இலங்கை தமிழ் வானொலியில் ஏக் தோ தீன் ல ல லா அநேகமாய் நான் முதல் முதலாய் கேட்ட அவருடைய பாடலாக இருக்கலாம்.
பலப்பல பாடல்கள், யார் யாரோ இசையமைத்தவை, கேட்டபோது எல்லாம் என் மனதைக்கவரந்த பாடல்களுக்கென்னவோ இசை அவருடையதாகத்தான் இருந்தது.
பின்னர் டேப் ரெக்கார்டர் அறிமுகமாகி HMV நிறுவனம் மட்டுமே வெளியிட்ட அவரது படப்பாடல்களை நண்பர்களிடம் இரவல் பெற்று கேட்டோம்.
மொக்கை வானொலி நிலையங்களில்கூட செய்திகள் வாசிக்கும் முன் விழும் சில நிமிட இடைவெளியை இவரது பாடல் ஒன்றை கொண்டு நிரப்பிய இரவுகள், எங்களுக்கு நிரம்பிய இரவுகள்.
Sony, TDK, T-Series என ப்ளாங்க் டேப்புகள் வாங்கி, காகிதங்களில் பாடல்களை எழுதி ஒலிப்பதிவுக்கடைகளில் தந்தால் இருபது ரூபாயில் 25 முதல் 30 பாடல்கள் பதிந்து தருவார்கள்.
சில வாரங்கள் திரும்பத்திரும்ப கேட்டு, பிறகு அடுத்த லிஸ்டோடு மீள்பதிவுக்காய் அதே கேசட்டை எடுத்துக்கொண்டு ஓடுவோம் கடைகளுக்கு, அதுவரையில் ரீல் அந்துபோகாமல் இருந்தால்.
காதல், சோகம், கோபம், காமம், நன்றி என எந்த உணர்வை தூக்கலாக தனிமையில் உணர விரும்பினாலும் அங்கும் அவரது இசை ஊதுபத்தி புகை போல கசிந்தால்தான் அந்த உணர்வும் மணம் பெறும்.
கிடார் கற்றுக்கொண்ட நட்புகளின் தேசிய கீதம் அவரது பாடலாகவே இருந்தது.
டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியில் டேப் தேய்ந்து சி.டி ஆகி, சி.டி நைந்து 'நினைவுத்துண்டுகளாகவும்' (memory cards) 'நினைவு அடுக்களாகவும்' (hard disks) ஆகி, உருவில் வளர்ந்து தேய்ந்து... இன்று 'நகக்கண்'ணில் (flash card) நாலாயிரம் பாடலென வளர்ந்து, 2 ட்ராக், 24 பிட், 5.1 ஸ்டீரியோ, 7.1 என வலைத்தளமெங்கும் 24*7 கசிந்தவண்ணமுள்ளது.
ஒலி பெருக்கிகளிலிருந்து வெடித்து புறப்பட்டு இன்று பாட்டிலில் அடைபட்ட பூதமாகி 'காது மூடி'களுக்குள் சுருங்கி மகிழ்விக்கும்போதும் மகிழ்வூட்டுவதென்னவோ அவரது இசை மட்டுமே.
தனியனாய் நடக்கையில், கார், ரயில், விமானப்பயணங்களில்... கூடவே கசியும் இவரது இசை, என் ஆன்மாவின் அங்கமாகிப்போய் இப்போதெல்லாம் நினைத்த நொடியில் மனதில் இவருடைய ஏதோவொரு பாடலிசையோ பிஜிஎம்மோ தானே கசிந்து என் பொழுதுகளை நனைத்தாலும் பல ஆண்டுகள் முன் டவுன் பேருந்து ஒன்றில் கிராமம் செல்லும் சாலையில் தலை முடியை காற்று கலைக்க, புதுப்புடவை மல்லிகைப்பூ வாசனை ஆட்களால் பிதுங்கிய வாகனத்தை நிறைக்க, திடீரென கிளம்பிய "அடி ஆத்தாடீ இளமனசொன்னு ரெக்க கட்டி... இவ மேகம் ஆக யாரோ காரணம்" கேட்டதும் கிடைத்த இன்பம்...
கருத்துகள்
கருத்துரையிடுக