ஒரு ஊர்ல வருமானத்துக்கு வழியில்லாம ஏழ ஒருத்தன் தவிச்சானாம்.
பல ஐடியாக்கள முயற்சி பண்ணிப்பாத்தும் முடிலயாம்.
"யப்பா!, இந்த அண்ணாடங்காய்ச்சி பொழப்புலயும் மண்ணு உளுந்திருச்சே!!"ன்னு ஆதங்கத்தில அளுக அளுகயா வந்ததாம்.
அளுக பெருசாகி, சோகம் அப்பிக்கிச்சாம்.
சோகத்தக்கொறைக்க சரக்கடிக்கலாம்னா அதுக்கும் காசில்லயாம்.
'சே! என்ன பொழப்புடா இது!' ன்னு... அவனே காச்ச ஆரம்பிச்சிட்டானாம்.
மிச்சமானத பக்கத்தில உள்ள அளுகாச்சிங்களுக்கு தந்தானாம்.
சரக்கு, தளும்ப தளும்ப தந்த ஃபீலிங்ஸ்ல அங்க உள்ள காச்சிங்கள்லாம் ஒண்ணா சேந்து மப்புல ஒரு தொழில் தொடங்குனாங்களாம். காச்சுற தொழுலுதான்...
தொழில் வளர வளர, ஒரு ஸ்டேஜில நாடாள்கிற ராசாவோட வருமானத்த விட இவிங்க வருமானம் அதிகமானத கண்ட ராசா காண்டாயி, 'இன்னைலேந்து காச்சுகிற வேலய அரசுடைமையாக்குறேன். நானே காச்சிறேன்!'னு வரிஞ்சி கட்டி காச்ச ஆரம்பிச்சாராம்.
தொழிலு கைய உட்டு போன சோகத்தில அந்த அண்ணாடங்காச்சிங்கள்லாம் க்யூல நின்னு சரக்கு வாங்கி அடிச்சி, உருண்டு பொரண்டு வூடுபோய் சேந்தாங்களாம்.
ராசாவுக்கு கஜானா நெம்பிகிட்டே இருந்துச்சாம்.
காச்சிங்களோட பொண்டு பிள்ளகளெலலாம் வூட்டுல அடி ஒத தாங்க முடியாத ராசா கால கால்ல உயுந்து அளுதாங்களா, மனசு இளகின ராசா அவுக எல்லாருக்கும் அரிசி, பருப்பு, துணிமணி, பண்டபாத்திரம், வண்டிவாகனம்னு அள்ளி வுட, 'ராசா வாள்க', 'ராசா வாள்க'ன்னு கூவிகிட்டே ஆசுபத்திரி போய் இலவசமா வைத்தியமும் பாத்து வூட்டுக்கு போய் செட்டிலாய்ட்டாங்களாம்.
திடீரென்டு ஒரு நாளு ஏதோ ஒரு மகாமாரி ஊருக்குள்ள காலடி எடுத்து வைக்கவும் ஊரே பயத்துல அல்லோகல்லப்பட்டு வூட்டுக்கதவ அடச்சிகிட்டு உள்ள குந்திகிச்சாம்.
காச்சின சரக்கெல்லாம் விக்கமுடியாம...எத்தன நாளுதான் ராசாவும் பாவம் கஜானாவ காலி பண்ணி பொருளெல்லாம் அவிங்களுக்கு குடுத்துகிட்டே இருப்பாரு? கஜானா காலியாவ காலியாவ ராசாவுக்கு கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சாம்.
அண்ணாடங்காச்சிங்களும் எத்தன நாளுதான் சரக்கடிக்கமுடியாம வூட்டுக்குள்ளயே மொடங்கி கெடக்குறது? அவங்களுக்கும் கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சதாம்.
என்னதான் அவிங்க வூட்டுக்குள்ள மறுபடி சரக்கு காச்சினாலும் ராசா சரக்குமாதிரி இல்லயாம்.
ரெண்டு தரப்பும் அதனால ஒரு காம்ப்ரமைசுக்கு வந்தாங்களாம்...
