கத கேளு கத கேளு: கூட்டுக்குடும்பம் கூட்டுக்கு டம்பம் ஆன கத கேளு!
1980 களில் ஒரு டிபிகல் கிராமத்து வீட்டில் குறைந்தது ஏழெட்டு பெரியவர்கள், ஐந்தாறு சிறார்கள், சில கால்நடைகள், கையகல காய்கறி தோட்டம்...
நிலத்தில் உழைக்க வீட்டாரே வேலையாட்கள், எஜமானர் எல்லாம். வீட்டுத்தேவைக்காக மட்டுமே நிலத்தைக்கெடுக்காத மெனக்கெடல் நிறைந்த வாழ்வு.
சிறார்கள் பள்ளி செல்லுமுன்னரே தங்களை சுற்றியிருந்த அனைத்துயிர்களிடமிருந்தும் வாழ்க்கைக்கல்வி கற்று வளர்ந்தனர்.
Hindu Undivided Family - HUF - பல நன்மைகளையும் சில கெடுதல்களையும் (ஆணாதிக்க சமுதாயம்...) கொண்டிருந்தது.
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி வளர்ந்த இவர்களது பால்யகாலத்தில் மேலைநாடுகள் வளர்த்தெடுத்த பெருநுகர்வு வணிகத்தின் கரியநிழல் படியவில்லை.
Hindu Growth of Rate (3% GDP வளர்ச்சி, அதில் 2% விவசாயம் சார்ந்து, 1% மட்டுமே மற்றது) என மேலைநாடுகள் எள்ளி நகையாடிய இந்த 3% வளர்ச்சிகூட அந்த நாடுகளில் இன்று இல்லை....
மருத்துவம், மன நல கவுன்சிலிங், பொது நலம், இன்சூரன்ஸ், பென்ஷன் என அனைத்துமாயிருந்த HUF ஒவ்வொன்றும் ஒரு அரசு சாரா தன்னார்வு நிறுவனமாகவே இயங்கிக்கொண்டிருந்தது. செம்மை வாழ்வே இதன் இலக்காக இருந்தது, லாப நோக்கம் துளியும் இன்றி.
"இந்த மூன்றெழுத்தில் எம் மூச்சிருக்கும் அந்த 3% இல் எம் உழைப்பிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும்" என்று பாட்டாய் மாறி, பாடாய் பட்டு இன்று 'பேச்சில்' மட்டுமே இருக்கிறது.
ஒட்டகம் நுழைந்த கூடாரம் கதையாய் பணப்பயிர்களும், சந்தைப்பொருளாதாரமும், அவை சார்ந்த பேராசையும் பேரச்சமும் ( Greed and Fear) இந்தப்பெருவாழ்வுக்குள் நுழைந்து கலைத்துப்போட இன்று H, U, F மூன்றுமே சிதறிப்போய் சரத்குமாரும் வடிவேலும் தங்கப்பதக்கம் பட போஸ்டரை வைத்துக்கொண்டு மண்டையைப்பிய்த்துக்கொள்வது போன்ற நிலையில் நம்மை நிறுத்தியிருக்கின்றன.
பிரிந்தோம், சிற்றூர் வாழ்விலிருந்து.
பிரிந்தோம், மண்சார்ந்த வாழ்விலிருந்து.
பிரித்தோம் சிறார்களை பாசமான முதியோரிடமிருந்து. இன்று இரு சாராரும் அவரவர்க்கான காப்பகங்களில்.
சேர்த்தோம் பெருநுகர்வு தருணங்களை, உடல்நடக்கேடெனும் freebie ஐயும் தான்.
...
பத்துப்பேருக்கு மேலாய் வாழ்ந்த குடும்பங்கள், ஒரே ஒருமுறை வரலாறு காணாத பஞ்சத்தை எதிர்கொள்ளும் சூழல் வரவும், பஞ்ச காரணங்களை ஆயாமல் தெளியாமல், band aid தீர்வுகள் பின்னே சென்று, Demand அதிகமானால் Supply அதிகமாகவேண்டும் என்ற அடிப்படை பொருளாதார விதியை உடைத்து 'Demand side ஐ குறைத்து' பொருளாதாரத்தை சரிசெய்வோமென முழங்கி...
