மீதோ பூசி, "பார்த்தாயா, நான் அன்றே சொன்னேனல்லவா!" என்று ஆடுவோர் ஆடட்டும்.
வண்ணங்களின் சுமையில் சிக்காது விடுபட்டு விலக முடிந்த மயிர் மட்டும் இலகுவாகி, எளிதாய் காற்றின் மீதேறி மேலே மேலே செல்லலாம், என்றாவது ஒரு காலத்துகளில் உதைத்தவனை காணலாம். (அந்த காலத்துகள் அவனது வியர்வையாக இருக்கலாம்...)
அவன் அப்போதும் மயிர்கள் உதிர கூத்து ஆடிக்கொண்டிருக்கலாம்...
கருத்துகள்
கருத்துரையிடுக