ராசா கடய தொறப்பாரு. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் காச்சிங்கள்லாம் வெளில வர்லாம். மருவாதையான எடவெளி விட்டு நின்னு சரக்கு வாங்கிக்கலாம், ஏன்னா ராசாவோட கஜானாவ ரொப்ப அத்தியாவசியத்தேவை வந்ததாலும், சரக்கு அத தளும்ப தளும்ப ரொப்புற மாதிரி வேற தொழிலு எதுவும் ரொப்பாதுங்குற உண்மை புரிஞ்சதாலும்தானாம்.
இந்த அலப்பற கொழப்பற எதுவும் தெரியாத மகாமாரி ஜங்கு ஜங்குன்னு ஜாலியா ஊர சுத்திப்பாத்துகிட்டு கண்ணுல பட்டவங்கள எல்லாம் கொண்டு தின்னுகிட்டு இருந்ததா, கொஞ்ச நாளாவே அல்லாரும் கதவுக்கு பின்னால ஒளிஞ்சிட்டதால, 'இன்னாடா இது? திடீர்னு அம்புட்டு பேரும் பதுங்கிட்டாய்ங்களே! இனி நான் தீனிக்கு என்ன பண்ணுவேன்? பேசாம வேற ஊருக்கு போயிடவேண்டியதுதான்!'னு சோகமா பொட்டி படுக்கையெல்லாம் கட்டிகிட்டு, வாட்டி வதக்கிற வெய்யில்ல பசியில கண்ணு சொருக மெல்ல தள்ளாடி தள்ளாடி ஊரு எல்லைய பாக்க நடக்க ஆரம்பிச்சதாம்.
திடீர்னு பாத்தா எங்க பாத்தாலும் ஆளுங்கள்லாம் தபதபன்னு ஓடுறாங்களாம்.
'இதென்னடா புது கூத்து'ன்னு மகாமாரியும் தலய ஒதறி பாத்தா... அம்புட்டு பேரும் சரக்கு விக்கிற கட வாசல்ல ஒர்த்தன ஒர்த்தன் தள்ளிகிட்டு...
அப்பால ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா தவழ்ந்து. உருண்டு, பொரண்டு வூட்டுக்கு போற பாதைல அங்கங்க உளுந்துகெடந்தாங்களாம்.
'அப்படி இன்னாதான் நடக்குது அங்கன?'ன்னு மகாமாரியும் தள்ளாடி தள்ளாடி போய் க்யூல நின்னுச்சா, 'ஏய், ஏக்கனவே உன் கோட்டாவ குடிச்சிட்டு திருப்பியும் வந்துகினியா!!!'ன்னு போதைல பலரு சண்டைக்கு போவ, பயந்துபோன மகாமாரி சொன்னுச்சாம், 'எனக்கு இன்னும் ஒரு ரவுண்டுகூட கெடைக்கலபா'ன்னு.
'அட, தோபார்றா! இத்துவும் நம்மளமாரியே அண்ணாடங்காச்சிபா!, நாமெல்லாம் தோஸ்த்தாய்டலாம்பா!' ன்னு சரக்கு மக்கள் அத்த அள்ளி அணைச்சிகிட்டாங்களாம்.
"மகாமாரிக்கி சரக்கு ஏறிச்சின்னா நாட்டுல எத்தன தல உருளப்போகுதோ!" ன்னு சரக்கடிக்கிற கைப்புள்ளிங்கள்லாம் குத்தாட்டம் போட்டுகிறாங்களாம்.
கஜானால காசு உளுகிற சத்தத்துல ராஜா காதுல இந்த குத்தாட்ட க்ரூப்போட சத்தம் கேக்கவே இல்லயாம்...
...
