130 கோடி முகமுடையாள்
...
செப்புமொழி பதினெட்டுடையாள்
...
ஆனாலும் ஏன் புரிதலின்றி இருக்கிறோம்?
ஏன் சிந்தனை ஒன்றுடையாளாக முடியவில்லை?
ஏன் நம்மிடையே உள்ள இடைவெளி அதிகமாகிக்கொண்டே போகிறது (தூரம் சுருங்கிக்கொண்டே போனாலும்)?
இளவரசன் சித்தார்த்தனுக்கு பேச்சு வரவில்லை என்பதே ஊரெங்கும் பேச்சாக இருந்ததாம். அரசனும் அரசியும் மிக கவலையோடு பல முயற்சிகளை செய்து பார்த்தும் பயனில்லையாம். இயல்பாக தன்னைச்சுற்றி நடப்பது அனைத்தும் சித்தார்த்தனுக்கு புரிந்தாலும் பேச்சின்றி வளர்ந்தானாம்.
'இளவரசை பேச வைப்பவருக்கு அவர் கேட்டதெல்லாம் தருவேன்' என அரசன் முரசறிவிக்க சொல்ல, நாடெங்குமிருந்து மருத்துவர்களும், மந்திரவாதிகளும் அரண்மனை நோக்கி படையெடுத்து, முயன்றும் முடியவில்லையாம்.
கவலையை சற்றே குறைக்க எண்ணிய அரசன், கானக வேட்டை நிகழ்வுக்காக இளவரசை அழைத்துச்சென்றானாம்.
அங்கும் மௌனமாகவே இளவரசன் சுற்றிவரவும் கவலை தாளாது காட்டுமரமொன்றின் நிழலில் அரச பரிவாரங்கள் ஒதுங்கி ஓய்வெடுத்தனவாம்.
அடுத்த நாள் அதிகாலையில் ஏதோ சத்தம் கேட்டு அனைவருக்கும் முன்னர் எழுந்த சித்தார்த்தன் சத்தம் வந்த திசை தேடி நடந்தானாம்.
ஒரு அடர்மரக்கிளையில் பறவைக்கூடொன்றில் தாய்ப்பறவை கொண்டுவந்த உணவை உண்ண போட்டி போட்டு குஞ்சுகள் சத்தமிடுவதைக்கண்டதும் சித்தார்த்தன் மனம் பதைத்ததாம். ஏனெனில். மரத்தடியில் ஒரு புதரில் வேடன் ஒருவன் வில்லில் நாணேந்தி இலக்கு தேடுவதும் அவன் கண்ணில் பட்டதாம்.
பறவையின் குரல் காட்டிய திசையில் வேடன் அம்பு எய்ய, தாய்ப்பறவை அடிபட்டு குருதி சிந்தி விழ, குஞ்சுகள் ஓலமிட, பெருங்குரலெடுத்து அழுதவண்ணம் சித்தார்த்தன் ஓடிச்சென்று தாய்ப்பறவயை மடியில் இட்டு புலம்பினானாம், 'பேசாமலேயே இருந்திருக்கலாமே... பேசாமலேயே இருந்திருக்கலாமே' என.
வேடன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து அரசனைத்தேடி ஓடினானாம், 'அரசே, அரசே, வாழ்க உன் புகழ்! இளவரசை நான் பேசவைத்துவிட்டேன், நான் பேசவைத்துவிட்டேன்!'.
அரசனுக்கு நம்பிக்கையில்லையாம். ஆனால். வேடன் உண்மை சொல்வதாகவே தோன்றியதாம்.
"இளவரசனுக்கு பேச்சு வந்தது உண்மையானால், இங்கு எம் அனைவர் முன்னும் பேச வை. நீ கேட்பதை தருகிறேன்!' என்றானாம்.
பெருமரத்தடியில் சபை கூடியதாம்.
வேடன் சித்தார்த்தனிடம், 'இளவரசே, அந்த மரத்தடியில் என்ன நிகழ்ந்தது என தயைகூர்ந்து சொல்லுங்கள்' என பணிவாய் கேட்டானாம்.
சோகம் ததும்ப சித்தார்த்தன் மௌனமாய் அமர்ந்திருந்தானாம்.
சில மணி நேரம் வேடன் எவ்வளவோ மன்றாடிக்கேட்டும் சித்தார்த்தன் மௌனமாகவே அமர்ந்திருக்க, பொறுமை இழந்து சினந்த அரசன் கட்டளையிட்டானாம், 'யாரங்கே? இந்த வேடன் இப்படி பலர்முன் பொய்யுரைத்து என் இளவலை அவமானப்படுத்தி விட்டானே! இவனை இப்போதே இங்கேயே சிரச்சேதம் செய்யுங்கள்!'
வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்பிய வேடனை காவலர்கள் தரதரவென இழுத்துச்செல்ல, இவனது மரணபய ஓலம் இளவரசன் மனதைத்துளைக்க, மெல்ல தனது இருக்கையிலிருந்து இறங்கிய சித்தார்த்தன் அந்த வேடனிடம் சென்று கனிவாய், கருணை தோய்ந்த கண்களோடு சொன்னானாம், 'பேசாமலேயே இருந்திருக்கலாமே...:.
எல்லோரும் பேசாமலே இருந்திருந்தால் உலகம் மேன்மையாக இருந்திருக்குமோ?
கருத்துகள்
கருத்துரையிடுக