முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-
கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை.
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+

வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை.

சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு.

கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே. 

கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா?

'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்தவர்ஷினி போல், வருடம் முழுவதும் பால் சுரந்துகொண்டே இருக்கும். வாருங்கள்!'

இன்று நம் விவசாயிகளுக்கு பால் வருமானம்தான் ரெவின்யூ ஜெனரேட்டர் எனவும், 1960 களில் இருந்து இன்றுவரை நமது பால் உற்பத்தி பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும் மார்தட்டுகின்றன அரசு இயந்திரங்கள்.

பால் வருமானம்தான் மெய்ன் ரெவின்யூ ஜெனரேட்டர்???? 1960 களில் வெண்மைப்புரட்சிக்கு முந்தைய அரசு பால் கொள்முதல் நிலையங்களின் பதிவேடுகள் 'அப்படி எல்லாம் இல்லவே இல்லை' என்று காட்டலாம். Pl check if you can.

நம் நாட்டு மாடுகள் வருடத்தில் ஐந்து மாதங்கள் மட்டுமே கறவையில் இருக்கும். சாணம், சிறுநீர் அதன் முக்கிய பங்களிப்பு. களைகளை மேய்ந்து அகற்றுவது அதன் முக்கிய பணி.


பால் உண்ணும் நம் தாகம் 1960களில் ஏற்படுத்தப்பட்டது.

இலவச (வெளிநாட்டு) மாடுகள், இலவச மாட்டுத்தீவனம், இலவச மருத்துவ உதவி, ஊருக்கு அருகிலேயே கொள்முதல் நிலையங்கள், கைமேல காசு!

'நாட்டு மாடுகள் சில மாதங்களே, குறைவாகவே, பால் தரும். அவை வேஸ்ட்டு! விற்று விடுங்கள்!'

'காளை மாடுகள் வேஸ்ட்டு. அவை நாங்கள் தரும் மாடுகளை புணர்ந்தால் இந்த வெளிநாட்டு பசுக்களின் கன்றுகள் பால் குறைவாகவே தரும். எனவே, வீரிய வெளிநாட்டு காளைகளின் விந்தை இலவசமாய் தருகிறோம். எளிதாய் ஊசி வழியே சினையூட்டலாம்!' என வணிகம் நம் விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த, வேறொரு வணிகம் அவர்களது நிலங்களில் டிராக்டர்களை நுழைத்தது!
'இந்த வாகனங்களை கடனாய் தருகிறோம். உங்கள் காளைகள் ஒரு நாளில் செய்யும் வேலையை இவை ஒரே மணி நேரத்தில் செய்யும்! பெரும்பரப்பிலும் எளிதாய் உழவோட்டலாம். எரிபொருள் அதிகம் தேவையில்லை. காளை மாடுகளை விற்றுவிடுங்கள், தீவன செலவு மிச்சம், பராமரிப்பு செலவும் மிச்சம்!'

இப்படியாக மாமிச உற்பத்தி நிறுவனங்கள் உள் நுழைந்தன.

பால் உற்பத்தி தவிர இந்த கலப்பின மாடுகளால் என்ன பலன் என்று சிந்தித்தால் அதன் பின்னான மாமிச ஏற்றுமதி வணிகத்தின் தங்கப்பல்லிளிப்பு மின்னும்... 

இந்த மாடுகள் மாமிசமாகும் காலம் வரை அவற்றை வளர்க்க விவசாயிகளுக்கான இன்சென்டிவ்தான் பால் வருமானம். வேறு பலன்கள் ஒன்றுமேயில்லை!

நெல்லுக்கு ஓடிய நீர் புல்லுக்கும் பாய்ந்து, அதை நாட்டுமாடு மேய்ந்து, நமக்கு தேவையற்ற களைகளை பாலாய் மாற்றி நம் குழந்தைகளுக்கு இலவசமாய் சத்துணவு தந்த காலம் சிதைத்துபோனது.

களைக்கொல்லி அடித்து மாடுகளின் உணவை ஒழித்து 'அதிக பால் தரும் கேட்டில் feed' என நாம் வாங்கித்தரும் தீவனங்கள், பால் வணிக சந்தைக்கு தேவையான 'consistent quality' யில் பால் கிடைக்க உதவும் கருவிகளே....

பாலை புட்டிப்பாலாக மாற்றி, பாலாடைக்கட்டிகளாக மாற்றி, நாடெங்கும் விற்பனை கொழிக்க, சத்தான உணவின்றி தவித்த நம் பச்சிளங்குழந்தைகளுக்கு வணிகம் விரித்த வலை 'செறிவூட்டப்பட்ட குழந்தை உணவுகள். மாவாய் புட்டியில் அடைத்து தருகிறோம். நாள்பட வைத்திருந்து புகட்டலாம்!' என, கறந்த பாலை உண்டு வளரவேண்டிய குழந்தைகள் புட்டி உணவுக்கு பழக்கப்பட்டனர்.

நாட்டு மாடுகள் நிலங்களில் நமக்கு தேவையற்ற களைகளையும், பயிர்களின் மிச்சங்களையும் உரமாய் மாற்றி தந்துவந்த சாணமும், கோமியமும் கலப்படமாகிப்போக, விளைச்சல் குறைய, படையெடுத்தது உர வணிகம்!

