மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்
மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
...
இதை விட்டு மலையில கடுகை தேடினால் காண்பதெல்லாம் கடுகாய் தெரியுதே, கண்ணு எரியுதே...
காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
காணும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்...
கொட்டடா ஜெய பேரிகை கொட்டடா!
பாரதிக்கு இருந்த பார்வை, அனைத்துயிரையும் நேசித்த பார்வை.
அன்றும் இன்றும் காக்கை குருவியிடம் அடையாள அட்டைகள் இல்லை.
இன்றைய நம் மண்ணின் மைந்தர்க்கு சக மனிதர்கள் மீதான நம்பிக்கைக்கு ஏனோ குறிப்பிட்ட வண்ணங்கள் தேவை என்றானது...
குறிப்பிட்ட அடையாளமுள்ளவருக்கு குடியுரிமை கிடையாது என்ற நிலைப்பாட்டைவிட அவர்கள் நம் மண்ணில் இத்தனை ஆண்டுகள் இருந்திருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பித்து குடியுரிமை பெறலாம் என்று மாற்றலாமே... அவர்களது வேற்று வண்ண ஆத்மார்த்த நட்புகளின் உத்தரவாதம் வேண்டுமென்றாலும் கேட்டுப்பெறலாமே?
இந்தியாவிலிருந்து மேலை நாடுகளில் குடியுரிமை பெற்று அங்கு வாழ்பவர்களுக்கு இந்திய குடிமக்கள் அட்டை வழங்க இயல்கிறது. ஆனால் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு / வங்கத்திற்கு தேசம் பிரிந்தபோது வேறு வழியின்றி பிரிந்தவர்களின் சந்ததியினர் இங்கு மீண்டும் குடியேறி வாழ்ந்து வந்தால் மட்டும் இந்த உரிமையை மறுப்போம் என்பது எந்த விதத்தில் நியாயம்?
நாட்டின் பொதுச்சொத்தான இயற்கை வளங்களை சுரண்டுபவர்களும் தேசத்துரோகிகள்தானே அடையாள அட்டைகள் பல வைத்திருந்தாலும்! இவர்களுக்கு வண்ணபேதமின்று குடியுரிமை தவிர்க்கலாமே?
இந்தியாவில் இந்துக்களின் விகிதாசாரம் மற்றும் இஸ்லாமியர்களின் விகிதாசாரம் அடிக்கடி விவாதிக்கப்படும் ஒன்று. ஆனால் இந்தியர்களில் கடந்த பல ஆண்டுகளில் அமெரிக்க மோகம் கொண்டு / மேலை நாடுகளின் மோகம் கொண்டு நாடே வேண்டாம் என உதறிச்சென்று அங்கு புதிதாய் வருபவரிடம் 'உங்கள் நாடு இன்னும் முன்னேறவே இல்லையே' என அந்நியமாய் அங்கலாய்ப்பு செய்பவரின் விகிதாசாரம் அறிவோமா நாம்? இவர்களுக்கு ஏன் தரவேண்டும் குடிமக்கள் அட்டை?
இந்தக்கேள்விகளுக்கு நேர்மையான விடையளிப்பதை தவிர்த்து கொட்டப்படும் பேரிகை எதுவும் ஜெயபேரிகை ஆகாது... ஆகவே ஆகாது.
கருத்துகள்
கருத்துரையிடுக