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள், சாராய அடிக்ட்டுகளே சரக்கு கிடைக்காததை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு, முதல்முறையாக வீட்டில் பெண்டு பிள்ளைகளின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்து அந்த ஃபீலிங்சில் மனசு தளும்ப ஆரம்பிக்கிற நேரத்தில், எழுபது ஆண்டுகளில் அரசு சந்தித்திராத நிதி நெருக்கடி காரணமாக(!), நம் மக்களை 'கண்ணை இமை காப்பதுபோல' காக்கத்துடிக்கும் அரசு, நிதரிசனம் புரியாமல் சிலர் 'திறக்காதே! திறக்காதே!' என்று எதிர்த்ததையும் சட்டத்தின் உதவியோடு வெற்றிகொண்டு, கோர்ட் உத்தரவுடன், கனத்த மனதுடன், இந்த சேவையை தொடங்கவேண்டியதாயிற்று போலும்...
நம் மக்கள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைப்பெருக்கும் கபசுரக்குடிநீரை அரசு இலவசமாய் வழங்குவதற்கும் சாராய வருவாயே எரிபொருளாக இருக்கக்கூடும்...
எழுபத்து மூன்று ஆண்டு வளர்ச்சியில், இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக மாறியபின், தள்ளாடும் மக்களை தாங்கிப்பிடிக்க வேறு வழியே இல்லாத இந்த அவலம் மனதைப்பிசைகிறது...
மதுவிலக்கு அமலில் உள்ள பிகார், குஜராத், நாகாலாந்து, மிசோரம், லட்சத்தீவுகள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இதே நிலைதான்.
வளர்ந்த குஜராத்தில் சாத்தியமானது ஏன் வளர்ந்த மற்ற மாநிலங்களில் சாத்தியமாகாமல் இருக்கிறது?...
இந்தக்கேள்விக்கு பதிலளிக்க, "சாராயப்பொருளாதார விதியை" ஆதரவாளர்களும் குடிமகன்களும் ஆதாரமாக சுட்டிக்காட்டலாம்...
அது என்ன சாராயப்பொருளாதார விதி?
நாட்டில சம்பாரிக்கிற அண்ணாடங்காச்சியெல்லாம் பொறுப்பில்லாம வீட்டுத்தேவைகளை கவனிக்கமாட்டேங்கிறாங்களா, அதனால இந்திய பொருளாதார மேதைகள் வகுத்த 21 ஆம் நூற்றாண்டின் புதிய பொருளாதார விதிப்படி அவங்களயே வாலண்டியரா அரசுகிட்ட பணத்த தரவச்சி, அந்த பணத்த பயன்படுத்தி அவங்க வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவையானவற்றை அரசுகளே வாங்கித்தரும் ஒப்பற்ற சேவைப்பொருளாதாரம், உலகத்திற்கொரு புதுமை...தரம் நோபல் பரிசுக்கான தரம்... சரக்கு ஒரு மோட்டிவேஷன்!
Time trusted economic models of our brave new world, Capitalism, Welfarism, Communism, Socialim...have all become obsolete. 21st Century belongs to "Liquorism", a brand new economic model with unprecedented success!
கடந்த சில தினங்களில் சாலைகளில் பகல் பொழுதுகளில் வாகனம் ஒருபுறம், தான் ஒருபுறம் என விழுந்து கிடக்கும் பல குடிமகன்களுக்கும், அடகுக்கடைகளில் சேரப்போகும் வீட்டு நகைகளுக்கும், வீடுகளுக்குள் எகிறப்போகும் அடி, உதைகளுக்கும், சாலைகளில் பெருகப்போகும் விபத்துகளுக்கும், மதுரை போன்ற நகரங்களில் மறுபடி தொடங்கிவிட்ட செயின் பறிப்பு சம்பவங்களுக்கும், இந்தப்பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்தப்பதிவு எந்த ஒரு தனிமனிதரையோ, அரசையோ தரம் தாழ்த்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை. மாறாக, இந்த பேரழிவு தினங்களில் மனித நேயத்தை கவ்வும் இருளை அகற்ற, தளும்பும் நாட்டுப்பற்றுடன் ஏற்றப்பட்ட எத்தனையோ குத்துவிளக்கு தீபப்பதிவுகளில் இதுவும் ஒன்று. அவ்வளவே!
வாழிய எம் நாடு, வாழிய எம் நாட்டு மக்கள்.
(Copyright of the images from internet used here may lie with respective owners).
கருத்துகள்
கருத்துரையிடுக