சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் யானைகளும், புலிகளும், சிங்கங்களும், மான்களும் க்வாரண்டைன் செய்யப்பட்டுள்ளன.
பி.பி நோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பூனைகள் கூடுவாஞ்சேரியில் திடீர் மரணம்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட முதலைகள் சென்னை முதலைப்பண்ணையில் உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கின்றன.
ஏங்க இது மாதிரி செய்திகள் ஒன்று கூட வர்றதில்ல?
மிருகங்கள அடிச்சி விழ வைக்க, மாமிசத்த கிழிச்சி சாப்பிட, வேற விலங்குகள் / பறவைகள்கிட்டேர்ந்து தன்ன காப்பாத்திக்க கூரிய நகங்களோ, முள்ளுள்ள வாலோ, மரம் ஏறித்தொங்க வாலோ அல்லது நிறம் மாறும் தன்மையோ எதுவுமே இல்லாத ஏங்க இந்த மனுசப்படைப்பு?
விலங்கு பறவை பூச்சிக்கெல்லாம் மேல சொன்ன ஆற்றலை எல்லாம் படைச்ச கடவுளுங்க, இதெல்லாம் யோசிக்கத்தானே நமக்கு சிந்திக்கிற தன்மையை தந்திருக்காங்க?
நாம வரம்பு இல்லாத, தேவையில்லாத சிந்தனைகள், கண்டுபிடிப்புகள்னு எங்கயோ போயி, அடிபட்டு இடிபட்டு மருந்து மாத்திரைகள் உதவியோட உசுர வளக்குற நிலைமைக்கு ஆளாயிட்டோமே.
ஊனை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனேன்னு சொன்ன திருமூலரே இன்னைக்கு இருந்தா மூல வியாதியால, முடக்குவாதத்தால முடங்கியிருப்பார்...
கண்டதைத்தின்றால் குண்டனாவாய்ங்கிறது பழமொழி.
கண்டதைத்தின்றால் நோயாளியாவாய்ங்கிறது அதுக்கும் முந்தின முதுமொழி.
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: மருந்து / Medicine
குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
விளக்கம் வேணுமா என்ன?
வள்ளுவம் வகுத்த உணவு முறையிலிருந்து வெகுதூரம் விலகிப்போய் கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சு தின்னத்தொடங்கி, இன்று நம் உடலோடு ஒட்டி உரவாடும் அனைத்துப்பொருட்களும் நஞ்சாகிப்போனாலும் (காலை பற்பசை முதல் இரவு கொசுவிரட்டி வரை) விடாது தின்போம் என விரட்டிப்பிடித்து கப்பலிலும் விமானத்திலும் தொலைதேச உணவுப்பழக்கங்களை இறக்குமதி செய்து கொழுப்பேறிப்போய், 'கொரானாவாவது குரானாவாவது? நம்மள எல்லாம் தொடமுடியாதப்பேய்!' என நகைத்து 'அனைத்தையும்' தின்று அன்பின்றி உறங்கும் நம்மைக்கண்டு வள்ளுவன் சினம் கொள்வது நியாயம்தானே!
நம்மிடம் சிக்கி உடல்படும்பாட்டை கண்ட வள்ளுனுக்கே மிகுசீற்றமென்றால், உடலுள்ளே உயிர்ப்புடனிருக்கும் சீவனைப்போற்றிய மூலனின் நிலை?
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்" என்ற திருமூலனுக்கு தெரியுமா நம் சீவனுள்ளே சிக்கிய சிவம் படும்பாட்டை?!
(Image maybe under copyright by respective unknown creator)
கருத்துகள்
கருத்துரையிடுக