நேத்து,
கவிதையில போச்சி, யாரும் துணையில்லை...
நேற்று உலக கவிதைகள் தினமாம்!
விழியில் பதிந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு நல்ல எழுத்துக்கு மட்டுமே வாய்க்கும்; கவிதையோ, கதையோ, சொலவடையோ!
லொடலொடவென பேசுபவரை பற்றி ஒரு நாட்டுப்புறக்கதை 'ஓலப்பாயில ஒண்ணுக்கிருந்தவன் மாதிரி' எனும்போது, கரிசல் கிராமத்தை கி. ரா வர்ணிக்கையில், 'இரவைப்பொத்தலிட்டன மாடுகளின் சூடான பெருமூச்சு' எனும்போது... கிடைக்கும் வாசிப்பனுபவம், உணர்வனுபவம்... வேற லெவல்.
நல்ல கவிதைகள், கவிதைகளில் மட்டும் ஒளிந்திருக்கவில்லை :-)
குடத்தில் தண்ணீர் தளும்பத்தளும்ப முன்னே நடைபோடும் பெண்ணின் குடத்தில் தளும்பியது மனசு என்ற ஆத்மாநாமின் கவிதை போன்ற இன்னொன்றை இன்றுவரை தேடிக்கொண்டே இருக்கிறேன் தமிழில் (கல்யாண்ஜியின் 'இருந்து என்ன ஆகப்போகிறது? இறந்துபார்க்கலாம். இறந்து என்ன ஆகப்போகிறது? இருந்து பார்க்கலாம்' is a close second).
சிக்கனமான சொற்கட்டமைப்பில் வெடித்துச்சிதறும் உணர்வுகளை குவிப்பது ஒரு சிலருக்கு மட்டுமே வசப்படுகிறது... மானபங்கப்படுத்தப்பட்டு தரையில் அலங்கோலமாய் கிடக்கும் பெண் பற்றிய பல பரிமாண உணர்வுகளை நமக்குள் கடத்த தி. ஜானகிராமன் எழுதியது, 'துப்பிய எச்சில் போல கிடந்தாள்'. இன்றும் படிக்கையில் வலி உணர்வோம்...
காற்றில் உதிரும் சிறகை பிரமிளின் கவிதையில் உணர்வது பேரனுபவம்... இதோ, அனுபவியுங்கள் :-)
"சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது"
பின் குறிப்பு: இந்த பதிவின் தலைப்பு, இளங்காத்து வீசுதே என்ற அற்புத கவிதையில் இருந்து உருவி, மாற்றம் செய்யப்பட்ட ஒற்றை வரி :-)
கருத்துகள்
கருத்துரையிடுக