முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உரசிட்டு, எதிர்த்ததும் தங்கச்சி மாதிரின்னான்...

இன்றைய ஜனதா ஊரடங்கின் பகல் பொழுது ருத்ராவோடு கழிந்தது...

என்று முடிக்கும் முன்பே மஞ்சுவும், அருணும், தியாகுவும் போட்டி போட்டுக்கொண்டு சண்டை பிடித்தனர்.

இவர்களை எனக்கு சில வருடங்களாய் தெரியும். பல நாள் பழகிய நட்பு போல ஏதோ ஒரு உணர்வு.

வாருங்கள், இவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவர்களது நட்பு உங்களையும் தொற்றட்டும்!

தியாகு, ஒரு விளம்பர நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர். பெண் பித்தன். பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடங்கியே, போகப்பொருளாகவே இருக்கவேண்டும் என்று ஆணித்தரமாய் நம்புகிறவன். அதன்படியே வாழ்கிறவன்.

அருண், அவனது நெருங்கிய நண்பன். விளம்பர பட டைரக்டர். பெண்கள் பற்றிய டாகுமெண்டரி படமும் எடுப்பவன். புரட்சிகரமான கருத்துகளை வாழ்வாகவே மாற்றிக்கொண்டவன். பெண்களை சக உயிர்களாய், உயர்வாய் பார்ப்பவன். தியாகுவின் பார்வையில் அவன் சாமி படங்கள் மட்டுமே பார்க்கும் 'ர்ர்ரொம்ப ஜென்டில்மேன்'.

மஞ்சு, தியாகுவின் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு புதுமைப்பெண். தளைகள் இன்றி, தனக்கான உலகம் என்கிற பார்வையோடு வளையவருபவள். 

தியாகு அவளை அருணுக்கு உதவி செய்ய பணிக்கிறான். 

மஞ்சுவின் பெண்ணிய சிந்தனைகளும், வாழ்வியல் முரண்பாடுகளும் அருணின் முதிர்ந்த வாழ்வியலும் ஈர்க்க, நட்பாகி, நட்பு தந்த நெருக்கத்தில் தன் வாழ்க்கை வரலாற்றை பகிர்கிறாள்.

மஞ்சுவின் அம்மா கணவனுக்கு தெரியாமலே பலரோடு சுற்றுகிறவள், மஞ்சுவுக்கு தெரிந்தபின்னும்.

அம்மாவைத்தொட்ட வேற்றுக்கரம் ஒன்று மஞ்சுவையும் தொடுகிறது...

நடந்ததை பகிரும் சூழல் அறவே இல்லாத வீடு...

மஞ்சுவின் அப்பாவுக்கு ஒரு நாள் மனைவி பற்றிய உண்மை தெரிய, வளர்ந்த மகள் + சமூக நிர்பந்தங்களுக்காக மணமுறிவு தவிர்த்து நித்தம் ஒரு யுத்தமாய் போலி வாழ்வு வாழ்கிறார்.

அமைதி + பாதுகாப்பு அற்ற அவளது மனம் பேராலயம் ஒன்றை நாடுகிறது. பாதிரியார் கடவுள் பற்றிய அவளது அவநம்பிக்கையை மாற்ற முயல்கிறார். அப்போது அங்கு வரும் தனது மகனை அறிமுகம் செய்கிறார். அவருடைய வீடே அவளுக்கு ஆறுதலாகிறது. அவர் மகனது பியானோ இசை மருந்து தடவுகிறது. 

ஒரு நாள் அவள் வீட்டில் ஒரு மோசமான வாதம் அம்மாவுடன். அதுவரை அவள் மனதை அழுத்தியிருந்ந வன்மங்களை எல்லாம் திரட்டி அம்மாவை சொற்களால் துவைக்க, அம்மா அவளை வீட்டை விட்டு விரட்ட, சரணடைய பாதிரியார் வீடு வருகிறாள். அவர் இல்லாத வீட்டில் மகன் காட்டிய அன்பு, இசை, பாடல், அவளை அவனோடு படுக்கையில் தள்ளுகிறது.

ஓய்ந்து எழுந்தபின் அவனிடம் 'இங்கேயே உன்னுடனே வாழவிரும்புகிறேன்' என எண்ணத்தை பகிற, கவலை கொண்ட அவன், 'சரி. இங்கேயே இரு. ஒரு நண்பனை அவசரமாய் பார்க்க வெளியில் செல்லவேண்டும். அப்படியே உணவும் வாங்கி வருகிறேன்' என அவள் அரை மனதாய் தடுத்தும் விரைகிறான், அவளது தந்தையோடு திரும்புகிறான்...