'சோடியம் போடு, பொட்டாஷ் போடு, நைட்ரஜன் சேர், விளைச்சல் பெருகும்!' என கனவுகளால் நம் விவசாயிகளின் கண்களை கட்டிப்போட்ட வணிகம் இன்றும் தொடர்கிறது, 'மழை தூறல் எதிர்பார்க்கிறோம். பூச்சிகளும் வரும். எனவே 19:19:19 தெளிக்கவும்' என இன்று டிஜிடல் வணிகமாகி கட்டிய கட்டை இன்னும் இறுக்கிக்கொண்டே போகிறது.

உரங்கள் வாங்கி காட்டும் விளைச்சல் குறைய, மறுபடி மறுபடி உரங்கள் வாங்கி, இருந்த பணத்தை இவர்கள். இழக்க, உள்ளே நுழைந்தது கடன் வணிகம்!

'நிலத்தை அடமானம் வை. பணம் தருகிறோம். வட்டி மட்டும் தவறாமல் கட்டினால் போதும். அடுத்த விளைச்சலில் நீ லட்சாதிபதி. ஆறே மாதத்தில் அசலை அடைத்து நிலத்தை திருப்பிவிடலாம்!' என கடன் பத்திரங்களில் கைரேகை பெற்று பணம் தர, அடுத்த பல வருடங்களில் நிலமும் கைவிட்டுப்போயாச்சு.

குடும்பம் மொத்தமும் வயலில் உழைத்து உயர்ந்த காலம் போய், சந்த்திகள் பஞ்சம் பிழைக்க வெளியூர்களுக்கு வெளியேற, உழவன் மட்டும் தனக்கு சொந்தமில்லாத தனது நிலத்திலேயே ஏதோ ஒரு பெருவணிகத்தின் ஊதியமற்ற வேலைக்காரனாக அந்த நிறுவனத்தின் மாடுகளை வளர்த்து பால் வளர்த்து, கறந்த பாலை லிட்டர் இருபதுக்கு பால் கறந்த கூட்டுறவு சங்க ஏஜன்டிடம் விற்று தன் வீட்டுக்குத்தேவையான பாலை லிட்டர் 25க்கு வாங்கி உண்ணும் அவலம் இன்று நித்தம் நிகழும் வாழ்வியல் துயரம்.

கடனை அடைக்க ஏதாவது செய்வோம் என்று தவிக்கும் இவர்களை குறிவைத்து பல வணிகங்கள் சதுரங்க வேட்டை நடத்த (ஈமு கோழி! லட்சங்கள்ல வருமானம்! இனிப்புத்துளசி! இனிப்பான வருமானம்! வெளிநாட்டு ஆப்பிள்! டாலர்ல வருமானம்') எஞ்சிய கோவணங்களை கொண்டே சுருக்கிட்டு தொங்கியோர் எண்ணிக்கை லட்சங்களில் என்றால், உரமென்றும் களைக்கொல்லியென்றும் பூச்சிக்கொல்லியென்றும் விஷங்களை பல வருடமாய் தம் நிலங்களில் தெளித்து இப்போது கேன்சர் நோயில் நோகும் விவசாயிகளின் எண்ணிக்கை விரைவில் கோடிகளை தொடும்...

இதுவரை எப்படியோ நிலத்தை விற்காது சமாளித்த விவசாயிகளும் சொல்லிக்கொள்ளும்படியான நிலையில் இல்லை..."வயதான காலத்தில் அந்த பாழாய்ப்போன நிலத்தை ஏன் கட்டிகிட்டு அழுவுற? வித்துட்டு பணத்த அனுப்பு. இங்க நகரத்துக்கு 30ஏ கிலோ மீட்டர் பக்கத்தில ஒரு சூப்பர் வீடு சல்லிசா வாங்கி செட்டில் ஆய்டலாம். எங்களோட வந்திடு' என வேலையிலிருக்கும் வாரிசுகள் நெருக்கும்.

இன்னும் சில ஆண்டுகளுக்குள் நமது கிராமங்களின் நிலங்களனைத்தும் பெருவணிகத்தின் பிடியில் சிக்கி, இயந்திரங்கள் விவசாயம் செய்து கால்நடை தீவனங்கள் வளர்க்கும். ஆனால் நம் ஆழ்வார் சொன்னதுபோல, 'எந்திரங்கள் உழவோட்டும். ஆனால் சாணம் போடாது. கன்றுகளும் ஈணாது'...

இந்த வணிகச்சங்கிலியை உடைத்தெறிய நாம் செய்யவேண்டியது, எஞ்சிய நம் சொந்த நிலங்களில் நாட்டு பசுக்களையும் நாட்டு காளைகளையும் வளர்ப்பதே! 

அவற்றின் உதவியோடு செய்யும் வேளாண்மை, உற்பத்தி பெருக்கும். விவசாயம் சார்ந்த அண்மைத்தொழில் பெருக்கும், வேலைவாய்ப்புகளை பெருக்கும். இன்னும் நிறைய இளைய சமுதாய மக்களை கிராமங்கள் நோக்கி தடம் மாற்றும்.

இது சத்தியம்!

இந்த மொத்த பதிவையும் சுருக்கி 35 விநாடிகள் ஓடக்கூடிய, ஒரு குறும்படத்தை இணைத்துள்ளேன். சத்தியம் நிறைவேற கடைசி படத்திலிருந்து முதல் படத்திற்கு தெளிவாய் நகர்ந்தாலே போதும்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!