நம்மை வீட்டுக்கு இட்டுச்செல்லும் சாலைகள்
வேறெங்கும் செல்வதில்லை.
கிணற்றில் நீர்வாளி நகர்த்தும் உருளை
வேறெங்கும் நகர்வதில்லை.
வெளிச்சத்திலும் இருளிலும் அங்கேயே அவ்வண்ணமே.
அவை வெறும் கருவிகள்தானே என்றால், நாமும் அவ்வாறுதானே?
உணவுச்சங்கிலியில், வாழ்வியல் சங்கிலியில், நமக்கென ஒரு இடம், ஒரு வேலை, தெளிவாக வகுத்துத்தந்திருக்கிறது இயற்கை.
சாலைகள் ஓய்வு விரும்பி புரண்டு ஒருபுறம் சாய்ந்து படுத்தாலோ, கிணற்று சகடை ஒரு திசையில் மட்டுமே சுற்ற முடிவுசெய்தாலோ அதன் படைப்பிற்கான பயன் கெட்டுவிடுமல்லவா?
இந்த தெளிவை நமக்கு தந்த அறிவு மட்டும் ஏனோ நம்மை ஒரு திசையில் மட்டுமே சுற்ற, நிலைமாறிப்படுக்க சொல்கிறதே அது ஏன்? நாமும் அவ்வாறு செய்ய முயல்கிறோமே அது ஏன்?
மனிதர்போலவே சிந்தித்து 'சுயநலம்' மட்டுமே போற்றும் ஆற்றல் இன்னொரு உயிருக்கு நம் பூமியில் கிடைத்துவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
வண்டிகளில் மாடுகளின் இடத்தில் நாம் பிணைக்கப்பட்டு வண்டி இழுக்க நேரலாம்...
நாய் எஜமானர் தூக்கி வீசும் பிஸ்கட்டை தாவி வாயில் கவ்வி விலங்குகள் போலே நான்கு 'கால்களில்' நடக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகலாம்...
பன்றிகள் நடத்தும் மாமிசக்கடைகளில் உப்பு மஞ்சள் பூசிய துண்டுகளாக தலைகீழாக தொங்கும் நிலை நேரலாம்...
நரிக்கூட்டத்தால் வன்புணர்வு செய்யப்படலாம்...
என்றெல்லாம் அச்சுறுத்தமாட்டேன். அவ்வாறு நிகழவும் நிகழாது.
நம்மைச்சுற்றி இருக்கும் அநேக உயிர்கள் நம்மைவிட மேன்மையான அறிவையும் உணர்வையும் கொண்டு இங்கு வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன, யாருக்கும் கெடுதலின்றி.
நாம்தான் ஆணவம் கண்களை மறைக்க இறுமாப்போடு நடைபோட்டுக்கொண்டிருக்கிறோம்.
சற்றே சிந்தித்துப்பார்ப்போம் வாருங்களேன்...
யானைகள் - மாபெரும் விலங்குகள். நான்கு பேர் வாழக்கூடிய நம் அடுக்குமாடி வீடுகளில் ஒரு யானைக்குடும்பம் தன் 'பின்பக்கத்தை' அமர்த்தக்கூட இடம்காணாது. மரங்களை ஒடித்து உண்டு தாம் நடக்கும் தடமெலாம் தம் கழிவின்வழியே காடுவளர்க்கும் உயிர்வளர்ப்பான் இனம் இவை.
புலிகள் - ஏனைய விலங்குகள் அஞ்சி நடுங்கும் ஆற்றலுடன் விளங்கினாலும், மனம்போல கொன்றுபுசிக்க வாய்ப்பிருந்தும் ஏனைய விலங்குகள் எவையும் புலிகளை ஒதுக்குவதில்லை. பசியாறிய புலிகளின் அருகில் மான்கள் மேய்வது இயல்பாய் நடக்கிறது. புலிகள் போன்ற வேட்டையாடிகள் இல்லா காடுகள் பரப்பு சுருங்கி விரைவில் பாலைநிலமாவது நம்மில் எத்தனைபேர் அறிவர்?
எறும்புகள் - மண்ணுள்ளே சிறு துளையிட்டு உள்ளே ஓராயிரம் சுற்றம் வாழ கோட்டை கட்டி, தேவைக்கு உணவு சேர்த்து, இயற்கை விழித்திருக்கும் நேரமெல்லாம் ஓடி உழைத்து, பயிர் தாக்கும் பூச்சிகளை உண்டு பயிர் காத்து ஏனைய உயிர் வளர்த்து வாழ்பவை.
தேனீ - தன் உணவுக்கு வேண்டியதை இயற்கை வேறெங்கோ (மலர்களுக்குள்) பொதித்துவகத்திருப்பதை உணர்வினாலே அறிந்து தேன் சேர்த்து, உணவுத்தேடலின் உப பயனாக மலர்களை கருத்தரிக்கவைத்து...
இப்படி உருவில் சிறிது பெறிது என்ற வேற்றுமையன்றி இவையனைத்தும் ஒத்திசைந்து மாபெரும் இயற்கையின் ஓயாது சுழலும் சக்கரங்களாய் தம்தம் இடத்தில் தமக்கான பணியை தெளிவாய் செய்து, கல்கூரை வீடுகள், குளிரூட்டிகள், பெருவிசை வாகனங்கள், செயற்கைக்கோள் வழி நாராசங்கள் எவையுமின்றி, நோய் நொடியின்றி, இனங்களை அழிக்கும் பெரு வெறுப்பு இன்றி, புவி நீங்கி வேறிடம் செல்லும் பேராவல் பெருமுயற்சி எதுவுமின்றி வாழ்தலே இயல்பாய் வாழ்கையில்...
நாம் மட்டும் எப்படி தடம்மாறிப்போனோம்?
பூமித்திருவிழாவில் தொலைந்துபோன குழந்தைகள் போல நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?
இது அறிவின் பிழை அல்லவா?
இதற்காகவா இயற்கை நமக்கு சிந்திக்கும் நுண்ணறிவு தந்தது?
சிந்திப்போமே...வாழ்வோமே வேறு விதமாய்...
கருத்துகள்
கருத்துரையிடுக