வாழ்வின் மீதும், இறைவன் மீதும், ஆண்கள் மீதும், திருமண அமைப்பின்மீதும், சமூக போலித்தனத்தின்மீதும் அவளுக்கு உண்டான வெறுப்பு, மன சிதைவாகவும், மனக்குழப்பமாகவும் மாற, தான் யார் எனபதாக தானே கற்பிதம் செய்த சுதந்திர வாழ்வொன்றை வாழ்கிறாள், விடுதியொன்றில் தங்கிக்கொண்டு.

அருணுக்கு இந்த விவரங்கள் தெரிந்த அளவு தியாகுவுக்கு தெரியாவிட்டாலும் கோட்டுச்சித்திரம் போல (தியாகுவுக்கும்) ஓரளவு தெரிந்திருக்கிறது. தியாகுவின் சபலம் அவளை அவ்வப்போது சீண்ட முயல்வதும் தொடர்கிறது.

தியாகு தன்னிடம் அருண் பகிரும் மஞ்சு பற்றிய செய்திகளை, கவலைகளை வைத்து அருண் அவளிடம் காதல்வயப்படுவதை உணர்ந்து 'மாப்ள, அவளை நம்பாத. அவள் சஞ்சலக்காரி. அவளுக்கு தேவை ஒரு ஆண். அவ்ளோதான், தப்பும்மா...தப்பு!' என எச்சரிக்கிறான். மறுபுறம் அவனது சீண்டலும் தொடர்கிறது.

நிறுவனத்தில் சக ஊழியர்கள் அவளை போகப்பொருளாக மட்டுமே பார்ப்பதும், அத்துமீற முயன்று அவளது கோபமான சொற்களால் அடிபட்டு விலகுவதும், புறம்பேசுவதும் தொடர்கிறது. அருணின் கண்ணெதிரேயும் அரங்கேறியிருக்கிறது.

அவ்வாறான ஒரு நிகழ்வில் அவள் சிலரை கடுமையாக சாட, தற்செயலாக அங்கு வரும் தியாகு, அவளை தனியே அழைத்து, 'உன் மேல எவ்ளோ கம்ப்ளெய்ண்ட் இருக்கு? தயவு செய்து விட்டுப்போய்டு' என்கிறான். நீயேன்ன அனுப்ப? நானே போகிறேன் என்று போய்விடுகிறாள்.

வருமானம் இன்றி, வீடுமின்றி, ஹாஸ்டல் வாழ்வை எப்படி தொடர்வாள் என்ற கவலையில், அருண் அவளுக்கு உதவ தியாகுவிடம் தான் பேசுவதாய் சொல்கிறான். 'உங்களுக்கு தேவை ஒரு ஆண். அவ்ளோதான்னு பேசுறாங்க. எனக்கே கஷ்டமா இருக்கு. வேலைல கோபப்படாதீங்க. திரும்ப நான் சேத்துவிடுறேன்' என்கிறான். அவசியமில்லை. அப்படி சொல்றவங்க யார்னு சொல்லட்டுமா என்று கோபமாய் சீறுகிறாள். சொற்களால் காயம் செய்கிறாள்.

மறுநாள் அருண் தியாகுவிடம் வேண்ட, 'மாப்ள, அவ காலைலயே திரும்ப வேலைக்கு சேந்துட்டாளே! நாந்தான் சொன்னேனில்லையா?!' என்று சிரிக்கிறான்.

அருணன் தன்மானம் காயமடைகிறது. அவளிடம் பேசுகிறான், 'ஏன் இப்படி? உங்கள புரிஞ்சிக்கவே முடியலையே! நேத்தைக்கு நான் உதவ வந்தப்ப வேணான்னீங்க ஆனா இன்னைக்கே வேலைக்கு மறுபடியும் போய்ட்டீங்க. ஏன்?' என மென்மையாக வினவ, அவள் மறுபடியும் அவனை வேற்றுமைப்படுத்தி பேச, விலகிப்போய் டாகுமெண்டரி வேலையில் மூழ்கிப்போகிறான். 

ஒரு நாள் மஞ்சு அவனை சாலையில் சந்திக்கிறாள். அவன் தனது விலகியிருத்தலின் காரணத்தை தயக்கத்துடன் பகிற, அவள் அப்போதும் சொற்களில் வலிவு கூட்டி காயம் செய்து, தான் காரில் தியாகுவுடன் பார்ட்டிக்கு செல்வதை தெரிவித்து நகர்கிறாள்.

ஊரிலிருந்து அவன் அப்பாவின் கடிதம், 'யாரையாவது லவ் பண்றியா சொல்லு? கல்யாணம் முடிச்சிடலாம். இல்லைன்னா நான் பாத்த பெண்ண கட்டிக்கோ. என்னை, என் உடல்நிலையை மனசில் வச்சி உடனே முடிவெடு'.

