ஹாலிவுட் ஒரிஜினல்களை தழுவிய இந்தி படத்தின் காப்பி என்றாலும் நன்றி நவில்வதென்னவோ ஹிந்தி காப்பிக்கு மட்டுமே!
Gran Torino
A Few Good Men
இந்த இரு படங்களையும் புத்திசாலித்தனமாய் இணைத்து Pink என இந்தி(ய)மயமாக்கியவர் சூரஜ் சர்க்கார்.
தமிழில் டைரக்டர் வினோத் தல அஜித்துக்காக சில மாறுதல்கள் செய்திருக்கிறார்.
கதையின் ஒன்லைனர்:
ஒரு பெண், "வேண்டாம்!" என்றால்... வேண்டாம், வேண்டவே வேண்டாம்!
அமிதாப் இந்தியில் சொன்னதை அஜித் தமிழில் சொல்லியிருக்கிறார்.
பல நல்ல மாற்றங்களை இந்தப்படம் தமிழுக்கு கொண்டுவந்துள்ளது. நாயகனை முன்னிறுத்தாமல் கதையை முன்னிறுத்தியது,
ஒரு மாஸ் நாயகன் இதை முன்னெடுத்து செவ்வனே செய்தி சொல்லியிருப்பது,
பஞ்ச் டயலாக்குகளை வெகுவாக குறைத்திருப்பது,
Focus குறையாது கதை நகர்வது
ரியலிசம், ஆசம் லெவலில்.
படத்தின் மிக கனமான காட்சி, படத்தின் இறுதியில், கோர்ட் ட்ராமாவெல்லாம் முடிந்தபின், அந்த காக்கிச்சட்டையின் ஒற்றை கை குலுக்கலில் குவிகிறது, நாயகன் மீது அல்ல, கை கொடுப்பவரின் மீது!
இந்தியில் அமிதாப் தொட்ட உயரத்தை நம்ம அஜித் தொடுவாரா? இந்தி ஓல்ட் ஆங்ங்ரி மேன் ஒரிஜினல் பெட்டரா, தமிழ் தல நேர்கொண்டு பார்க்கும் தழுவல் பெட்டரா? என பல விவாதங்கள் சூடு பறக்க நடக்கப்போகிறது. இவற்றை புறம் தள்ளி, இந்த ஒரிஜினல் கதையின் ஒரிஜினல்களை பார்க்க விரும்புபவர்களுக்கு அவற்றை சில வரிகளில் அறிமுகம் செய்கிறேன்.
க்ரான் டொரினோ - Gran Torino
Angry old man of World Cinema - க்ளின்ட் ஈஸ்ட்வுட். அமெரிக்காவின் ஒரு பெருநகர் அருகில் புறநகரில் தனியே வசிக்கிறார், சிடுமூஞ்சிக்காரர், தன் வின்டேஜ் கார் Ford Gran Torino தான் அவரது வாழ்வின் பிடிப்பு. சீனர்கள் ஆசியர்கள் அவரது வசிப்பிடத்தருகில் பெருகி வருவதை வெறுப்பவர், தனிமை விரும்பி.
ஒரு நாள் ஒரு சீன பதின்பருவ சிறுவன் ஒரு முரட்டு கும்பலின் வற்புறுத்தலால் (அவர்களுடன் அவன் சேர விரும்பியதால் அவனது 'தரத்தை' நிரூபிக்க) அவரது காரை திருட முயல்கிறான். துரத்தி விடுகிறார். காரணம் அறிகிறார்.அவனது குடும்பத்தையும் இனத்தையும் அறிகிறார். ஒரு uneasy நட்பு மலர்கிறது.
முரட்டு கும்பல் அவனை தொல்லைப்படுத்துகிறது. ஒரு நாள் அவனது தங்கைக்கு ஒரு கொடுந்துன்பம் நேர்கிறது. எது அறம் என்பதில் தெளிவான பார்வை கொண்ட தாத்தா என்ன முயற்சிகள் எடுக்கிறார்? என்ன தீர்வு கிடைக்கிறது? என்பதை எந்த சமரசங்களும் மேச்சோ ஹீரோயிசமும் இன்றி படமாக்கியிருக்கும் விதம் உன்னதம். இறுதிக்காட்சிகள் நம் ஆன்மாவை உலுக்கும், இந்த தாத்தாவின் பேராண்மை பிம்பத்தை பல மடங்கு உயர்த்தும்.
எ ஃப்யூ குட் மென் - A Few Good Men
பொறி பறக்கும் கோர்ட் காட்சிகள், எனது நேர்மை உனது நேர்மையை விட பெரிது என்பதான மோதல்கள், மகா நடிகர்கள்...
டேனியல் கஃபி (டாம் க்ரூஸ்) கோர்ட்டில் நிரூபிக்க விரும்புவது கலோனல் நாதன் ஜெஸ்ஸப் (ஜேக் நிக்கல்சன்) தன் மரைன் சோல்ஜர் சாந்தியாகோவுக்கு 'Code Red' எனப்படும் தண்டனை கொடுத்தார் என்பதை.
இவர்களுடன் டெமி மூர், கீஃபர் சதர்லாண்ட், க்யூபா குடிங் ஜீனியர், கேவின் பேகன் என பெரும் நட்சத்திர பட்டாளம் பொறி பறக்க நடத்தும் விசாரணை... வேற லெவல்.
இந்த இரு படங்களையும் புத்திசாலித்தனமாய் இணைத்து இந்தியமயமாக்கியவர் சூரஜ் சர்க்கார்(இந்தியில்). தமிழில் டைரக்டர் வினோத் தல அஜித்துக்காக சில மாறுதல்கள் செய்திருக்கிறார்.
தல தன் ரூட்ட மட்டுமல்ல, இந்திய உச்ச நட்சத்திரங்களின் ரூட்டையே மாற்ற முயன்றிருக்கிறார். வாழ்த்துக்கள்.
யுவன் சங்கர் ராஜா - தனது இசைப்பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல். படம் முடிந்த பின்னரும் இறுதி பிண்ணனி இசை மனதில் தொடர்கிறதே...
கமல் சில ஆண்டுகள் முன் தனது படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாதை புகழ்ந்து கூறியது இது, 'இளையராஜாவின் சிம்மாசனத்தில் அமரும் தகுதி இவருக்கு இருக்கிறது!'.
இல்லை கமல் சார், யுவன் அந்த சிம்மாசனத்தில் அமரும் நாள் தொலைவிலில்லை.
பின் குறிப்பு: அந்த சிம்மாசனம் என்றும் ராஜாவுக்கே. அமர்வது யாராயிருந்தாலும் அங்கு அவரது மடி மீதுதான் அமர்வர் :-)
கருத்துகள்
கருத்துரையிடுக