நாமிருவர், நமக்கிருவர்...
நாமிருவர், நமக்கு ஒருவர்....
நாமிருவர், நமக்கெதற்கு இன்னொருவர்...
என திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி...
நான் தனி ஒருவன். என் உழைப்பு மொத்தத்தையும் நானே நுகர்வேன். எனக்கெதற்கு இன்னொருவர்? அலெக்சா போதும் குடும்பம் நடத்த...
என்ற புள்ளியில் இன்று ஊசலாடிக்கொண்டிருக்கிறோம்.
வளர்ந்த நாடுகளில் பணமிருக்கு, உழைக்க ஆளில்லை. என்னதான் இயந்திரங்கள் வந்தாலும் மனித உழைப்பு தேவையான இடங்கள் இருக்கின்றனவே. எனவே, நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்வோர்க்கு வரிச்சலுகைகள், அரசே அவர்களை வளர்க்கும், நமக்கு தேவை Productivity என ஊக்கம் கொடுத்து அந்த நாடுகள் இப்போது Community Farming ஐ முன்னிறுத்தி... இன்னும் சில ஆண்டுகளில் 'ஓய்வூதியம் பெறுபவர்க்கு எங்களால் பென்ஷன் தொடர்ந்து தரமுடியுமா என்பதே சந்தேகம். வீடுநிறைய குழந்தைகள் வேண்டும். (அவர்கள் சீக்கிரமே படித்து வேலைக்கு வரவேண்டும். அப்படி வந்தால்தான் அவர்கள் வருமானத்தில் வரி வசூலித்து, சாகாமல் வயதாகிக்கொண்டேயிருக்கும் மற்றவர்களுக்கு பென்ஷன், நலத்திட்டங்கள் செயலாக்கமுடியும்). எனவே கூட்டுக்குடும்பமே மேல்' என்ற நிலைக்கு இப்பவே வந்தாச்சு.
ஒரு வருஷம் 7%, ஒரு வருஷம் 2%, ஒரு வருஷம் -3% ன்னு பொருளாதாரம் தாறுமாறாய் ஆடுதே, இதுக்கு consistent ஆய் வருஷா வருஷம் 3% எவ்வளவோ மேலாச்சே என அவர்கள் இன்னும் சில வருடங்களில் 'Hindu Rate of Growth is THE benchmark growth rate'' என அறிவிக்கப்போகிறார்கள்.
"சூப்பர்ல, நாமளும் அவங்கள பாத்து காப்பியடிச்சி அதையே செஞ்சிடலாம்!' என, தன் மாணவனது தேர்வுத்தாளை பார்த்து காப்பியடிக்கும் ஆசிரியராய் நம்மை நிறுத்தப்போவது எவை?
Produce சார்ந்த எகானமிக்கும் productivity சார்ந்த எகானமிக்கும் உள்ள மலை மடு இடைவெளியை நுகர்வு போதையில் மறந்த நமது பேராசையும் பேரச்சமுமே அவை.
மூலப்பொருள் சார்ந்த பொருளாதாரம்தான் produce சார்ந்த எகானமி. பொருள்தானே ஆதாரம்? productivity அல்லவே? productivity என்பதே சந்தை நோக்கி நம்மை மந்தைகளாய் நடக்கவைக்க கண்டுபிடிக்கப்பட்ட மந்திரம்தானே!
...
"மரங்கள் சாய்ந்து
கூடு வீழ்ந்தபின்னும்
குயில்கள் ராகம் பாடும்"
என்பதாய் கூட்டுக்குடும்ப நினைவுகள்,
தனிக்குடங்களில் (குடித்தனங்களில்) சிதறிப்போன நம் பெருவாழ்வின் குயில்ராகமாய் மட்டுமே கசிந்தோடும்.
"கூவுங்க, கூவுங்க, கூவிகிட்டேயிருங்க...இது கூட்டுக்குடும்ப மேன்மைய, அதன் இழப்பின் வலியை உணர்ந்தவர்க்கான பண்பலை அறிக்கை!"
கருத்துகள்
கருத்துரையிடுக