ஊர் திரும்ப முடிவு செய்து கிளம்பும் நாள் மாலையில் மஞ்சுவின் ஹாஸ்டலுக்கு சென்று அவளது தோழியிடம் தன் பயணம் பற்றி தெரிவிக்கிறான்.

அதிர்ச்சியான தோழி 'மஞ்சுவும் உங்கள விரும்புறா!. அவள்கிட்ட உங்க மனச சொல்லிட்டீங்களா?' என வினவுகிறாள்.

'மிச்சமிருக்கிற தன்மானம் அதுக்கு இடங்கொடுக்க மாட்டேங்குது... டாகுமெண்டரி வேலை முடிஞ்சது. மஞ்சுவ புரிஞ்சிக்கவே முடியல. ஐ யூஸ்ட் டு லைக் ஹெர். ஆனா அவ கூண்டில அடைபட்ட புலி மாதிரி. வெளிய நின்னு பாக்கலாம் ஆனா கூண்டுக்குள்ள போக முடியாது' என வருந்துகிறான். 'நீங்களே சொல்லிடுங்க' என விடைபெறுகிறான்.

பின்னர் தகவல் தெரிந்த மஞ்சு திகைத்துப்போகிறாள். அவள் மறுபடியும் அலுவலகம் சேர்ந்தது தியாகுவை பழிவாங்கத்தான் என்றும் (அவன்தான் அவளைப்பற்றி ஆண்தேவை மட்டுமே வேண்டும் என்று சொன்னதை ஊகித்திருக்கிறாள்) பார்ட்டியில் அவனோடு தனிமை சூழலில் வலிய அவனை சீண்டி, அவன் நெருங்கியதும், 'எனக்கு தேவை ஒரு ஆண்தான். ஆனா அது நீயில்லை!" என அவனை அந்த சொற்களாலேயே வகிர்ந்து போட்டு விலகியதையும் தோழியிடம் பகிர்கிறாள். அருணை நினைத்து வருந்துகிறாள்.

அருண், தான் தனியாகவோ அல்லது துணையுடனோ நகரம் வருவதாகவும், தனியாக வந்தால் தியாகுவின் வீடு, துணையாக வந்தால் ஒரு தங்கும் விடுதி வேண்டும் என தியாகுவிடம் கடிதம் வழியே கேட்கிறான்.

இடையில் அருணை தேடி கண்டுபிடிக்க மஞ்சு தியாகுவிடமே உதவி கேட்கிறாள். 

'அன்னைக்கு பார்ட்டில தனிமைல ஒரு ஆண் ஒரு பெண்கிட்ட எப்படி நடந்துக்க நினைப்பானோ அப்டிதான் நான் நடந்துகிட்டேன். சுய மரியாதை உள்ள ஒரு பொண்ணு என்ன செய்வாளோ அதத்தான்  நீ செஞ்ச. சோ, இதில் வருத்தப்பட ஒண்ணுமே இல்ல. நான் உனக்கு உதவுகிறேன்' என அவளை தனது காரில் அருண் தங்கியிருக்கும் விடுதிக்கு அழைத்துச்செல்கிறான்.

விடுதியிலிருந்து திரும்பும் காரில் ட்ரைவர் சீட் அருகில் தியாகு. பின் சீட்டில் அருண், அவனது புது மனைவி, அடுத்து மஞ்சு என பயணிக்க, கனத்த மௌனம் படர்கிறது. 

மௌனம் கலைக்க மஞ்சு, புது மனைவியிடம், 'அருண் டாகுமெண்டரி எடுக்கும்போது பெண்களிடம் வழக்கமாய் ஒரு கேள்வி கேப்பாரு. இப்ப அந்த கேள்விய நான் உன்னிடம் கேட்கிறேன். பெண் சுதந்திரம் பற்றி நீ என்ன நினைக்கிற?'

கூச்சம் மற்றும் பதட்டத்துடன் அந்தப்பெண் 'அய்யோ அதெல்லாம் எனக்கு தெரியாது!' என்கிறாள்.

அயற்சியான சிரிப்போடு மஞ்சு தான் தங்கும் விடுதி அருகில் இறங்கி ஒரு பாலத்தின் கம்பிகளை பற்றிக்கொண்டு தனியே நிற்கிறாள்.

சைட் வ்யூ கண்ணாடியில் அவளை பார்த்துக்கொண்டிருக்கும் அருணின் மனதில் ஓடும் எண்ணம் நமக்கும் கேட்கிறது 'மஞ்சு இப்ப செத்திருப்பா. அவ மறபடி பிறப்பா. மறுபடி செத்துப்போவா.  இத தாங்கிக்க அவளால மட்டுந்தான் முடியும். ஏன்னா...அவள் அப்படித்தான்!'.

யாருய்யா இந்த ருத்ரா? ருத்ரய்யா?!!!!
1978 இல் ஒரு அதி முண்ணனி நாயகன், அவரது புகழை மிஞ்சப்போகும் ஒரு அதிபயங்கர வில்லன், இருவரையும் சொடக்குப்போட்டு சொற்களால் மென்று துப்பும் இரும்பு நாயகி...

கருப்பு வெள்ளையில் காண்பவர் உள்ளங்களில் உணர்ச்சி வெள்ளம், அலையலையாய்!

Soft ஆன ஹீரோ.

பட்டை போட்டு பட்டையடித்து, காணும் பெண்களில் பரத்தை தேடும் வில்லன்.

என் வழி தனி வழி என இறங்கி அடிக்கும் நாயகி.

இவர்களை மிஞ்சும் கதை, படமாக்கம், காமிரா ஷாட்ஸ்...

வசனங்கள்...வசனங்கள்...

'உரசிட்டு நான் எதிர்த்ததும் தங்கச்சி மாதிரின்னான். அதுக்கு தேவடியான்னே சொல்லிருக்கலாம்'... ஒரு சோறு பதம்!

'அம்மா வந்தாள்' என தி. ஜானகிராமன் துவைத்துப்போட்ட அம்மாவெனும் பிம்பத்திற்கு பெண் குழந்தை பிறந்திருந்தால், அது மஞ்சுவேதான்!

இந்தப்படம் இன்று தயாரித்திருந்தால் சென்சாரே தாண்டியிருக்காது. தாண்டினாலும் ஒளி பரப்பு சாதனங்களை உடைத்துவிட்டு அல்லது தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்!.

அசுர சாதகமாய் அமைந்த இந்தப்படத்தின் இரு சோகங்கள், 'சின்ன பாப்பா பெரிய பாப்பா'வாக ஆகிப்போன மஞ்சுவும், தமிழ்த்திரையுலகம் மிதித்து நகர்ந்த டைரக்டர் ருத்ரய்யாவும்! (அவரது இரண்டாவது படம் கமர்ஷியலாகி படு ஃப்ளாப். அதன்பின் அவர் டைரக்ட் செய்யவே இல்லை, இறக்கும்வரை!).

அந்த புது மனைவி... சரிதா!!

பின்னாட்களில் பட்டையை கிளப்பிய சில படங்களின், பெரிய ஆளுமைகள் இயக்கிய படங்களின் கரு இந்த ஒரே படத்தில்!

'இப்படி ஒரு வாழ்க்க வாழப்போறேன்னு தெரிஞ்சிருந்தா பொறந்த உடனயே செத்துப்போயிருப்பேன்' - சிந்துபைரவி!

'அவ ஒரு காட்டுத்தீ. ஒன்னு நா அத அணைக்கனும். இல்லன்னா அந்த நெருப்புல நான் சாகணும்...' - உயிரே!

பட்டை போட்ட ரஸ்டிக் ரஜினி - தப்புத்தாளங்கள்!

A slightly refined, unidimensional (oscialltion I mean) மஞ்சு - ஜெஸ்சி - விண்ணைத்தாண்டி வருவாயா!

பாலச்சந்தர் பயன்படுத்தியிருந்ததை விட ருத்ரய்யா அந்த இரு நாயகர்களை பயன்படுத்தியிருக்கும் விதம், இனி யாரும் தொடமுடியாத உயரத்தில் ஒரு benchmark!

நாயகன் அடக்கி வாசிக்க, எதிர்நாயகன் நக்கல் நையாண்டி பஞ்ச் டயலாக்கில் எகிறி அடிக்க, இவர்கள் இருவரும் திரையில் இணைந்து வரும் காட்சிகளெல்லாம் அதகளம்!!

Their chemistry reached crackling heights in this one and only film methinks!

If you love good films, this one is a must watch, many times over!!!'.

படத்தில் ஒரு நீளமான ஷாட்...டாகுமென்டரிக்காக நாயகன் பல தட்டு பெண்களிடம் நேர்காணல் நிகழ்த்துவார். The organicity, the spontaneity... Such a joy to watch!!!!!'






போனசாய் இளையராஜாவின் இசை மழையில், குறிப்பாய் உறவுகள் தொடர்கதை + பன்னீர் புஷ்பங்ஙளே(!) - evergreen hits!!!

பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்வை பாராட்ட யாருமில்லை...

பலபேரை சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ்பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே...

நியாயங்களோ பொதுவானவை, புரியாமல் போனதே...

இதோ முழுப்பாடல்:

பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு

ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ
இது யார் பாவம்

ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ
இது யார் சாபம்

நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது .
(பன்னீர்)

பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை
நிஜ வாழ்க்கையிலே

பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே

நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது
பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு

42 ஆண்டுகள் ஆகிப்போனாலும், இன்றும். ரிலவன்ட்டான படம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்