வருடம் 1977.
முந்தைய வருடம் 14 படங்கள்.
இந்த வருடம் 18 படங்கள்! வயது 22 மட்டுமே!
இரவு பகலாய் உழைக்கும் தாகம், நடிப்பின்மீது மாளாத காதல், எந்த பாத்திரமானாலும் குருநாதர் இயக்கத்தில் நடிக்க தயார், தனக்கு ஸ்கோப்பே இல்லாத கதையானாலும் பரவாயில்லை!
குருநாதர் பார்த்தார், 'இவனை ஒரு வழி பண்ணிடலாம்!' என ஒரு ரோல் தந்தார்.
திருமண வாழ்வை சில வருடங்கள் சுகித்தபின்னும், மனைவி மீது மாறாத காதல் இருந்தும், கண்ணில் படும் பெண்களையெல்லாம் மயக்க எந்த எல்லையையும் மீறக்கூடிய, உண்மை அறிந்த மனைவியிடம்கூட தன் குணம் மாறாமலே வசியத்தை தொடரக்கூடிய ஒரு ரோல்.
காமம் மட்டுமே உணர்வாய் சுற்றும் இவரது வலையில் சிக்குபவர் எந்தப்பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை, அந்தப்பெண்களே மனம் மாறி வேறு திருமண பந்தத்தில் இருந்தாலும்கூட!
இவரிடம் வேலை செய்யும் குமாஸ்தா, ஒரு கட்டத்தில் இவரது பாவச்சுமைகளை சுமக்கத்தொடங்கி, நோயாளியாகி, வாழ்வு வெறுத்து, கோவில்களில் உபந்யாசம் செய்வார். அங்கும் துரத்திச்சென்ற இவரை கண்டதுமே அவருக்கு மனக்கொதிப்பு அதிகமாகி கன்னாபின்னாவென திட்டி மயங்கி சாய்வார்.
மன்மதனாய் வலம் வரும் மதுவின் மனைவி விவாகரத்து கேட்டு கேஸ் போட, மது சார்பாய் வாதாடும் வக்கீல், தனக்கு குழந்தை பிறந்தால் 108 தேங்காய் உடைப்பதாக பிள்ளையாரிடம் வேண்ட, மது அதை நிறைவேற்றுகிறார், வக்கீலின் மனைவி என்று தெரியாமலே!
இதையும் கேட்டுத்தவிக்கும் குமாஸ்தா சபிக்கிறார், ஊரில் பிறக்கும் குழந்தைகளெல்லாம் மதுவின் குழந்தைகளாகவே இருக்கப்போகிறது என!
22 வயதில் இப்போதைய சூப்பர் ஸ்டார்கள் எப்படி இருந்தார்கள்? இதுபோன்றதொரு கதையோடு அவர்களை இன்றைய உச்ச இயக்குநர்கள் யாராவது அணுகியிருந்தால், ஸ்டார்கள் தலைதெரிக்க ஓடியிருப்பார்கள், தம் இமேஜை காப்பாற்றிக்கொள்ள!
அந்த 22 வயது இளைஞன் மதுவாகவே மாறி நடத்திய லீலைகள், வேற லெவல், வேற லெவல்!
இன்றும்கூட நமது comfort zone ஐ ஓட்டையிட்டு நம்மை நெளியவைக்கும் காட்சிகள், அவற்றுள் பொதிந்த நகைச்சுவை, brilliantly unapolegetic embrace of the role by the actor and the story by the director... சமீபத்தில் Wolf of Wall Street என்கிற புகழ்பெற்ற ஹாலிவுட் படத்தில் லியார்னடோ டி காப்ரியோவின் நடிப்பு என்னை அவ்வளவாக வியக்கவைக்கவில்லை, 'அதான் நாப்பத்து நாலு வருசத்துக்கு முன்னாடியே 22 வயசிலயே இவரு பண்ணிட்டாரே!'.
இயக்குநர் தன் திறமையின்மீது வைத்திருந்த அசாத்ய நம்பிக்கை, காபரே நடனத்துக்கு மட்டுமே இந்தியில் பயன்படுத்தப்பட்ட ஒரு நடிகையை மதனின் நாயகியாக மாற்றியது!
அந்த வக்கீல் ஒரு 'கேரக்டர்'!
ஜோடி மாறிப்போன செருப்புகளை காலில் அணிந்தவண்ணம் க்ளையண்ட் மீட்டிங்கில் 'ஒரு அம்பது நிமிஷமா நான் முட்டாளாயிட்டேன், இந்த ஜோடி மாறிப்போன செருப்பால!' என தனது கால்களை மதுவிடம் காட்ட, பயத்தில் உறைந்துபோய் மது தனது ஒரு கால் செருப்பை இன்னொரு செருப்பால் மறைக்க முயலும் அந்த நொடிகளில் நாயகன் மதுவாய் கூடுபாய்ந்திருப்பதை நாமும் பயத்துடன் உணர்வோம். இந்தப்புள்ளியில்தான் நடிப்பும், இயக்கமும் நம் ரசனையும் கூட்டாய் வென்றது. இந்த ரசவாதம் நிகழ்த்த அடிநாதமாய் நடித்தவர் இன்றும் தொடர்கிறார், அன்றுபோலவே!
There are too many such moments in this movie that highlight the confluence of energies from the Guru (Director) and Sishya (actor) so am not listing any :-)
படம் முடிந்தபின்னுள் என்னுள் தொடர்ந்த வியப்பு, இனலறுவரை தொடரும் வியப்பு, ஹரிஹர சுப்ரமண்யம்! அதாங்க, அந்த குமாஸ்தா!
சிறு வேடங்கள் மட்டுமே நடிப்பவராக இருந்தாலும் அவருக்கும்கூட கதாநாயகன் அளவுக்கு முக்கியத்துவம் தந்து அவரிடமும் மிகப்பிரம்மாதமான நடிப்பை ('காமாந்தகாரா!', 'துச்சா!') வெளிக்கொணர்ந்த குரு... எந்தரோ மகானுபவலு!!!
கருத்துகள்
கருத்துரையிடுக