கோழியொன்று கையிலே பையுடன் ரேஷன் கடைக்கு புறப்பட்டது.
எதிரில் வந்த பலநாள் நட்புக்களுடன் வணக்கம் பறிமாறிக்கொண்டே வந்ததில் லேட் ஆகிப்போச்சி.
ரேஷன் கடையை இழுத்து மூடி கடைக்காரனும் புறப்பட்டு போயாச்சி. பொட்டு அரிசி கூட தரையில் சிந்தாமல் டெக்னாலஜி துணையோடு பட்டுவாடா நடப்பதால் துடைத்து எடுக்கவும் ஒன்றுமில்லை.
இனி அடுத்த வாரம்தான் அரிசி கிடைக்கும் என்ற நினைவில் கொண்டையை தொங்கப்போட்டுக்கொண்டு வெயிலில் உஸ் உஸ் என காற்றை ஊதிக்கொண்டு அலுவலகம் நோக்கி நடையை கட்டியது.
நிழலுக்கு ஒதுங்க மரங்களில்லை. தார் சாலைகள் அதன் கால் தோலை வறுக்க, வயிற்றை பசி கிள்ள, தள்ளாடி தள்ளாடி நடைபோட்டது.
சாலையில் விரையும் வாகனங்களில் செல்பவர் எவரும் கோழியை கவனித்ததாக தெரியவில்லை. கழுத்தில் தொங்கும் அடையாள அட்டைகூட சுமக்கமுடியாத கனமாக ஆகிப்போன உணர்வில் எட்டி நடை போட்டது.
கண்கள் செருகி கால்கள் பிண்ணி தரையில் சாய்ந்து மயக்கமாகிப்போன அந்த நொடிகளில் அதன் நினைவுப்படலத்தில் விரிந்தது காட்சியொன்று...
'மரங்கள் அடர்ந்த பச்சை நிலம். விதம் விதமான வண்ணங்களில் பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மலர்கள், பழங்கள்...
அட! பறவைகளில் என்னைப்போலவே பல கோழிகள்!!
இது என்ன விந்தை?! கால் விரல்களால் தரையைக்கிளறி...எதையோ அலகால் எடுத்து...வாயில் இட்டு உண்கிறதே! அதன் பின்னான அதன் நடைகூட மகிழ்வாய் இருக்கிறதே! என்னைப்போன்ற கோழிகள் அனைத்தும் இதையே வேலைபோல செய்கின்றனவே! எனக்கு மட்டும் ஏன் இந்த வித்தை தெரியவில்லை????'
நினைவு மீண்ட கோழியைச்சுற்றிலும் ஏராளமான கருவிகள், சத்தமிடும், விளக்குகள் பல நிறங்களில் மின்னும் கருவிகள்...
அதற்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்த நிபுணர், கவலையோடு நெற்றி சுருக்கி தனது கைபேசி நோட்டில் பதிந்தார் இப்படி; 'நமது மரபு மாற்றல் வைத்திய கண்டுபிடிப்பில் ஏதோ பிழை நேர்ந்திருக்கிறது. இல்லையென்றால் இந்த நோயாளிக்கு தன் பூர்வாசிரம நினைவுகள் ஏன் முற்றிலும் அழியாமல் எஞ்சியிருக்கிறது,? இது தவறாச்சே!...'
இந்த தவறு வெளியே தெரிந்தால் தன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சரிந்துவிடுமே என்ற கவலை உந்தித்தள்ள, அவர் அந்த கோழியை உற்றுநோக்கி, தாழ்வான குரலில் சொல்லத்துவங்கினார்; 'மிஸ்டர் கோழி, உங்களது எண்ண அலைகளில் கொடிய வைரஸ் ஒன்று நுழைந்துவிட்டது. அது மனப்பிறழ்வுகளை நிசம் போலவே உணரவைத்து குழப்பும். நான் சில மருந்துகள் தருகிறேன். இரு வாரங்களில் குணப்படுத்தி விடுவேன். அதுவரை இங்கேயே ஓய்வில் இருங்கள். உங்களது இன்ஷ்யூரன்சு விபரங்களை சரிபார்த்துவிட்டேன். உங்களுக்கு மூன்றுவேளை அரிசி உணவு தருவதற்கு சேர்த்தே இன்ஸ்யூர் செய்யப்பட்டிருக்கிறீர்கள். கவலை வேண்டாம். விரைவில் வீடு திரும்பலாம்'.
அரிசி உணவு கிடைக்கப்போவது மகிழ்ச்சி தந்தாலும் தரை கிளற தவித்த கால் விரல்களை என்ன செய்வதென்ற புதுக்கவலையுடன் படுக்கையில் தலைசாய்த்து சுவர்த்திரையில் புதிய உச்ச நட்சத்திரங்கள் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் ப்ரதயேக காட்சியை கண்டுகளிக்க தயாரானது கோழி.
"இது என்ன கண்றாவி கதை?" என கோபம் கொண்டு குப்பைத்தொட்டியில் கைபேசியை தூக்கி எறிந்துவிடாதீர்கள். நான் சொல்லப்போவதை ஒரே ஒரு நிமிடம் பொறுமை காத்து கேளுங்கள். பின்னர் தூக்கி எறியுங்கள், எதை வேண்டுமானாலும்.
அந்தக்கோழி நீங்கள்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக