இருட்டுப்பெருமரமெங்கும் தீப்பொறி சிதறலாய்
சிற்றூரின் வயல்நடுவே முன்னிரவில்
காண்பவரின் கனவுக்கு பாதையிட்டு
இருளில் கரைந்துபோகும் வால்வெளிச்சம்,
ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம்...
கண்டு கடந்துபோன நொடியில்
வாழ்ந்து முடித்த வாழ்வின்
மிச்சம் ஊறிய கருவிழிகளில்
உடைந்த நிலவாய் உறைந்துமின்னும் இன்னுமந்த வால்வெளிச்சம்.
காலமென்ற ஒன்றே
மின்மினியாய்
மின்னிமறைந்த பேரிருளில்
கரைந்துபோன ஒற்றைமரம்
விடிந்ததும் தன்னைத்தேடி
தன்னையடைந்து தனியே
தன்னந்தனியே மின்மினிக்காய்
காத்திருக்கும் மீண்டுமங்கே.
என்ன முயன்றும் அதேமரம் ஆகாது அம்மரம்.
என்ன முயன்றும் மின்மினியாகாது சூரியனும், ஒருபோதும்.
இருளும் ஒளியும் கூடிக்கலந்து
கலைந்து பிரிந்து மீண்டும் கூடிக்கலந்து...
ஆடிச்செல்லும் காலத்தின் பெருநடனம்.
இருளும் ஒளியும் கூடிக்கலந்து
கலைந்து பிரிந்து மீண்டும் கூடிக்கலந்து...
ஆடிச்செல்லும் காலத்தின் பெருநடனம்.
x
கருத்துகள்
கருத்துரையிடுக