உனக்கும் எனக்குமான இடைவெளியில்
நாம் இதுவரை புதைத்த சொற்கள் மீது
இன்று மௌனம் வளர்ந்து நிற்கிறது அடர்பச்சையாய்.
பச்சை பாசியாகி புதிய சொற்களை இலக்கு சேரவிடாது வழுக்கி விழவைத்து தன்னுள் புதைத்துக்கொள்கிறது, புதைந்தவை மீதும் மௌனம் வளர்கிறது.
இலக்கு தைக்காத அம்புகள் உயிர் காக்கும்.
இலக்கு தைக்கா சொற்கள் உறவு காக்கும்.
மௌன வெளியை அனுபவக்காற்று அவ்வப்போது கலைத்துப்போட்டு ஒற்றையடிப்பாதை காட்டும். அதையும் நாம் சொற்கள் இட்டு நிரப்ப, அந்த பாதையும் அங்கு புதைந்துபோய் பச்சை கட்டி நிற்கும் மௌனமாய்.
ஒரு நாள் இப்படி ஒரு பாதை காட்டியபின் காற்று நிற்கக்கூடும், அன்று நாம் சொற்களேதும் வீசாமல் ஒருவரை ஒருவர் நோக்கி நடக்கக்கூடும். ஏதாவது ஒரு புள்ளியில் சந்திக்கக்கூடும்.
அந்தப்புள்ளியில் இருந்து நம் இணைபயணம் மீண்டும் தொடங்கக்கூடும்.
அது நிகழும் தருணம் முதல் மௌனமாய் நடப்போம் சொற்களேதுமின்றி.
சொற்களற்ற இடங்களில் பாசிகள் படராது, வழுக்கலும் இராது.
சொற்களால் உரமேறாத பழைய பச்சை தானே கரைந்துபோய் புதியதொரு நிலப்பரப்பு நம் கண்முன் விரியக்கூடும்.
அங்கு நாம் அன்பை விதைப்போம், அன்பு மட்டுமே விதைப்போம்.
என் அம்பறாத்தூணியிலிருந்து அம்புகளை கொட்டிவிட்டு அன்பை இட்டு நிறைக்கத்தொடங்கியுள்ளேன், அப்படி ஒரு தருணத்தை எதிர்நோக்கி.
அன்பு, அம்பு கீறிய அம்பறாத்ததூணியின் காயங்களை ஆற்றுவதை உணர்ந்த முதுகு நனைகிறது ஆனந்தமாய்.
ஆயுதங்கள் வாழ்க்கைக்கு ஆகா(து)...
--------
ரூமியின்
“Out beyond ideas of wrongdoing and
rightdoing there is a field.
I’ll meet you there.
When the soul lies down in that grass
the world is too full to talk about.”
என்கிற கவிதை தந்த இன்ஸ்பிரேஷனில், அதை தமிழில் மொழிபெயர்க்க நெடுநாட்கள் ஆவலாய் என் நினைவில் உருவேறிக்கொண்டிருந்த எண்ணம் இன்று இப்படி வெளிப்பட்டது.
Faithful translation என்பது சொல்லுக்கு சொல் மொழிபெயர்ப்பதல்ல. அது கவிதையின் ஆன்மாவை நகலெடுப்பதாய் இருக்கவேண்டும் என்ற பேரன்பின் வெளிப்பாடாகவும் இப்பதிவு இருக்கலாம் :-)
(அம்பறாத்தூணி - வில்லுக்குத்தேவையான அம்புகளை சுமக்கும் கூடு)
ரூமியின் கவிதைகள் படித்திருக்கிறீர்களா?
தேடிப்பிடித்து வாசிப்பவர்களுக்கு இவ்வுலகும் இதில் நாம் கற்பிதம் செய்த உறவுகளும் வேறொரு உன்னத பரிணாமத்தை காட்டும். வாழ்வு உங்களை ஆசீர்வதிக்கும்!
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக